வட அமெரிக்காவில் கால் தடம் பதித்த தமிழக தயாரிப்பு!.. போட்டியாளர்கள் இந்நேரம் மிரண்டு போயிருப்பாங்க!
தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம் அதன் புகழ்பெற்ற ஹிமாலயன் 450 (Himalayan 450) பைக் மாடலை இந்தியா, ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து புதிதாக வேறொரு நாட்டிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பைக் மாடல் இந்தியாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் சென்ற ஆண்டு நவம்பரிலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையிலேயே சுமார் 9 மாதங்கள் ஆகிவிட்டநிலையில், இப்போது புதிய நாடு ஒன்றில் ஹிமாலயன் 450 தன்னுடைய கால் தடத்தைப் பதித்து இருக்கின்றது.
அமெரிக்காவிலேயே இந்த பைக்கை ராயல் என்பீல்டு விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஹிமாலயன் 450 நான்கு விதமான நிற தேர்வுகளில் அமெரிக்க சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும். காஸா பிரவுன் (Kaza Brown), ஹேண்லே பிளாக் (Hanle Black), ஸ்லேட் ஹிமாலயன் சால்ட் (Slate Himalayan Salt) மற்றும் சால்டி பாப்பி ப்ளூ (Slate Poppy Blue) ஆகியவையே அந்த நிற தேர்வுகள் ஆகும்.

அதேவேளையில், இந்தியாவில் இந்த பைக் ஐந்து விதமான வண்ண தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. கேமெட் ஒயிட் (Kamet White) எனும் நிற தேர்வே இந்தியாவில் கூடுதலாக கிடைக்கின்றது. இந்த தேர்வு பின்னாளில் அமெரிக்க சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காசா பிரவுண் 5,799 அமெரிக்க டாலர்களுக்கும், ஹேண்லே பிளாக் 5,999 அமெரிக்க டாலர்களுக்கும் விற்பனைக்குக் கிடைக்கும். இதேபோல், ஸ்லேட் ஹிமாலயன் சால்ட் மற்றும் ஸ்லேட் பாப்பி ப்ளூ ஆகியவற்றிற்கு 5,899 அமெிரக்க டாலர்கள் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. அதாவது, அமெரிக்க சந்தையில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 ரூ. 4.86 லட்சம் தொடங்கி ரூ. 5.02 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படும் என்பது தெரிய வந்திருக்கின்றது.
மேலும், இந்திய சந்தையில் விற்பனையில் உள்ளதைப் போலவே இந்த பைக்கும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் எந்தவொரு பெரிய மாற்றமும் இன்றியே இந்த பைக்கை ராயல் என்பீல்டு அமெரிக்க சந்தையிலும் விற்பனைக்கக் களமிறக்கியிருக்கின்றது. இந்திய சந்தையில் ஹிமாலயன் 450, 452 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உடன் விற்கப்படுகின்றது.
இது ஓர் புத்தம் புதிய லிக்யூடு கூல்டு, டூயல் ஓவர்ஹெட், கேம்ஷாப்ட், 4 வால்வுகள் கொண்ட மோட்டார் ஆகும். இந்த மோட்டார் அதிகபட்சமாக 39.4 பிஎச்பி பவரையும், 40 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். கியர்பாக்ஸைப் பொருத்த வரை ஸ்லிப்பர் கிளட்ச் அம்சம் கொண்ட 6 ஸ்பீடு யூனிட்டே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
மேலும், சிறந்த சஸ்பென்ஷனுக்காக இந்த பைக்கில் ஸ்போர்ட்ஸ் பைக்குகளில் காணப்படும் 43 மிமீ யுஎஸ்டி (USD) ஃபோர்க் முன் பக்கத்திலும், பின் பக்கத்தில் மோனோஷாக்கும் பொருத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன், மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக முன் பக்க வீலில் 320 மிமீ டிஸ்க்கும், பின் பக்க வீலில் 270 மிமீ டிஸ்க்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது.
மேலும், பைப்ரே காலிபர்கள் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ்-ம் வழங்கப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து டிஜிட்டல் அம்சங்களும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது பலதரப்பட்ட சிறப்பு தகவல்களை வழங்கும் வசதிக் கொண்டது.
அந்தவகையில், திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவலை வழங்கும் வசதியையும் இது கொண்டிருக்கின்றது. இதுதவிர, ரைடு-பை-ஒயர் தொழில்நுட்பம், ப்ளூடூத் இணைப்பு, செல்போனுக்கு வரும் தகவலை அறியும் வசதி, இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக்கிற்கு கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதைபோலவே வட அமெரிக்க சந்தையிலும் நல்ல வரவேற்பு ஹிமாலயன் 450-க்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏற்கனவே இந்த பைக்கிற்கு வட அமெரிக்காவில் புக்கிங் பணிகள் தொடங்கிவிட்டதாகவும், மிக சிறப்பான புக்கிங் எண்ணிக்கை இந்த பைக் பெற்றுக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








