இவ்ளோ கம்மி விலையா! வாய பிளக்க வச்சுட்டாங்க! எலெக்ட்ரிக் அவதாரத்தில் வந்திருக்கும் இ-லூனா பற்றிய டாப்பான தகவல்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கைனெடிக் கிரீன் (Kinetic Green) நிறுவனத்தின் லூனா (Luna) மொபட் மின்சார வெர்ஷனில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. நேற்றைய தினமே இந்த வாகனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இ-லூனா (eLuna) என்கிற பெயரிலேயே அது விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது.
யாரும் எதிர்பார்த்திராத மலிவு விலை மற்றும் சிறப்பம்சங்களைத் தாங்கியதாகவே இந்த வாகனம் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. டிவிஎஸ் எக்ஸ்எல்-க்கு மின்சார அவதாரம் கொடுத்ததைப் போன்றே இந்த வாகனம் காட்சியளிக்கின்றது. இதுபற்றி அறிந்துக்கொள்ள வேண்டிய டாப் ஐந்து தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

இ-லூனாவின் லுக் எப்படி இருக்கின்றது? பழைய லூனாவை பிரதிபலிக்கும் வகையிலேயே இ-லூனாவும் இருக்கின்றது. என்ன இதன் தோற்றம் தற்போது விண்டேஜ் லுக்கில் இல்லாமல் நவீன தோற்றத்தில் இருக்கின்றது. இதேபோல், எலெக்ட்ரிக் மோட்டார்களுக்கு பதிலாக மின்சார மோட்டார் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதேபோல், இதில் பெடலிங் வசதி வழங்கப்படவில்லை.
தொடர்ந்து புதிய இ-லூனாவில் இரட்டை துண்டு வடிவத்திலான இருக்கைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், கடந்த காலங்களில் விற்பனையில் இருந்து லூனாவில் ஒற்றை துண்டு நீளமான அமைப்புடைய இருக்கையே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதேபோல், இ-லூனாவின் ஹெட்லைட்டும் தற்போது மாற்றப்பட்டு இருக்கின்றது. சதுர பேனலுக்குள் வட்ட வடிவ லைட்டே வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதிலேயே இன்டிகேட்டர் லைட்டுகளும் இடம் பெற்றிருக்கின்றன. மற்றபடி வேறு எந்த பெரிய மாற்றமும் இதில் மேற்கொள்ளப்படவில்லை. ஆகையால், சற்று லேசாக இ-லூனா விண்டேஜ் லுக்கையும் பிரதிபலிக்கின்றது. இந்த வாகனத்தின் கவர்ச்சியான தோற்றத்திற்காக வாகனத்தை சுற்றிலும் மஞ்சள் நிற பைப் வழங்கப்பட்டு இருக்கின்றது.
மேலும், ஸ்பக் வீல்கள், டிஜிட்டல் திரை ஆகியவையும் இ-லூனாவில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவையே சாதா லூனாவை, நவீன லுக் கொண்ட லூனாவாக மாற்றி இருக்கின்றது. அதாவது, அம்பியாக இருந்த லூனாவை ரெமோவாக மாற்றியிருக்கின்றது. ஆகையால், இதற்கு இளைஞர்கள் மற்றும் இன்றைய கால வணிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சிறப்பு வசதிகள் மற்றும் அம்சங்கள்: அதிக இட வசதிகளைக் கொண்டதாக லூனா இருக்கின்றது. இந்த வாகனத்தில் இரண்டு பேர் தாராளமாக அமர்ந்து பயணிக்க முடியும். இதுதவிர, அதிக பொருட்களையும் ஏற்றிச் செல்ல முடியும். குறிப்பாக, முன் பக்கத்தில் பெரிய லக்கேஜ்களைகூட வைத்து பயணிக்க முடியும்.
இதுதவிர இருக்கைக்கு அடியில் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கின்றது. முக்கிய ஆவணங்கள் மற்றும் எலெக்ட்ரிக் கேட்ஜட்களை பாதுகாப்பாக இதில் வைத்துக் கொள்ள முடியும். இத்துடன், பின் பக்க பயணிக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்கும் பொருட்டு, குறிப்பாக, பெண் பயணிகளுக்கு பாதுகாப்பை வழங்கும் விதமாக புடவைக்கான குவார்டு கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

இத்துடன், லெக் குவார்டு, கிராப் ரெயில், கழட்டி மாட்டும் வசதிக் கொண்ட ரியர் இருக்கை, காம்பி பிரேக்கிங் சிஸ்டம், சைடு ஸ்டாண்டு சென்சார் மற்றும் சேஃப்டி லாக் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் சிறந்த ரைடு அனுபவத்திற்காக டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் முன் பக்கத்திலும், ஸ்பிரிங் ஷாக் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டு இருக்கின்றது. கூடுதல் சிறப்பு என்னவென்றால் இதன் பின்னிருக்கையைக் கழட்டிக் கொள்வதன் வாயிலாக பின்னாலும் லோடுகளை ஏற்றிக் கொள்ள முடியும்.
வேரியண்ட் மற்றும் விலை விபரம்: இ-லூனா இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். எக்ஸ்1 மற்றும் எக்ஸ்2 ஆகிய இரண்டு விதமான தேர்வுகளிலேயே அது கிடைக்கும். இதில் எக்ஸ் 1 தேர்வு ரூ. 69,990ம், எக்ஸ் 2 தேர்விற்கு 74,990 ரூபாயும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். தற்போது ரூ. 500 முன் தொகையிலேயே இ-லூனாவிற்கு புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. இணையதளத்தின் வாயிலாகவும் புக் செய்துக் கொள்ள முடியும். உங்களுக்கு அருகாமையில் கைனடிக் கிரீன் ஷோரூம் இருந்தால் அங்கும் இ-லூனாவை புக் செய்துக் கொள்ள முடியும்.
பேட்டரி மற்றும் மின் மோட்டார் செயல் திறன் பற்றிய விபரங்கள்: இ-லூனாவில் 2 kWh பேட்டரி பேக் தேர்வு மட்டுமே வழங்கப்படுகின்றது. 1.2 kW மோட்டாரே வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்ய முழுமையாக நான்கு மணி நேரங்கள் தேவைப்படும்.

அவ்வாறு செய்யும்பட்சத்தில் நம்மால் 110 கிமீ தூரம் வரை டிராவல் செய்ய முடியும். இ-லூனாவின் அதிகபட்ச வேகம் மணிக்கு 50 கிமீ ஆகும். இதன் கிராடியபிளிட்டி 7 டிகிரியாக உள்ளது. ஆகையால் சற்று சரிவான பாதையைகூட இந்த இ-லூனாவால் சமாளிக்க முடியும் என கூறப்படுகின்றது.
இ-லூனாவால் லாபம் கிடைக்குமா? உதாரணமாக ஓர் பெட்ரோல் டூ-வீலர் லிட்டர் ஒன்றிற்கு 55 கிமீ வரை மைலேஜ் தரும் என வைத்துக் கொள்வோம். இந்த வாகனத்தை கொண்டு ஒரு நாளுக்கு 100 கிமீ தூரம் வரை டிராவல் செய்தால், இதற்காக 1.82 லிட்டர் பெட்ரோல் நிரப்ப வேண்டியிருக்கும். எனவே செலவு ரூ 191 வரை செய்ய வேண்டியிருக்கும்.
இதன்படி கணக்கிட்டால் 26 நாட்களுக்கு ரூ. 4,969 வரை செலவாகும். ஆனால், இ-லூனாவில் இதே பயண தூரத்தை எட்ட வெறும் 248 ரூபாயே செலவாகும். 100 கிமீ பயணிக்க வேண்டும் எனில் 1.82 யூனிட் மட்டுமே மின்சார தேவைப்படும். ஒரு யூனிட் 5.25 என்றாலும்கூட ஒரு நாளைக்கு ரூ. 9.6 மட்டுமே செலவாகும். எனவே இ-லூனா அதிக லாபத்தை வழங்கக் கூடியதாகவே இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட்டை போலவே இ-லூனாவையும் பல நிலைகளில் பயன்படுத்திக் கொள்ள முடியும். குடும்ப பயன்பாட்டுக்கான வாகனமாகவும் இதை பயன்படுத்திக் கொள்ள முடியும். குறிப்பாக, லோடு வாகனமாக பயன்படுத்தும் போது நல்ல லாபத்தை இ-லூனாவால் பெற்றுக் கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications









