இந்தியாவே காத்து கிடந்த ராயல் என்பீல்டு பைக் அறிமுகம்... விலை இவ்ளோதானா... போட்டி நிறுவனங்களுக்கு 'செக்'
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு குரில்லா 450 (Royal Enfield Guerrilla 450). இந்த பைக் தற்போது அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு ஸ்ட்ரீட் நேக்கட் ரக மோட்டார்சைக்கிள் (Street Naked Motorcycle) ஆகும். இந்திய சந்தையில், டிரையம்ப் ஸ்பீடு 400 (Triumph Speed 400) மற்றும் ஹீரோ மேவ்ரிக் 440 (Hero Mavrick 440) ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக, ராயல் என்பீல்டு குரில்லா 450 பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த பைக்கில், 452 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 39.50 பிஹெச்பி பவரையும், 5,500 ஆர்பிஎம்மில் 40 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு குரில்லா 450 பைக்கின் வீல் பேஸ் நீளம் 1,440 மிமீ ஆக உள்ளது. அதே நேரத்தில் இந்த பைக்கின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 169 மிமீ ஆக இருக்கிறது. எடை 185 கிலோ ஆகும். போட்டி மாடலான டிரையம்ப் ஸ்பீடு 400 உடன் ஒப்பிடும்போது, ராயல் என்பீல்டு குரில்லா 450 பைக்கின் எடை அதிகம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
பிரேக்கிங்கை பொறுத்தவரையில் இந்த பைக்கின் முன் பகுதியில் ட்யூயல் பிஸ்டன் காலிபர் உடன் 310 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் சிங்கிள் பிஸ்டன் காலிபர் உடன் 270 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வசதியும் இந்த பைக்கில் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது.

அதாவது ராயல் என்பீல்டு குரில்லா 450 பைக்கின் அனைத்து வேரியண்ட்களிலும் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வசதி இருக்கும். ராயல் என்பீல்டு குரில்லா 450 பைக்கானது, அனலாக், டேஷ் மற்றும் ஃப்ளாஷ் என மொத்தம் 3 வேரியண்ட்களில் (Variants) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் அனலாக் வேரியண்ட்டின் விலை 2.39 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டேஷ் வேரியண்ட்டின் விலை 2.49 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறுபக்கம் ஃப்ளாஷ் வேரியண்ட்டின் விலை 2.54 லட்ச ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் ஹீரோ மேவ்ரிக் 440 ஆகிய பைக்குகளுக்கு, ராயல் என்பீல்டு குரில்லா 450 வடிவில் மிகப்பெரிய சவால் காத்து கொண்டுள்ளது என நாங்கள் கருதுகிறோம். இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறக்கப்பட்டுள்ளதால், இது விற்பனையில் சாதிக்கலாம்.
எல்இடி ஹெட்லைட், கண்ணீர் துளி வடிவிலான பெட்ரோல் டேங்க் (11 லிட்டர் கொள்ளளவு) மற்றும் ரைடு மோடுகள் ஆகியவை, ராயல் என்பீல்டு குரில்லா 450 பைக்கின் சிறப்பம்சங்களாக கருதப்படுகின்றன. சப்-500 சிசி செக்மெண்ட்டில் ஒரு புதிய பைக்கை எதிர்பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு இது நல்ல ஆப்ஷனாக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications








