ஹீரோவுக்கு தண்ணி காட்டும் ஹோண்டா... ஒரு காலத்தில் எப்படி இருந்த நிறுவனங்கள்!! எல்லாம் மாறிடுச்சு
இந்தியா, உலகின் மிக பெரிய 2-வீலர் சந்தை என்றால் அது மிகையில்லை. ஏனெனில், நம் நாட்டில் ஒவ்வொரு மாதமும் 10 இலட்சத்தில் இருந்து 20 இலட்சம் வரையிலான இருசக்கர வாகனங்கள் அசால்ட்டாக விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கின்றன. அந்த வகையில், கடந்த 2024 ஜூன் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த டாப்-6 நிறுவனங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, வழக்கத்தை காட்டிலும் இந்தியாவில் 2-வீலர்கள் விற்பனை ஆனது எந்த அளவிற்கு அதிகரித்துள்ளது என்பதையும், இதுகுறித்த கூடுதல் விபரங்களையும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியா 2-வீலர்கள் விற்பனை என்றாலே அதில் ஹீரோ மோட்டோகார்பின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கும் என்பது நமக்கு தெரிந்த விஷயம். இந்தியாவின் தேசிய பைக் என அறிவிக்கும் அளவிற்கு ஹீரோவின் ஸ்பிளெண்டர் பைக்குகள் ஒவ்வொரு மாதத்திலும் இலட்சக்கணக்கில் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலமாக ஹீரோ மோட்டோகார்பின் விற்பனையும் எப்போதும் சிறப்பாகவே உள்ளது.

கடந்த 2024 ஜூன் மாதத்திலும் சுமார் 4 இலட்சத்து 91,416 இருசக்கர வாகனங்களை ஹீரோ மோட்டோகார்ப் உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது. அதாவது, இந்தியாவில் மட்டுமே கிட்டத்தட்ட 5 இலட்ச 2-வீலர்களை ஒரே மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்துள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கையை சேர்த்தால், இன்னும் இது அதிகமாக போகும்.
ஆனால், கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 4 இலட்சத்து 22,757 இருசக்கர வாகனங்களை மட்டுமே ஹீரோ மோட்டோகார்ப் உள்நாட்டில் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், ஹீரோ மோட்டோகார்பின் உள்நாட்டு விற்பனை ஆனது 68,659 யூனிட்கள் அதிகரித்துள்ளது. ஹீரோ மோட்டோகார்ப்புக்கு அடுத்து, ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் வழக்கம்போல் இந்த வரிசையில் 2வது இடத்தை பிடித்துள்ளது.

ஹோண்டாவில் இருந்து கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 2-வீலர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 82,597 ஆகும். அதாவது, ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்ததை காட்டிலும் வெறும் 8,900 2-வீலர்கள் மட்டுமே ஹோண்டா குறைவாக விற்பனை செய்துள்ளது. ஆனால், 2023 ஜூன் மாதத்தில் வெறும் 3 லட்சத்து 2,756 இருசக்கர வாகனங்களை மட்டுமே ஹோண்டா விற்பனை செய்திருந்தது.
டிவிஎஸ் மோட்டார் இந்த வரிசையில் 3வது இடத்தை சொந்தமாக்கியுள்ளது. டிவிஎஸ் மோட்டாரில் இருந்து கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 2 லட்சத்து 55,734 இருசக்கர வாகனங்கள் கடந்த மாதத்தில் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2023 ஜூன் மாதத்தில் டிவிஎஸ்-இல் இருந்து விற்கப்பட்ட 2-வீலர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 35,833 ஆகும்.

4வது இடத்தில் உள்ள பஜாஜ் ஆட்டோவில் இருந்து கடந்த மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 77,207 இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2023 ஜூனில் பஜாஜில் இருந்து விற்கப்பட்ட 2-வீலர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 66,292 மட்டுமே ஆகும். இந்த வகையில் பார்க்கும்போது, கடந்த ஆண்டு ஜூனை காட்டிலும் இந்த ஆண்டு ஜூனில் ஏறக்குறைய 10,915 இருசக்கர வாகனங்களை பஜாஜ் அதிகமாக விற்பனை செய்துள்ளது.
இதற்கடுத்து 5வது மற்றும் 6வது இடங்களில் முறையே சுஸுகி மோட்டார்சைக்கிள் மற்றும் ராயல் என்ஃபீல்டு நிறுவனங்கள் உள்ளன. இவை இரண்டின் கடந்த ஜூன் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 71,086 மற்றும் 66,117 ஆகும். இதில் சுஸுகியின் 2-வீலர் விற்பனை 2023 ஜூனை காட்டிலும் கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால், ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் உள்நாட்டு விற்பனை ஆனது 2.04% குறைந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் 2-வீலர்கள் விற்பனையில் ஹீரோ மோட்டோகார்பை ஹோண்டா நிறுவனம் முந்தும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை கடந்த மாத விற்பனை நிலவரம் காட்டுகிறது. ஹீரோ மற்றும் ஹோண்டா இவை இரண்டும் மட்டும் கடந்த ஜூன் மாதத்தில் சுமார் 9.5 லட்சத்திற்கும் அதிகமான (கிட்டத்தட்ட 10 இலட்சம்) 2-வீலர்களை விற்பனை செய்துள்ளன. ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விற்பனை குறைந்திருப்பது நாம் எதிர்பார்க்காத ஒன்று.


Click it and Unblock the Notifications









