ராயல் என்பீல்டின் புதுமுக பைக்கிற்கு இவ்ளோ டிமாண்டா! இப்பவே புக் பண்ணிருங்க காத்திருப்பு காலம் கம்மியா இருக்கு
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குரில்லா 450 (Guerrilla 450) பைக்கை ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம் சமீபத்திலேயே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதற்கு தற்போது இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான விற்பனை வரவேற்பு நிலவிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக ராயல் என்பீல்டு குவரில்லா 450 பைக்கின் காத்திருப்பு காலம் பற்றிய தகவலே தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, இந்த பைக்கை இப்போது புக் செய்தால் எப்போது கைகளுக்கு வந்து சேரும் என்பது பற்றிய விபரங்களே வெளியாகி இருக்கின்றது.
ஒவ்வொரு நகரத்திலும் ஒவ்வொரு மாதிரியான காத்திருப்பு காலமே நிலவுகின்றது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி அதிகபட்ச காத்திருப்பு காலத்தை சென்னை, மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களே கொண்டிருக்கின்றன என்பது தெரிய வந்துள்ளது. இந்த மூன்று நகரங்களிலும் 45 நாட்களே காத்திருப்பு காலமாக இந்த பைக்கிற்கு நிலவுகின்றது.

எனவே இந்த மூன்று நகர வாசிகளும் இப்போதைய நிலவரப்படி ராயல் என்பீல்டு குரில்லா 450 பைக்கை இப்போது புக் செய்தால் அதை கைகளில் பெற குறைந்தபட்சம் 45 நாட்களாவது காத்திருக்க வேண்டும் என்பதே தெரிய வந்திருக்கின்றது. அதேவேளையில், புனேவில் 10 முதல் 15 நாட்கள் காத்திருப்பு காலம் நிலவுவதும் தெரிய வந்துள்ளது.
ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் ஷெர்பா பிளாட்பாரத்தை தழுவி உருவாக்கி இரண்டாவது மோட்டார்சைக்கிளே குரில்லா 450 ஆகும். இந்த பைக்கிற்கு தற்போது புக்கிங் பணிகள் மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ரூ. 10 ஆயிரம் முன் தொகையில் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன.
இந்த பைக்கின் டெலிவரி பணிகள் புனேவிலேயே முதலில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாடர்ன் மற்றும் ரெட்ரோ அம்சங்கள் நிறைந்த ஸ்ட்ரீட் நேக்கட் (Street Naked) பைக்கை ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் வாங்கிக் கொள்ள முடியும். அனலாக் (Analogue), டேஷ் (Dash) மற்றும் ஃப்ளாஷ் (Flash) ஆகியவையே அவை ஆகும்.
இதில், அனலாக்-கே ஆரம்ப நிலை தேர்வாகும். இதற்கே ரூ. 2.39 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து, டேஷ்க்கு ரூ. 2.49 லட்சமும், ஃப்ளாஷ்க்கு ரூ. 2.54 லட்சமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
இந்த பைக்கில் பொருத்தப்பட்டு இருக்கும் 452 சிசி ஷெர்பா மோட்டார், அதிகபட்சமாக 39.50 பிஎச்பி பவரை 8,000 ஆர்பிஎம்மிலும், 40 என்எம் டார்க்கை 5,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த எஞ்சினுடன் இணைக்கப்பட்டு உள்ளது. இது லிட்டருக்கு 29.5 கிமீ வரையில் மைலேஜ் தரும் என கூறப்படுகின்றது.
டபிள்யூஎம்டிசி (world motorcycle test cycle) வெளியிட்டு இருக்கும் மேைலேஜ் விபரங்களே இது ஆகும். வடிவ ஹெட்லைட், வட்ட வடிவ இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், நீர் துளி வடிவிலான ஃப்யூவல் டேங்க், ஒற்றை துண்டு நீளமான அமைப்புடைய இருக்கை, சிறிய வால் பகுதி எல்இடி லைட் ஆகியவை வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த அம்சங்களே குரில்லா 450 பைக்கை ஸ்ட்ரீட் நேக்கட் ரக பைக்காக காண்பிக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் 450 பைக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டதே இந்த பைக் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இந்த புதுமுக பைக்கை ராயல் என்பீல்டு விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் அமைந்திருக்கின்றன. விரைவில் இந்த காத்திருப்பு காலம் மாதக் கணக்கில் நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








