சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
சுஸுகி மோட்டார்சைக்கிள் (Suzuki Motorcycle) நிறுவனம் அதன் பிரபலமான ஹயபுஸா (Hayabusa) பைக்கின் புதிய ஸ்பெஷல் எடிசனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்பெஷல் சுஸுகி ஹயபுஸா பைக்கின் சிறப்புகள் என்னென்ன? இந்த பைக்கின் விலை எவ்வளவு? என்பது குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
ஜப்பானை சேர்ந்த சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் 1954இல் இருந்து சுமார் 70 வருடங்களாக உலகின் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்த 70 வருடங்களில் பல்வேறு தரமான பைக்குகளை சுஸுகி உருவாக்கி உள்ளது. அதில் ஒன்று தான், ஹயபுஸா ஆகும். முதன்முதலாக 1998ஆம் ஆண்டில் ஜெர்மனியில் முதல் ஹயபுஸா பைக்கை சுஸுகி நிறுவனம் பொது உலகிற்கு வெளிக்காட்டியது.

ஜெர்மனியில் இண்டர்மோட் என்கிற கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தப்பட்ட முதல் சுஸுகி ஹயபுஸா பைக் கண்காட்சிக்கு வந்திருந்த அனைத்து பார்வையாளர்களையும் முதல் பார்வையிலேயே வெகுவாக கவர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், முதல் ஹயபுஸா பைக் விற்பனைக்கு வந்தது என்னமோ அதற்கடுத்த 1999ஆம் ஆண்டில்தான். ஆரம்பத்தில், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய மார்க்கெட்டில் மட்டுமே ஹயபுஸா விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த வகையில், முதல் ஜென்ரேஷன் ஹயபுஸா பைக் விற்பனைக்கு வந்து 25 வருடங்கள் உருண்டோடிவிட்டன. இந்த 25 வருடங்களில், நம் இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளில் சுஸுகி ஹயபுஸா பைக்குகள் விற்பனையை துவங்கிவிட்டன. இன்னும் சொல்லப் போனால், நிறைய நாடுகளில் சுஸுகி நிறுவனத்துக்கு ஒரு அடையாளமாக ஹயபுஸா பைக்குகள் விளங்குகின்றன.

இத்தகைய ஹயபுஸா பைக்குகள் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, ஹயபுஸா 25ஆம் ஆண்டு நிறைவு எடிசன் பைக்கை சுஸுகி உருவாக்கி உள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன் ஹயபுஸா பைக் ஜப்பானில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இப்போதுதான் இந்தியாவில் ஹயபுஸா 25ஆம் ஆண்டு நிறைவு எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வழக்கமான ஹயபுஸா பைக்கை காட்டிலும் செயல்படுதிறன் மிக்கதாக உருவாக்கப்பட்டுள்ள புதிய ஹயபுஸா 25ஆம் ஆண்டு நிறைவு எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.17.70 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது வழக்கமான ஹயபுஸா பைக்கின் விலையை காட்டிலும் ஏறக்குறைய ரூ.75 ஆயிரம் அதிகமாகும். இந்த விலை அதிகரிப்புக்கு ஏற்ப பல்வேறு சிறப்பம்சங்கள் புதிய ஹயபுஸா பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் முக்கியமாக, புதிய ஹயபுஸா 25வது ஆனிவர்சரி எடிசன் பைக் கவர்ச்சிக்கரமான கருப்பு & ஆரஞ்ச் நிறங்கள் கலந்த கலவையில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. பைக்கின் சைடு மஃப்லரில் 25வது ஆண்டு நிறைவு எடிசன் என்பதை குறிக்கும் வகையில் பேட்ஜ் இடம்பெற்றுள்ளது. அதேபோல், பெட்ரோல் டேங்கில் 'Suzuki' எழுத்துகள் 3டி பிளாக் ஃபினிஷிங்கில் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய ஹயபுஸா பைக்கில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க்குகளும், பின் பக்கத்தில் மேம்படுத்தப்பட்ட ஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் அலாய் சக்கரங்களில் பவர்ஃபுல்லான டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. எக்ஸாஸ்ட் குழாய் கண்ணை கவரும் வகையில் க்ரோம் ஃபினிஷிங்கில் உள்ளது. மற்றப்படி, பைக்கின் 1,340சிசி, லிக்யுடு-கூல்டு DOHC என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சூப்பர் பைக்குகளை வாங்குவோர் சற்று குறைவுதான். இருப்பினும், சுஸுகி ஹயபுஸா ஆனது சூப்பர் பைக் என்பதையும் தாண்டி இந்தியர்களுடன் நன்கு பிணைப்புடன் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, சுமார் 48 நாடுகளில் சுஸுகி ஹயபுஸா பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இப்படிப்பட்ட பைக்கின் 25 ஆண்டுகால நிறைவை கொண்டாடும் விதமாக புதிய ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதில் எந்த தவறும் இல்லை.


Click it and Unblock the Notifications









