பல இளைஞர்களை தூங்க விடாமல் செய்த பைக்குகள்! 2024இன் டாப்-5 பைக்குகள் என்று சொன்னால் இவைதான்!!
2024ஆம் வருடம் நிறைவடைய உள்ளது. ஒவ்வொரு வருடமும் பல நீங்காத நினைவுகளை நமக்கு தந்துவிட்டு செல்கின்றன. அந்த வகையில், இந்த 2024ஆம் வருடமும் பல காயங்களையும், பல சந்தோஷங்களையும் தந்துள்ளது. ஆட்டோமொபைல் வாகன துறையை பொறுத்தவரையில், எல்லா வருடங்களை போன்று இந்த 2024ஆம் வருடத்திலும் பல தரமான கார் & பைக்குகள் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள், 5 ரெட்ரோ-ஸ்டைல் பைக்குகளை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
ரெட்ரோ-ஸ்டைல் பைக்குகள் என்பன, 1960, 70களில் இருந்த பைக்குகளை போன்று பழமையான கிளாசிக் தோற்றத்தை கொண்டவை ஆகும். அவ்வாறான தோற்றத்தில் இந்த வருடத்தில் ராயல் என்ஃபீல்டு, ஜாவா மற்றும் பி.எஸ்.ஏ நிறுவனத்தில் இருந்து சில பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் மிகுந்த கவனத்தை ஈர்த்த முதல் 5 பைக்குகளை இனி பார்க்கலாம்.

ராயல் என்ஃபீல்டு கோன் கிளாசிக் 350 (Royal Enfield Goan Classic 350): பிரபலமான ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கில் கொண்டுவரப்பட்ட சிங்கிள்-சீட் வெர்சன் ஆகும். இருப்பினும், கிளாசிக் 350 பைக்கில் இருந்து தோற்றத்தில் வித்தியாசமானதாக காட்ட வேண்டும் என்பதற்காக, கோன் கிளாசிக் 350 பைக்கின் சக்கரங்களுக்கு கூட வண்ண நிறங்களை கொடுத்துள்ளனர். கிளாசிக் 350 பைக்கில் பொருத்தப்படும் அதே 349சிசி ஜே-சீரிஸ் என்ஜின் தான் இந்த பைக்கிலும் வழங்கப்பட்டுள்ளது.

ஜாவா 42 எஃப்.ஜே (Jawa 42 FJ): வழக்கமான கிளாசிக் தோற்றத்தில் இருந்து வேறுப்பட்டதாக மாடர்ன் தோற்றத்தில் இந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஜாவா பைக் இதுவாகும். பிரீமியம் தோற்றத்தில் காட்சியளிக்கும் இந்த பைக்கில் 334சிசி, ஆல்பா-2 சீரிஸ், சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. ஜாவா 350 பைக்கிலும் இதே என்ஜின் தான் பொருத்தப்படுகிறது என்றாலும், 42 எஃப்.ஜே பைக்கில் கூடுதல் ஆற்றல் கிடைக்கிறது.

பி.எஸ்.ஏ கோல்டு ஸ்டார் 650 (BSA Gold Star 650): பல வருட இடைவெளிக்கு பிறகு இந்தியாவில் மீண்டும் களம்புகுந்த பிரிட்டிஷ் பைக் நிறுவனமான பி.எஸ்.ஏ அறிமுகம் செய்த முதல் பைக் இதுவாகும். முன்பு விற்பனையில் இருந்த பழைய கோல்டு ஸ்டார் 650 பைக்கை நிறைய விஷயத்தில் ஒத்ததாக புதிய கோல்டு ஸ்டார் 650 பைக் விளங்குகிறது. ராயல் என்ஃபீல்டின் 650சிசி பைக்குகளில் 2-சிலிண்டர்களை கொண்ட 650சிசி என்ஜின் பொருத்தப்படும் நிலையில், இந்த பைக்கில் சிங்கிள்-சிலிண்டர் 650சிசி என்ஜின் வழங்கப்படுகிறது.

ராயல் என்ஃபீல்டு பியர் 650 (Royal Enfield Bear 650): ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்த ஆண்டில் அறிமுகம் செய்த தரமான தயாரிப்புகளுள் ஒன்றாக இதனை சொல்லலாம். 1960களில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட பியர் ரன் என்கிற பந்தயத்தின் பெயரில் இருந்து 'பியர்' என்கிற வார்த்தை எடுக்கப்பட்டுள்ளது. பெயர் மட்டுமின்றி, இந்த பைக் பார்ப்பதற்கும் கொஞ்சம் 1960களில் வந்த பைக்குகளை போலவே இருக்கும்.

டிரையம்ப் ஸ்பீடு டி4 (Triumph Speed T4): 2023ஆம் ஆண்டில் டிரையம்ப் அதன் விலை குறைவான ஸ்பீடு 400 பைக்கை விற்பனைக்கு கொண்டுவந்தது. இந்த 2024ஆம் ஆண்டில் அதனை காட்டிலும் குறைந்த விலையில் ஸ்பீடு டி4 பைக் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு காரணம், ஸ்பீடு டி4 பைக் ஆனது ஸ்பீடு 400-ஐ விட கொஞ்சம் எடை குறைவானது ஆகும். இதனால், ஸ்பீடு டி4 பைக்கை நெரிசல் மிகுந்த சாலைகளிலும் கண்ட்ரோல் செய்வது எளியதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறான ரெட்ரோ-கிளாசிக் தோற்றத்திலான பைக்குகளுக்கு இந்தியா உள்பட நிறைய நாடுகளில் சிறப்பான வரவேற்பு உள்ளது. இருப்பினும், இந்த பைக்குகளின் அதிகப்படியான விலையை கண்டுக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை. அதற்கேற்ப பவர்ஃபுல்லான பைக்குகளாக இவை உருவாக்கப்படுகின்றன. மேலும், இவற்றின் தோற்றம் வேண்டுமாயின் ரெட்ரோ-ஸ்டைலில் இருக்கலாமே தவிர்த்து, தொழிற்நுட்ப அம்சங்கள் எல்லாம் மாடர்ன் தரத்திலானவை ஆகும்.


Click it and Unblock the Notifications









