ஒரே நேரத்தில் 3 இ-ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்.. அதுல ஒன்ன ஆர்டிஓ பதிவு இல்லாமலே ரோட்ல ஓட்டிக்க முடியும்!
சோகுடோ எலெக்ட்ரிக் (Sokudo Electric), இந்த பிராண்ட் பெயர் நம்மில் பலருக்கு புதிதாக தெரியலாம். ஆனால், இந்த பிராண்ட் இந்தியாவில் நீண்ட காலமாக இயங்கி வருகின்றது. இது ஓர் இந்திய நிறுவனமும் கூட. நிறுவனத்தின் ஆலை உபியிலேயே அமைந்திருக்கின்றது. இத்துடன், இதன் அலுவலகம் உபி மற்றும் மபி ஆகிய இரண்டு மாநிலங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கின்றது.
இந்த நிறுவனமே தற்போது இந்தியாவில் ஒரே நாளில் மூன்று விதமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்குக் கொண்டு வந்து அதிரடி காட்டியிருக்கின்றது. செலக்ட் 2.2 (Select 2.2), ரேபிட் 2.2 (Rapid 2.2) மற்றும் பிளஸ் (Plus) இந்த வாகனத்தில் லித்தியம் (Lithium) அயன் பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இதை சாலையில் வைத்து பயன்படுத்தவே எந்த ஆவணமும் தேவையில்லை என்கின்றது சோகுடோ எலெக்ட்ரிக் நிறுவனம். இது ஓர் குறைந்த வேகத்தில் இயங்கும் திறன் கொண்ட ஸ்கூட்டர் என கூறப்படுகின்றது. எனவேதான் இதற்கு ஆர்டிஓ பதிவு தேவையில்லை என கூறப்படுகின்றது. ஆனால், இதன் உச்சகட்ட வேகம் என்ன என்பதை நிறுவனம் வெளியிடவில்லை.
அதேவேளையில், பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் பிரஷ்லெஸ் டிசி ஹப் மோட்டார், ஓர் முழு சார்ஜில் 70கிமீ முதல் 105 கிமீ வரையில் மைலேஜ் தரும் 60V லீட் லித்தியம் பேட்டரி பேக் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, இந்த வாகனத்திற்கு 30 ஆயிரம் கிமீ மோட்டார் வாரண்டியும், 3 ஆண்டுகள் பேட்டரி பேக்கிற்கான வாரண்டியும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

இத்துடன், இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 4-5 மணி நேரங்களே போதுமானதாக இருக்கின்றது. இதில் சிறந்த பிரேக்கிங்கிற்காக முன் பக்கத்தில் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் டயர்களும் ட்யூப்லெஸ்ஸாகக் காட்சியளிக்கின்றது. இத்தகைய சிறந்த அம்சங்கள் தாங்கிய இந்த மாடலுக்கு ரூ. 59,889 விலையாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.
இதற்கு அடுத்தபடியாக சோகுடோவின் 2.2 மாடல் இருக்கின்றது. இதற்கு ரூ. 79,889 நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இதுவும் வெறும் எக்ஸ்-ஷோரும் விலை மட்டுமே ஆகும். இந்த வாகனத்தில் 2300W திறன் கொண்ட பிரஷ்லெஸ் டிசி ஹப் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் முழு சார்ஜில் 100 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கிமீ ஆகும். இதில் பிரத்யேகமாக ரிவர்ஸ் வசதியும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன் ஈகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று விதமான ரைடிங் மோட்களும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் அதிக ரேஞ்ஜ் திறனுக்காக 2.2 kWh எல்எஃப்பி பேட்டரி பேக்கே வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதனையும் 4-5 மணி நேரங்களில் நம்மால் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. பிரேக்கிங், வீல் மற்றும் டயர் ஆகியவற்றஇல் பிளஸ் உடன் இந்த வாகனம் ஒத்துபோகின்றதை நம்மால் பார்க்க முடிகின்றது. இந்த இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களைக் காட்டிலும் சற்றே காஸ்ட்லியானதாகவும் மற்றும் அதிக சிறப்புகளைத் தாங்கியதாகவும் சோகுடோவின் செலக்ட் 2.2 மாடல் இருக்கின்றது.

இதற்கு அறிமுகமாக ரூ. 85,889 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். அதேவேளையில், அதிக கவர்ச்சியான தோற்றம் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவும் இது காட்சியளிக்கின்றது. ஓர் முழு சார்ஜில் 100 கிமீட்டருக்கும் அதிகமான ரேஞ்ஜையும், மணிக்கு 70 கிமீ வேகத்திலும் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த வாகனங்களை இந்தியாவின் 15-20 சதவீத மின்சார இரண்டு வாகன சந்தையைக் கைப்பற்றும் பொருட்டே சோகுடோ விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. மேலும், இந்த வாகனத்தின் உருவாக்கத்தில் 3.5 மிமீ முதல் 5.25 மிமீ அளவுள்ள ஏபிஎஸ் பிளாஸ்டிக் பாடி பேனல்களையே அது பயன்படுத்தி இருக்கின்றது. இதுதவிர, கேன்பஸ் கன்னெக்டர்கள், ரியல் டைம் மானிட்டரிங் செய்யும் அம்சம் ஆகியவையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நல்ல டிமாண்ட் உள்ளது. இந்த மாதிரியான சூழலிலேயே தன்னுடைய மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது சோகுடோ எலெக்ட்ரிக். ஆனால், இந்த பிராண்டின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெல்லி, குஜராத், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது.


Click it and Unblock the Notifications









