சுஸுகி 2-வீலர்ஸுக்கு ஜப்பானில் கூட இவ்வளவு வரவேற்பு கிடைக்காது!! இந்தியாவில் ஃபேக்ட்ரி நிற்காமல் ஓடுது!
சுஸுகி மோட்டார்சைக்கிள் (Suzuki Motorcycle) நிறுவனம் இந்தியாவில் 2-வீலர்கள் உற்பத்தியில் புதிய மைல்கல்லை கடந்துள்ளது. புதியதாக அப்படி என்ன சாதனையை சுஸுகி செய்துள்ளது என்பதையும், இந்தியாவில் சுஸுகி நிறுவனம் தற்சமயம் விற்பனை செய்துக் கொண்டிருக்கும் 2-வீலர்களை பற்றியும் முழுமையாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆனது இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாக உள்ளது. ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்துக்கு இந்தியாவில் ஹரியானா மாநிலம், குருகிராமில் தொழிற்சாலை உள்ளது.

சுஸுகி தொழிற்சாலையில் வருடத்திற்கு சராசரியாக 10 இலட்சம் இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், இந்த முறை கொஞ்சம் விரைவாகவே 10 இலட்ச 2-வீலர்களை சுஸுகி உற்பத்தி செய்துள்ளது. அதாவது, கடந்த 2023 ஏப்ரல் மாதத்தில் இருந்து துவங்கிய நடப்பு 2023-24ஆம் நிதியாண்டில் 2-வீலர்கள் உற்பத்தியில் 10 இலட்சத்தை சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் கடந்துள்ளது.
வருகிற மார்ச் 31ஆம் தேதியோடு நடப்பு 2023-24ஆம் நிதியாண்டு நிறைவடைவதற்கு இன்னும் 1 மாதத்திற்கும் மேலான காலம் மீதம் இருக்கும் நிலையில், அதற்குள்ளாக 10 இலட்ச 2-வீலர்களை சுஸுகி உற்பத்தி செய்துள்ளது. சுஸுகியின் ஹரியானா தொழிற்சாலையில் இருந்து 10 இலட்சமாவது சுஸுகி 2-வீலராக சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர் வெளியே வந்துள்ளது. இதனை, தொழிற்சாலையில் பலூன்களை கட்டி ஓர் சிறிய நிகழ்ச்சி போல் சுஸுகி நிறுவனம் கொண்டாடி உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் உற்பத்திக்கான நிர்வாக துணை தலைவர் ராஜ்னேஷ் குமார் மெஹ்தா, "சுஸுகி இரு சக்கர வாகனங்களுக்கான உள்நாட்டு சந்தை மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் இருந்து தொடர்ந்து அதிகரித்துவரும் தேவையை தக்க வைத்துக் கொள்வதற்காக, எங்களது வழக்கமான லிமிட்டான ஆண்டுக்கு 10 இலட்ச யூனிட்களை தாண்டிவிட்டோம்" என்றார்.
இந்திய மார்க்கெட்டில் முதல்முறையாக 2006ஆம் ஆண்டில் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் நுழைந்தது. அப்போதில் இருந்து இப்போதுவரையில் சுஸுகி நிறுவனம் தனது 2-வீலர் மார்க்கெட்டை பெரியதாக விரிவுப்படுத்தி உள்ளது. சுஸுகியின் குருகிராம் தொழிற்சாலை ஆனது வருடத்திற்கு 10 இலட்ச 2-வீலர்களை மட்டுமே தயாரிக்கும் அளவிற்கு திறன் கொண்டது.

ஆனால், 11 மாதங்கள் நிறைவடைவதற்கு முன்பாகவே 10 இலட்சம் லிமிட்டை தாண்டியிருப்பது சுஸுகியின் கமிட்மெண்ட்டை காட்டுகிறது. அத்துடன், சுஸுகி மோட்டார்சைக்கிளின் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் பொறியியலாளர்களின் அயராத உழைப்பையும் இது வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. மேலும், சுஸுகி 2-வீலர்கள் மீதான கஸ்டமர்ஸின் நம்பிக்கையையும் இது வெளிக்காட்டுகிறது.
சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் தற்சமயம் 11 விதமான 2-வீலர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள் அதிகம் விற்பனையாகுவது என்று பார்த்தால், சுஸுகியின் 125சிசி ஸ்கூட்டரான ஆக்ஸஸ் ஆகும். இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் ஸ்கூட்டர்களுள் ஒன்றாக சுஸுகி ஆக்ஸஸ் உள்ளது. சுஸுகியில் இருந்து அதிகப்பட்சமாக ஹயபுஸா பைக் சுமார் ரூ.16.97 லட்சம் என்கிற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுஸுகி நிறுவனம் ஒரு வருடத்திற்கு உள்ளாவே 10 இலட்ச 2-வீலர்களை உற்பத்தி செய்துள்ளது என்றால், இது கஸ்டமர்ஸின் ஆதரவு இல்லாமல் சாத்தியமில்லை. இணைய சேவைகள் வாகன உற்பத்தி நிறுவனத்துக்கும், கஸ்டமர்ஸுக்கும் இடையேயான தூரத்தை வெகுவாக குறைத்துள்ளன. இதனாலேயே, டிஜிட்டல் ஆன்லைன் புக்கிங் விஷயத்தில் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் எப்போதும் ஆர்வமாக உள்ளது.


Click it and Unblock the Notifications









