இந்த விலையில் ஒரு சூப்பரான காரை வாங்கிவிடலாம்... டிரையம்ப்பின் புதிய பைக்கை பலருக்கு தெரியாத விஷயங்கள்!!
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles) நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய டேடோனா 660 (Daytona 660) மோட்டார்சைக்கிளை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. டிரையம்ப் நிறுவனத்தின் புதிய மிடில்-வெயிட் மோட்டார்சைக்கிளாக இது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. டிரையம்ப் நிறுவனத்தில் இருந்து ஏற்கனவே டிரிடெண்ட் 660 மற்றும் டைகர் ஸ்போர்ட் 660 என இரு 660சிசி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுவரும் நிலையில், தற்போது அவற்றுடன் ஒன்றாக டேடோனா 660 இணைந்துள்ளது. ஆனால், மற்ற இரு பைக்குகளை காட்டிலும் பவர்ஃபுல்லானதாக புதிய டேடோனா 660 உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய டிரையம்ப் டேடோனா 660 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.72 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விற்பனையில் இந்த டிரையம்ப் பைக்கிற்கு போட்டியாக உள்ள கவாஸாகி நிஞ்சா 650 -இன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.16 லட்சமாகவும், ஏப்ரிலியா ஆர்.எஸ்660 பைக்கின் விலை சுமார் ரூ.17.74 லட்சமாகவும் தற்சமயம் உள்ளது. புதிய டேடோனா 660 பைக்கின் சிறப்பம்சங்கள்...

என்ஜின்: டேடோனா 660 பைக்கில் 660சிசி இன்லைன் 3-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இதே என்ஜின் தான் டிரையம்ப் டிரிடெண்ட் 660 மற்றும் டைகர் ஸ்போர்ட் 660 பைக்குகளிலும் பொருத்தப்படுகிறது. ஆனால், புதிய டேடோனா 660 பைக்கில் 14 எச்பி மற்றும் 5 என்.எம் டார்க் திறன் கூடுதலாக, அதிகப்பட்சமாக 11,250 ஆர்பிஎம்-இல் 95 எச்பி மற்றும் 8,250 ஆர்பிஎம்-இல் 69 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை என்ஜினில் இருந்து பெறலாம்.
பரிமாண அளவுகள்: கூடுதல் என்ஜின் பவர் மட்டுமின்றி, டிரிடெண்ட் 660 பைக்கை காட்டிலும் டேடோனா 660 பைக்கின் எடையும் 12 கிலோ அதிகமாகும். ஆனால், டேடோனா 660 உடன் ஒப்பிடுகையில் டைகர் ஸ்போர்ட் பைக் 5 கிலோ எடைமிக்கது ஆகும். டேடோனா பைக்கில் தரையில் இருந்து ரைடரின் இருக்கை ஆனது 810மிமீ உயரத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இது, டைகர் ஸ்போர்ட் பைக்கை விட 25மிமீ தாழ்வானது மற்றும் டிரிடெண்ட் 660 பைக்கை விட 5மிமீ உயரமானது ஆகும். புதிய டேடோனா 660 பைக்கில் 14 லிட்டர்கள் கொள்ளளவில் பெட்ரோல் டேங்க் கொடுக்கப்படுகிறது. டிரிடெண்ட் 660 பைக்கிலும் இதே கொள்ளளவில் பெட்ரோல் டேங்க் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
கலர் ஆப்ஷன்ஸ் & விலை: ஸ்னோடானியா வெள்ளை, சாதின் கிரானைட் மற்றும் கார்னிவல் சிவப்பு என மொத்தம் 3 விதமான கலர் ஆப்ஷன்களில் டேடோனா 660 பைக் கிடைக்கும். இந்த பைக்கின் ரூ.9.72 லட்சம் என்கிற விலை ஆனது டைகர் ஸ்போர்ட்டை விட 27,000 ரூபாயும், டிரிடெண்ட் பைக்கை விட சுமார் ரூ.1.60 லட்சமும் அதிகமாகும். ஆனால், வெளிநாடுகளில் டைகர் ஸ்போர்ட் 660 பைக்கை விட டேடோனா 660 விலை குறைவானதாக விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால், இந்தியாவில் வேற மாதிரியான வியாபார யுக்தியை டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் கையில் எடுத்துள்ளது. இதற்கு காரணம், இந்தியாவில் டேடோனா 660 பைக்கில் நிறைய தொழிற்நுட்ப அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், இந்த பைக்கை குறைந்த விலையில் டிரையம்ப் நிறுவனத்தால் அறிமுகம் செய்ய முடியவில்லை. ஆற்றல்மிக்க டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்765 பைக்கை விட புதிய டேடோனா 660 பைக்கின் விலை வெறும் ரூ.45,000 மட்டுமே குறைவாகும்.
விற்பனையில் போட்டி பைக்குகள்: ஏற்கனவே கூறியதுபோல், டிரையம்ப் டேடோனா 660 பைக்கிற்கு விற்பனையில் கவாஸாகி நிஞ்சா 650 மற்றும் ஏப்ரிலியா ஆர்.எஸ்660 பைக்குகள் போட்டியாக உள்ளன. இவற்றுடன், விரைவில் ஹோண்டா சிபிஆர்650ஆர் மற்றும் சுஸுகி ஜி.எஸ்.எக்ஸ்-8ஆர் பைக்குகளும் இணையவுள்ளன. அதாவது, இந்த ஹோண்டா & சுஸுகி பைக்குகள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விலை குறைவான பைக்குகளுக்கே நல்ல வரவேற்பு உள்ளது. இருப்பினும், டேடோனா 660 போன்ற விலையுயர்ந்த பைக்குகளும் அவ்வப்போது மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படுகின்றன. பைக்கின் செயல்படுதிறனிலும், தொழிற்நுட்ப அம்சங்களிலும் எந்தவொரு சமரசமும் செய்துக் கொள்ளாதவர்களுக்கு புதிய டிரையம்ப் டேடோனா 660 ஆனது ஏற்ற மோட்டார்சைக்கிள் ஆகும்.


Click it and Unblock the Notifications









