ஓலாவை சாய்க்க ரெடியாக இருக்கும் டிவிஎஸ் & பஜாஜ்! தீபாவளிக்கு அப்புறம் மவுசு குறையுது!!
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோரில் பெரும்பாலனவர்களின் தேர்வு எலக்ட்ரிக் 2-சக்கர வாகனங்களாகவே உள்ளன. ஏனெனில், நம் நாட்டு மக்களுக்கு இன்னமும் எலக்ட்ரிக் வாகனங்களின் மீது முழு நம்பிக்கை ஏற்படவில்லை. இதனால், பெரிய தொகையை எலக்ட்ரிக் வாகனங்களில் செலவு செய்ய தயங்குகின்றனர். இதன் காரணமாகவே, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) மட்டுமே தற்போதைக்கு அதிகமாக விற்பனை ஆகுகின்றன. எலக்ட்ரிக் பைக் (Electric Bike)-களுக்கும் பெரிய அளவில் தேவை இல்லாத சூழலே நிலவுகிறது. இப்படிப்பட்ட சூழலில், இந்தியாவில் எலக்ட்ரிக் 2-வீலர்கள் விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்த நிறுவனங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் கடந்த நவம்பர் (November) மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 19 ஆயிரத்து 47 எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகள் என இரண்டின் விற்பனை எண்ணிக்கையும் அடங்குகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வெறும் 92 ஆயிரத்து 116 எலக்ட்ரிக் 2-வீலர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்த வகையில் பார்க்கும்போது, இந்தியாவில் எலக்ட்ரிக் 2-வீலர்களின் விற்பனை ஆனது 29.24%, அதாவது 26 ஆயிரத்து 931 யூனிட்கள் அதிகரித்துள்ளது. ஆனால், 2024 அக்டோபர் (October) உடன் ஒப்பிடுகையில், 20 ஆயிரத்திற்கும் அதிகமான எலக்ட்ரிக் 2-வீலர்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஏனெனில், அந்த மாதத்தில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 159 எலக்ட்ரிக் 2-வீலர்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
லேட்டாக நுழைந்தாலும், லேட்டஸ்ட்டாக நுழைந்தது போல் ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) மிக விரைவாகவே இந்தியாவின் முன்னணி ஸ்கூட்டர் நிறுவனங்களுள் ஒன்றாக உருவெடுத்துள்ளது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் என்று மட்டுமில்லை, பெட்ரோல் ஸ்கூட்டர்களையும் கணக்கில் எடுத்து பார்த்தாலும், இந்தியாவின் டாப்-10 ஸ்கூட்டர் நிறுவனங்களுள் ஒன்றாக ஓலா எலக்ட்ரிக் உள்ளது.

அந்த அளவிற்கு அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதத்தில் மொத்தம் 29 ஆயிரத்து 204 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த லிஸ்ட்டில் முதலிடத்தை பிடித்திருப்பினும், வழக்கத்தை காட்டிலும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் விற்பனை ஆனது கடந்த மாதத்தில் கணிசமாக குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் 869 ஸ்கூட்டர்கள் அதிகமாக 30 ஆயிரத்து 73 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓலா விற்பனை செய்திருந்தது. 2024 அக்டோபரில் சுமார் 41 ஆயிரத்து 651 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓலா விற்பனை செய்திருந்தது. ஆனால் அடுத்த மாதத்திலேயே ஓலாவின் விற்பனை பெரிதும் குறைந்துள்ளது. ஓலாவுக்கு அடுத்து டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) 2வது இடத்தை தனதாக்கி உள்ளது. கடந்த மாதத்தில் டிவிஎஸ்-இல் இருந்து 27 ஆயிரத்து 7 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

3வது இடத்தை பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) 26 ஆயிரத்து 203 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை உடன் பிடித்துள்ளது. ஆனால், 2023 நவம்பரில் டிவிஎஸ் மோட்டார் மற்றும் பஜாஜ் ஆட்டோவின் விற்பனை எண்ணிக்கைகள் முறையே வெறும் 19,155 மற்றும் 11,843 ஆக மட்டுமே இருந்தது. 4வது இடத்தில் ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனம் 12,760 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. 2023 நவம்பரில் 9,342 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே ஏத்தர் விற்பனை செய்திருந்தது.
5வது மற்றும் 6வது இடங்களில் ஹீரோ மோட்டோ விடா (Hero Moto Vida) மற்றும் ஆம்பியர் (Ampere) நிறுவனங்கள் முறையே 7,315 மற்றும் 4,469 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளன. இவ்வளவு நேரம் நாம் பார்த்தவை எல்லாம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்யும் நிறுவனங்கள் ஆகும். 7வது இடத்தில் 1,996 எலக்ட்ரிக் 2-வீலர்கள் விற்பனை உடன் உள்ள ரிவோல்ட் (Revolt) நிறுவனம் தான் எலக்ட்ரிக் பைக்கையும் விற்பனை செய்கிறது. இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி 3 இடங்களில் பிகாஸ் (1,878), கைனெட்டிக் க்ரீன் (1,095) மற்றும் லெக்ட்ரிக்ஸ் (991) உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குறுகிய காலத்தில் முன்னணி எலக்ட்ரிக் 2-வீலர் நிறுவனமாக உருவெடுத்துள்ள ஓலா எலக்ட்ரிக்கின் விற்பனை மெல்ல, மெல்ல குறைந்து வருவதுபோல் தெரிகிறது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்வதில் டிவிஎஸ் மோட்டாருக்கும், பஜாஜ் ஆட்டோவுக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. இதில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் கடந்த நவம்பர் மாதத்தில் முன்னிலை வகித்துள்ளது.


Click it and Unblock the Notifications









