2-வீலர் வாங்க நம்ம மக்களிடம் எங்கிருந்துதான் இவ்வளவு பணம் இருக்கு? ஹீரோ மட்டும் 4.5 லட்ச வாகனங்கள் விற்றுள்ளது
இந்தியாவில் கடந்த 2024 மார்ச் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் 2-வீலர்களை விற்பனை செய்த டாப்-6 நிறுவனங்கள் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றியும், அவை கடந்த மார்ச் மாதத்தில் விற்பனை செய்த 2-வீலர்கள் எண்ணிக்கையை பற்றியும் இனி விரிவாக இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவின் 2-வீலர்கள் மார்க்கெட் ஆனது நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. அதாவது, 2-வீலர்களை வாங்குவோரின் எண்ணிக்கை அந்த அளவிற்கு நம் நாட்டில் அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து வருவதால், அதற்கேற்ப 2-வீலர்களை வாங்குவோரும் அதிகரித்து வருகின்றனர். இந்த பிரம்மாண்ட சந்தையை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் நிறுவனம் என்று பார்த்தால், அது ஹீரோ மோட்டோகார்ப் ஆகும்.

இந்தியாவில் கடந்த பல வருடங்களாக 2-வீலர்கள் விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் நிறுவனம் ஹீரோ மோட்டோகார்ப் ஆகும். அந்த வரிசையில் கடந்த 2024 மார்ச் மாதத்திலும் 2-வீலர்கள் விற்பனையில் முதலிடத்தை பிடித்துள்ள ஹீரோ மோட்டோகார்ப் கடந்த மாதத்தில் மொத்தம் 4 லட்சத்து 59,257 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதில் எப்படியிருந்தாலும் பாதி யூனிட்கள் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்காகவே இருக்கும்.
இத்தனை 2-வீலர்களை வேறெந்த நிறுவனமும் கடந்த மாதத்தில் விற்பனை செய்யவில்லை என்றாலும், 2023 மார்ச்சில் ஹீரோ நிறுவனம் விற்பனை செய்ததை விட இது 8.65% குறைவாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 5 லட்சத்து 2,730 இரு சக்கர வாகனங்களை ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்திருந்தது. கடந்த மாதத்தில் இந்தியாவில் 3இல் ஒருவர் ஹீரோ நிறுவனத்தின் வாகனங்களை வாங்கி உள்ளனர்.

ஹீரோ மோட்டோகார்ப்புக்கு அடுத்து 2வது இடத்தில் ஹோண்டா 3 லட்சத்து 58,151 2-வீலர்களின் விற்பனை உடன் உள்ளது. 2023 மார்ச் உடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மார்ச்சில் ஹோண்டா 2-வீலர்களின் விற்பனை டபுள் மடங்காக அதிகரித்துள்ளது என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் அந்த மாதத்தில் வெறும் 1 லட்சத்து 97,512 இரு சக்கர வாகனங்களை மட்டுமே ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் & ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம் விற்பனை செய்திருந்தது.
இந்தியாவில் 2-வீலர் வாங்கும் 5இல் ஒருவர் நிச்சயமாக ஹோண்டாவின் தயாரிப்பை வாங்குகின்றனர். டிவிஎஸ் மோட்டார் இந்த வரிசையில் வழக்கம்போல் 3வது இடத்தை தனக்கு சொந்தமாக்கி உள்ளது. டிவிஎஸ் மோட்டாரில் இருந்து கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 2-வீலர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 60,532 ஆகும். 2023 மார்ச் உடன் ஒப்பிடுகையில் இது ஏறக்குறைய 20 ஆயிரம் யூனிட்கள் அதிகமாகும்.

ஏனென்றால், 2023 மார்ச்சில் 2 லட்சத்து 40,780 இரு சக்கர வாகனங்களை மட்டுமே டிவிஎஸ் விற்பனை செய்திருந்தது. ஆனால் உண்மையில், 2023 மார்ச்சில் ஹோண்டாவை முந்தி டிவிஎஸ் மோட்டார் இந்த லிஸ்ட்டில் 2வது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பஜாஜ் ஆட்டோ இந்த லிஸ்ட்டில் 4வது இடத்தில் உள்ளது. பஜாஜ் நிறுவனம் கடந்த மாதத்தில் விற்பனை செய்த 2-வீலர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 83,004 ஆகும்.
இதனை காட்டிலும் 20.17% குறைவாக 2023 மார்ச் மாதத்தில் 1,52,287 2-வீலர்களை மட்டுமே பஜாஜ் விற்பனை செய்திருந்தது. சுஸுகி மோட்டார்சைக்கிள் 86,164 யூனிட்களின் விற்பனை உடன் 5வது இடத்தில் உள்ளது. ஆனால், 2023 மார்ச்சில் 73,069 2-வீலர்களை மட்டுமே சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ராயல் என்ஃபீல்டு 66,044 பைக்குகளின் விற்பனை உடன் 6வது இடத்தில் உள்ளது.

| Rank | Brand | Mar-24 | Mar-23 | Growth (%) YoY |
| 1 | Hero | 4,59,257 | 5,02,730 | -8.65 |
| 2 | Honda | 3,58,151 | 1,97,512 | 81.33 |
| 3 | TVS | 2,60,532 | 2,40,780 | 8.20 |
| 4 | Bajaj | 1,83,004 | 1,52,287 | 20.17 |
| 5 | Suzuki | 86,164 | 73,069 | 17.92 |
| 6 | Royal Enfield | 66,044 | 59,884 | 10.29 |
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த 6 நிறுவனங்கள் மட்டுமின்றி இன்னும் பல 2-வீலர் நிறுவனங்கள் இந்தியாவில் அவற்றின் தயாரிப்புகளை விற்பனை செய்கின்றன. இதில் டாப்-6 இடங்களில் இருக்கும் இவற்றின் மொத்த விற்பனை சுமார் 15.25% அதிகரித்துள்ளது. இதில் இருந்து, இந்தியாவில் 2-வீலர்கள் விற்பனை எந்த அளவிற்கு உயர்ந்து வருகிறது என்பதை அறியலாம்.


Click it and Unblock the Notifications









