புது பைக்குகளை மட்டுமே விற்றால் அதிகம் லாபத்தை ஈட்ட முடியாது.. யூஸ்டு பைக்குகளையும் விற்கும் ராயல் என்பீல்டு!
புதிய வாகனங்களை மட்டுமே நம்பி இருந்தால் வேலைக்கு ஆளாகாது என கூறி பழைய (Pre-Owned Motorcycle) வாகனங்களை விற்பனைச் செய்யும் பணியில் களமிறங்கி இருக்கின்றது முன்னணி இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று. அது வேறு யாரும் இல்லைங்க சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனமே அதுவாகும். இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களைக் கவர வேண்டும் என்பதற்காக புதுமுக வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
இதன் அடிப்படையிலேயே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த நிறுவனம் இரண்டு புதுமுக எலெக்ட்ரிக் பைக் (Electric Bike) மாடல்களை அது நாட்டில் அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பதைக் கருத்தில் கொண்டே இந்த வேலையை அது பார்த்தது.

Image: reown இந்த நிலையிலேயே தற்போது இந்தியாவில் யூஸ்டு (செகண்ட் ஹேண்ட்) வாகனங்களுக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதை உணர்ந்து, ராயல் என்பீல்டு நிறுவனம் இந்த பிசினஸிலும் தான் களமிறங்குவதாக அறிவித்திருக்கின்றது. இதன் அடிப்படையில் நிறுவனம் 'ரீ-ஓவ்ன்' (REOWN) எனும் நிறுவனத்தையே தற்போது புதிதாக தொடங்கி இருக்கின்றது.
இந்த பிராண்டின்கீழ் நிறுவனம் செகண்டு ஹேண்டு டூ-வீலர்களை மட்டுமே விற்பனைச் செய்யும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இங்கு பழைய வாகனங்களை விற்று புதிய வாகனங்களுக்கும் வாடிக்கையாளர்களால் தங்களை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. மேலும், இந்த சேவை நாட்டின் 236 நகரங்களிலும் கிடைக்கும் என ராயல் என்பீல்டு தெரிவித்து உள்ளது.
இதற்காக 475 டீலர்ஷிப்புகளை அது ஏற்கனவே தயார் செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஆகையால், வரும் நாட்களில் புதிய வாகனங்கள் விற்பனையை போலவே யூஸ்டு வாகனங்கள் விற்பனையிலும் ராயல் என்பீல்டு கொடிக்கட்டி பறக்கும் என தெரிகின்றது. வாடிக்கையாளர்களைக் கவர வேண்டும் என்பதற்காக, தங்களின் ரீஓவ்ன்-இன் கீழ் விற்பனைக்குக் கிடைக்கும் அனைத்து செகண்ட் ஹேண்ட் வாகனங்களும் தரமானதாக இருக்கும் என ராயல் என்பீல்டு கூறியிருக்கின்றது.
இதற்காக, பல்வேறு ஆய்வுகளுக்கு அவ்வாகனங்கள் உட்படுத்தப்படும் எனவும் அது தெரிவித்திருக்கின்றது. இத்துடன், லாயல்டி திட்டத்துடன் கூடிய எக்ஸ்சேஞ்ச் பிளானையும் ராயல் என்பீல்டு நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது. மேலும், வாடிக்கையாளர்களின் சுலப நுகர்தலுக்காக ஆன்லைன் மற்றும் ஆஃப்-லைன் என இரண்டின் வாயிலாகவும், வாகனங்களை வாங்க, விற்க மற்றும் எக்ஸ்சேஞ்ச் செய்யும் வசதிகளை ராயல் என்பீல்டு ஏற்படுத்தி இருக்கின்றது.
குறிப்பாக, உங்கள் பழைய வாகனத்தை இலவசமாக தர ஆய்வுகளுக்கு உட்படுத்தி, அவர்கள் கூறும் மதிப்பு உங்களுக்கு திருப்திகரமாக இருந்தால் மட்டுமே விற்பனைச் செய்யலாம் என்றும் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. ஆகையால், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ரீ-ஓவ்ன்-க்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் பயன்படுத்திய வாகன விற்பனையில் களமிறங்கி முதல் வாகன உற்பத்தி நிறுவனம் ராயல் என்பீல்டு கிடையாது. மஹிந்திரா, மாருதி சுஸுகி என முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள்கூட ஏற்கனவே பயன்படுத்திய வாகன விற்பனையில் கொடிக்கட்டி பறந்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ராயல் என்பீல்டு ரீ-ஓவ்ன் வாயிலாக தன்னுடைய புதிய பயணத்தைத் தொடங்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாட்டில் புதிய வாகனங்களுக்கு கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே மிக அமோகமான வரவேற்பு யூஸ்டு வாகனங்களுக்கும் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த சூழலைக் கருத்தில் கொண்ட இந்த பிரிவிலும் தன்னுடைய ராஜ்ஜியத்தை நிலை நாட்ட வேண்டும் என்கிற நோக்கில் ராயல் என்பீல்டு தன்னுடைய காலடி தடத்தை யூஸ்டு வாகன பிரிவில் பதித்திருக்கின்றது. இதற்கு என்ன மாதிரியான வரவேற்புக் கிடைக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








