அமெரிக்கா vs இந்தியா... நம்ம ஊர் ராயல் என்ஃபீல்டு பைக்குக்கு சரியான போட்டி என்றால் அது இதுதான்!!
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனத்தில் இருந்து புத்தம் புதிய மோட்டார்சைக்கிளாக குரில்லா 450 (Guerrilla 450) சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுவாகவே, ராயல் என்ஃபீல்டு பைக் புதியதாக விற்பனைக்கு வந்தாலே மார்க்கெட்டில் அது மிகுந்த கவனத்தை பெறுவது வழக்கம். ஏனெனில், அந்த அளவிற்கு ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு ரசிகர்கள் ஏராளமானோர் இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதுமே உள்ளனர். இந்த வகையில், புதிய குரில்லா 450 பைக்கின் அறிமுகமும் பல தரப்பு மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ராயல் என்ஃபீல்டின் புதிய ஸ்ட்ரீட் நேக்கட் மோட்டார்சைக்கிளாக விளங்கும் குரில்லா 450-க்கு விற்பனையில் போட்டியளிக்கும் விதமாக நிறைய பைக்குகள் மற்ற பிராண்ட்களில் இருந்து விற்பனையில் உள்ளன. அவற்றுள் ஒன்று, ஹார்லி-டேவிட்சனின் எக்ஸ்440 ஆகும். ஹீரோ மோட்டோகார்ப் உடன் இணைந்து இந்த பைக்கை ஹார்லி-டேவிட்சன் உருவாக்கியுள்ளது. இந்த பைக்கிற்கும், புதிய குரில்லா 450 பைக்கிற்கும் இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றி இனி பார்க்கலாம்.

தோற்றம்: குரில்லா 450 மற்றும் எக்ஸ்440 இவை இரண்டுமே ஸ்ட்ரீட் நேக்கட் பைக்குகள் ஆகும். அதாவது, இவற்றின் உடலில் அதிகமாக பேனல்கள் இல்லை. எக்ஸ்440 உடன் ஒப்பிடுகையில், குரில்லா 450 பைக்கில் பின் இருக்கை ஆனது நன்கு மேல்நோக்கி வழங்கப்பட்டுள்ளது. இதனால், பின் சக்கரத்தில் இருந்து இருக்கை பொசிஷன் நன்கு மேலாக அமைந்திருப்பது மட்டுமின்றி, பைக்கிற்கும் மாடர்ன் தோற்றம் கிடைத்துள்ளது. மறுப்பக்கம், எக்ஸ்440 பைக் கிளாசிக்கான தோற்றத்தில் உள்ளது.
பரிமாண அளவுகள்: ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்கின் நீளம் 2,168மிமீ ஆகும். குரில்லா 450 பைக்கை காட்டிலும் இது 78மிமீ, அதாவது அரை அடி ஸ்கேலில் பாதி அதிகம் ஆகும். அதேபோல், உயரம் மற்றும் அகலத்திலும் புதிய குரில்லா 450 பைக்கை விட எக்ஸ்440 அதிகமாக உள்ளது. ஆக, எக்ஸ்440 பைக் பார்ப்பதற்கு கொஞ்சம் பிரம்மாண்டமாக இருக்கும். இதற்கேற்ப எடையிலும் இந்த ஹார்லி-டேவிட்சன் பைக் 5.5 கிலோ அதிகமாக உள்ளது.

என்ஜின்: ஹிமாலயன் 450 பைக்கில் பொருத்தப்படும் அதே 452சிசி என்ஜின் தான் புதிய குரில்லா 450 பைக்கிலும் வழங்கப்பட்டுள்ளது. ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்கில் 440சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. குரில்லாவில் வழங்கப்படுவது லிக்யுடு-கூல்டு என்ஜின் ஆகும். அதுவே, எக்ஸ்440 பைக்கில் ஏர்/ஆயில்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றலில் இரண்டிற்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. குரில்லா 450 பைக்கில் 12 பிஎச்பி இயக்க ஆற்றலை அதிகமாக பெறலாம்.
சஸ்பென்ஷன் & பிரேக்ஸ்: ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்கில் முன்பக்கத்தில் 43மிமீ-இல் தலைக்கீழான கயாபா ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் ட்வின்ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்படுகின்றன. குரில்லா 450 பைக்கில் முன்பக்கத்தில் அதே 43மிமீ-இல் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோஷாக் அப்சார்பர்களும் வழங்கப்பட்டுள்ளன. இரு பைக்குகளிலும் சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகள் தான் வழங்கப்படுகின்றன. ஆனால், பிரேக்குகளின் அளவுகளில் வித்தியாசம் உள்ளது.
தொழிற்நுட்ப வசதிகள்: ஹார்லி-டேவிட்சன் பைக்கில் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஓடோமீட்டர், ஸ்பீடோமீட்டர் என அனைத்தும் டிஜிட்டல் தரத்தில் கொடுக்கப்படுகிறது. ஆனால், குரில்லாவில் ஓடோமீட்டரை மட்டுமே டிஜிட்டல் தரத்தில் பெற முடியும். ஆனால், இந்த குறையை மறைக்கும் விதத்தில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதி குரில்லா 450 பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், ரைட் மோட்களை மாற்றிக் கொள்வதற்கான ஸ்விட்ச்களும் குரில்லாவில் இடம்பெற்றுள்ளன.
விலைகள்: புதிய ராயல் என்ஃபீல்டு குரில்லா 450 பைக் அனலாக், டேஷ், ஃப்ளாஷ் என மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.2.39 லட்சம், ரூ.2.49 லட்சம், ரூ.2.54 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்கும் டெனிம், விவிட் மற்றும் எஸ் என 3 விதமான வேரியண்ட்களில் விற்கப்படுகிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.2,39,500, ரூ.2,59,500, ரூ.2,79,500 ஆக உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த இரு பைக்குகளுக்கும் இடையே விலையில் பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை. இருப்பினும், எல்லா விஷயங்களிலும் ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக் சிறந்ததாக உள்ளது. நாம் இந்த தொகுப்பில் எக்ஸ்440 பைக்கின் எண்ட்ரீ-லெவல் டெனிம் வேரியண்ட்டை பற்றி மட்டுமே பார்த்துள்ளோம். டாப் எஸ் வேரியண்ட்டில் இன்னும் அதிகமான தொழிற்நுட்ப அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், இந்த ஹார்லி-டேவிட்சன் பைக்கிற்கு ராயல் என்ஃபீல்டு குரில்லா 450 எந்த விதத்திலும் சளைத்தது கிடையாது.


Click it and Unblock the Notifications








