சுஸுகி 2-வீலர் உற்பத்தி ஆலை ஓய்வில்லாம ஓடுது... ஒரே மாதத்தில் 1 லட்சம் வாகனங்கள் - புள்ளி விபரம் என்ன சொல்லுது
சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் (Suzuki Motorcycles), இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனங்களுள் ஒன்று. முந்தைய காலத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டுவந்த சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் தற்போது தனித்து செயல்பட்டு ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான இருசக்கர வாகனங்களை விற்பனை செய்கிறது. இவ்வாறு, இந்தியாவில் அதிக சுஸுகி 2-வீலர்கள் விற்பனை செய்யப்படுவது மட்டுமின்றி, இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும் அதிக எண்ணிக்கையில் சுஸுகி 2-வீலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி எவ்வாறு இருந்தது என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஜப்பானை சேர்ந்த பிரபல 2-வீலர் உற்பத்தி நிறுவனம், சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் ஆகும். இந்த நிறுவனத்திற்கு இந்தியா மிக முக்கியமான சந்தையாக விளங்குகிறது. எந்த அளவிற்கு என்றால், ஒவ்வொரு மாதத்திலும் இந்தியாவில் இருந்து ஏறக்குறைய 1 லட்சம் சுஸுகி இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

நடந்து முடிந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 4,800 இருசக்கர வாகனங்களை சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அதாவது, இந்தியாவில் செயல்படும் சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் விற்பனை செய்தவை மட்டும் 1,04,800 ஆகும். இந்த எண்ணிக்கையில், உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டவை 87,480 மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை 17,320 ஆகும்.
கடந்த 2023 ஆகஸ்ட் மாதத்தில் 83,045 இரு சக்கர வாகனங்களை இந்திய சந்தையிலும், 20,291 வாகனங்களை இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும் என மொத்தமாக 1 லட்சத்து 3,336 இரு சக்கர வாகனங்களை சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் விற்பனை செய்யப்பட்ட சுஸுகி 2-வீலர்களின் எண்ணிக்கைக்கும், இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் விற்பனை செய்யப்பட்ட எண்ணிக்கைக்கும் பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை.

இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 1,464 வாகனங்கள் மட்டுமே கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2023 ஆகஸ்ட் உடன் ஒப்பிடுகையில் கடந்த 2024 ஆகஸ்ட்டில் சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸின் உள்நாட்டு விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது என்றாலும், வெளிநாட்டு ஏற்றுமதி 14.64% குறைந்துள்ளது. கடந்த 2024 ஜூலை மாதத்தில் சுமார் 1 லட்சத்து 16,714 இருசக்கர வாகனங்களை சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் விற்பனை செய்திருந்தது.
இதில் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டவை 1 லட்சத்து 602 மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 16,112 ஆகும். அதாவது, கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான இரு சக்கர வாகனங்களை சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் விற்பனை செய்திருந்தது. 2024 ஏப்ரல் மாதத்தில் இருந்து கடந்த 5 மாதங்களில் மொத்தம் 5 லட்சத்து 20,690 2-வீலர்களை இந்தியாவில் செயல்படும் சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

இதில் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டவை 4 லட்சத்து 39,267 மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை 81,423 ஆகும். கடந்த 2023ஆம் ஆண்டில் இதே 5 மாதங்களில் 4 லட்சத்து 71,956 இரு சக்கர வாகனங்களை மட்டுமே சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் விற்பனை செய்திருந்தது. இதில் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்ட சுஸுகி 2-வீலர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 60,712 மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை 1 லட்சத்து 11,244 ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த புள்ளி விபரங்களின்படி பார்க்கும்போது, சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி என இரண்டும் ஏற்றமும், இறக்கமுமாய் இருந்து வருவதை அறிய முடிகிறது. ஏனெனில், 2024 ஆகஸ்ட் மற்றும் 2023 ஆகஸ்ட் மாதங்களை மட்டும் ஒப்பிட்டு பார்த்தால், சுஸுகி 2-வீலர்களின் உள்நாட்டு விற்பனை அதிகரித்தும், ஏற்றுமதி குறைந்திருப்பதும் போல தெரிகிறது. ஆனால், இந்த ஆண்டு ஜூலை உடன் ஒப்பிட்டு பார்த்தால், புள்ளி விபரம் வேறு விதமாக காட்டுகிறது.


Click it and Unblock the Notifications









