89,999 ரூபா விலை கொண்ட பைக்கை ரூ2999 முன்தொகையில் புக் பண்ணலாம்! ஸ்பிளெண்டர், பிளாட்டினா விற்பனையான மாதிரிதான்
இந்தியாவில் எலெக்ட்ரிக் பைக் (Electric Bike)கின் வருகை (அறிமுகம்) சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கின்றது. சமீபத்தில் ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் அதன் மலிவு விலை எலெக்ட்ரிக் பைக் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ரோட்ஸ்டர் (Roadster) எனும் எலெக்ட்ரிக் பைக்கையே அது விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். மேலும், மிக மிக குறைவான விலையிலேயே இது விற்பனைக்குக் கிடைக்கிறது. ரூ. 74,999 என்கிற ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்தே அது விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இந்த மாதிரியான சூழலிலேயே ஓலா ரோட்ஸ்டர் எலெக்ட்ரிக் பைக்கிற்கு போட்டியளிக்கும் விதமாக இந்திய நிறுவனமான ஓபென் எலெக்ட்ரிக் (Oben Electric), ரோர் ஈசி (Rorr EZ) எனும் எலெக்ட்ரிக் பைக் மாடலை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. மிகமிக குறைவான விலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கும் இந்த மின்சார பைக் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய சுவாரஷ்யமான தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஓபென் ரோர் வடிவமைப்பு: மிகவும் அட்டகாசமான வடிவமைப்பைக் கொண்டதாக ஓபென் ரோர் ஈசி காட்சியளிக்கின்றது. அதேவேளையில், நிறுவனம் ஏற்கனவே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் ரோர் மாடலை பிரதிபலிக்கும் வகையில் ரோர் ஈசி இருப்பதை நம்மால் மறுக்க முடியாது. நவீன காலத்திற்கு ஏற்ற லுக்கை இந்த வாகனத்திற்கும் கடத்தியிருப்பது பாராட்டுக்குரிய வேலையாக உள்ளது.
வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட், மெல்லிய இன்டிகேட்டர் லைட்டுகள், ஒற்றை துண்டு அமைப்பு இருக்கை, ஸ்போர்ட்ஸ் பைக்குகளில் காணப்படுவதைப் போன்ற உயரமான ஹேண்டில் பார்கள் என பைக்கை கவர்ச்சியாகக் காண்பிப்பதற்காக பல்வேறு அம்சங்களை ஓபென் எலெக்ட்ரிக் வழங்கி இருக்கின்றது. தொடர்ந்து இந்த பைக்கை ஏஆர்எக்ஸ் ஃப்ரேம்-ஒர்க்கை பயன்படுத்தியே தயார் செய்திருக்கின்றது. இது ஓர் நீடித்து உழைக்கும் திறன் கொண்ட மெட்டல் ஆகும்.
தினசரி பயன்பாட்டிற்கு உகந்த வாகனம்: ஓபென் எலெக்ட்ரிக் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் பைக்கை தினசரி பயன்பாட்டிற்கு உகந்த டூ-வீலராக தயார் செய்திருக்கின்றது. அதாவது, ஹீரோ ஸ்பிளெண்டர் மற்றும் பஜாஜ் பிளாட்டினா ஆகிய பைக்குகளைப் போல ரெகுலர் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்திக் கொள்ள முடியும். அதேவேளையில், அதிர்வுகள், எஞ்சினில் இருந்து வெப்பம் வெளியேறுவது மற்றும் கிளட்ச்சை அடிக்கடி மாற்ற வேண்டும் என்கிற தொள்ளை இந்த பைக்கில் இருக்காது.
ஃபேட்டரி பேக் தேர்வுகள்: ஓபென் ரோர் ஈசி எலெக்ட்ரிக் பைக்கை மூன்று விதமான பேட்டரி பேக் தேர்வுகளில் வாங்கிக் கொள்ள முடியும். 2.6 kWh, 3.4 kWh மற்றும் 4.4 kWh ஆகியவையே அவை ஆகும். இவை ஓர் எல்எஃப்பி வகை பேட்டரி பேக் ஆகும்.
இந்த பேட்டரி பேக்குகளால் 50 சதவீதம் கூடுதலான உயர் வெப்ப நிலையை சமாளிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. ஆகையால், இதில் தீ விபத்து என்கிற பேச்சுக்கே இடம் இருக்காது என தெரிகின்றது. இதுமட்டுமில்லைங்க, இரண்டு கூடுதல் ஆயுட்காலத்தையும், நீடித்து உழைக்கும் திறனைக் கொண்டதாகவும் இந்த பேட்டரி பேக் இருக்கும் என ஓபென் எலெக்ட்ரிக் தெரிவித்திருக்கின்றது.
இந்த பேட்டரி பேக்கை அதிக வேகத்திலும் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். அந்தவகையில் ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டைப் பயன்படுத்தி சார்ஜ் செய்யும்பட்சத்தில் வெறும் 45 நிமிடங்களில் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்துக் கொள்ள முடியும் என ஓபென் தெரிவித்திருக்கின்றது.
ரேஞ்சைப் பொருத்த வரை சின்ன பேட்டரி பேக் ஆப்ஷனான 2.6 kWh தேர்வு ஓர் முழு சார்ஜில் 110 கிமீ ரேஞ்சையும், 3.4 kWh பேட்டரி பேக் 150 கிமீ ரேஞ்சையும் மற்றும் 4.4 kWh அதிகபட்சமாக 175 கிமீ வரையில் ரேஞ்ச் தரும்.
மின்சார மோட்டார் பற்றிய விபரம்: இந்த எலெக்ட்ரிக் பைக்கில் மணிக்கு 95 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட மின்சார மோட்டாரையே ஓபென் எலெக்ட்ரிக் பயன்படுத்தி இருக்கின்றது. இதனால் 52 என்எம் டார்க் வரை வெளியேற்ற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
எனவே தினசரி பயன்பாட்டிற்கு இந்த டூ-வீலர் அதிக வேகத்தில் இயங்கும் திறன் கொண்ட பைக்குகளுக்கு இணையான ஆற்றலை வெளியேற்றும் என்பது தெளிவாக தெரிகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த வாகனத்திற்கு ஆக்சலரேஷன் திறன் உள்ளது. வெறும் 3.3 செகண்டுகளிலேயே அது பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டிவிடும் என்பது கவனிக்கத்தகுந்தது.
ரோர் ஈசி இ-பைக்கின் சிறப்பம்சங்கள்: இந்த பைக்கில் எல்இடி வண்ண திரையே வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ரைடருக்கு தேவையான முக்கிய தகவல்களை வழங்கும் திறன் கொண்டது. இத்துடன், ஜியோ ஃபென்சிங், திருட்டைத் தவிர்க்கும் தொழில்நுட்பம், யுபிஏ (UBA) மற்றும் டிஏஎஸ் (DAS) உள்ளிட்ட அம்சங்களையும் இந்த பைக்கில் ஓபென் எலெக்ட்ரிக் வழங்கி இருக்கின்றது.
வண்ண தேர்வுகள் பற்றிய விபரம்: ஓபென் ரோர் ஈசி எலெக்ட்ரிக் பைக்கை நான்கு விதமான வண்ண தேர்வுகளில் வாங்கிக் கொள்ள முடியும். எலெக்ட்ரோ ஆம்பெர் (Electro Amber), சர்ஜ் சையன் (Surge Cyan), லூமினா கிரீன் (Lumina Green) மற்றும் ஃபோட்டான் ஒயிட் (Photon White) ஆகியவையே அவை ஆகும்.
விலை, புக்கிங் மற்றும் வாரண்டி விபரம்: ரூ. 89,999 என்பது 2.6 kWh பேட்டரி பேக் கொண்ட ரோர் ஈசியின் விலை ஆகும். இதேபோல், 3.4 kWh பேட்டரி பேக் கொண்ட தேர்விற்கு ரூ. 99,999 விலையும், 4.4 kWh பேட்டரி பேக் கொண்ட தேர்விற்கு ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999 விலையும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.
இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். மேலும், அறிமுகத்தைத் தொடர்ந்து புக்கிங் பணிகளையும் ஓபென் எலெக்ட்ரிக் தொடங்கி இருக்கின்றது. ரூ. 2,999 செலுத்தி இ-பைக்கை புக் செய்துக் கொள்ளலாம். அதேவேளையில், தற்போது அறிவிக்கப்பட்டு இருப்பது அறிமுக சிறப்பு கால விலை ஆகும். ஆமாங்க குறைவான காலத்திற்கு மட்டுமே இந்த குறைவான விலையில் ரோர் ஈசி எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்குக் கிடைக்கும்.
இந்த பைக்கின் வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கிலேயே இந்த குறைவான விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, 5 ஆண்டுகள் அல்லது 75 ஆயிரம் கிமீ வாரண்டி திட்டத்தையும் இந்த பைக்கிற்கு வழங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. தொடர்ந்து, மாதத் தவனை ரூ. 2,200க்கே இந்த ரோர் ஈசி இ-பைக்கை விற்பனைச் செய்ய இருப்பதாகவும் அது அறிவித்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விலை குறைவான மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையை உணர்ந்தே கம்மியான விலையில் ஓபென் ரோர் ஈசி எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இதற்கு சிறப்பான வரவேற்புக் கிடைக்கலாம் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








