விற்பனைக்கு வந்த பிறகு தான் இருக்கு கச்சேரியே...!! டிரையம்ப் பார்த்து, பார்த்து உருவாக்கி உள்ள புதிய பைக்!
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles) நிறுவனம் அதன் புதிய டேடோனா 660 (Daytona 660) பைக்கை சர்வதேச அளவில் வெளியீடு செய்துள்ளது. முழுவதும் பேனல்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த புதிய டிரையம்ப் பைக்கை பற்றிய விரிவான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம், வாங்க.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் அதன் டிரிடெண்ட் 660 பைக்கின் ஸ்போர்ட்ஸ் வெர்சனை டேடோனா 660 என்கிற பெயரில் வெளியீடு செய்துள்ளது. டிரையம்ப் நிறுவனத்தில் இவ்வாறான ஸ்போர்ட்ஸ் ரக மோட்டார்சைக்கிள் வெளிவந்து நீண்ட காலமாகி விட்டது. இந்த பெரிய இடைவெளியை முழுவதும் நிரப்பும் விதமாக டேடோனா 660 பைக் மிகவும் பார்த்து, பார்த்து கவனத்துடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

தற்போது சர்வதேச அளவில் வெளியீடு செய்யப்பட்டுள்ள இந்த புதிய டிரையம்ப் பைக் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டுவரப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இந்திய சந்தையில் இந்த 2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் டேடோனா 660 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். டிரிடெண்ட் 660 பைக்கில் பொருத்தப்படும் அதே 660சிசி இன்லைன் 3-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் டேடோனா 660 பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், டேடோனா 660 பைக்கில் கூடுதலாக 14 எச்பி மற்றும் 4 என்எம் டார்க் திறனை பெறலாம் என டிரையம்ப் தெரிவித்துள்ளது. ஆக மொத்தமாக, டேடோனா 660 பைக்கில் அதிகப்பட்சமாக 11,250 ஆர்பிஎம்-இல் 95 எச்பி மற்றும் 8,250 ஆர்பிஎம்-இல் 69 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

புதிய டேடோனா 660 பைக்கின் என்ஜினுக்கான சர்வீஸ் இண்டர்வெல் 16 ஆயிரம் கிமீ அல்லது 12 மாதங்களாக டிரையம்ப் பரிந்துரைத்துள்ளது. இதனால் குறைந்தது, பைக்கை வாங்கிய ஒரு வருட காலத்திற்கு என்ஜினை பற்றிய எந்தவொரு டென்ஷனும் இல்லாமல் பைக்கை ஓட்டலாம். டிரிடெண்ட் 660 பைக்கை போல், ட்யூப்லர் ஸ்டீல் ஃப்ரேமில் புதிய டேடோனா 660 பைக் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் 110மிமீ டிராவல் உடன் 41மிமீ-இல் தலைக்கீழான பிக் பிஸ்டன் ஃபோர்க்குகளும், பின் பக்கத்தில் 130மிமீ டிராவல் உடன் ஷோவா மோனோஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன. பிரேக் பணியை முன் சக்கரத்தில் டிரையம்ப்-பிராண்ட் 4-பிஸ்டன் ரேடியல் காலிபர்கள் உடன் 310மிமீ-இல் ட்வின் டிஸ்க்குகளும், பின் சக்கரத்தில் 220மிமீ-இல் சிங்கிள் டிஸ்க்கும் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் பயணிகளின் கூடுதல் பாதுகாப்பிற்கு, ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் கருவியும் இந்த பைக்கில் இடம்பெற்றுள்ளது. முன்பு விற்பனையில் இருந்த டேடோனா 675 பைக் உடன் ஒப்பிடுகையில், புதிய டேடோனா 660 பைக் ஆனது மிகவும் சவுகரியமான ரைடிங் பொசிஷனை கொண்டுள்ளது. க்ளிப்-ஆன் ஹேண்டில்பார்கள் இந்த மோட்டார்சைக்கிளில் வழங்கப்பட்டுள்ளன.
இருக்கை ஆனது இரண்டாக பிளவுப்பட்டதாக வழங்கப்பட்டுள்ளது. புதிய டேடோனா 660 பைக்கில் சாலை, மழை மற்றும் ஸ்போர்ட் என 3 விதமான ரைடிங் மோட்களை பெறலாம். இந்த பைக்கின் முன்பக்கத்தில் இரு பகுதிகளாக எல்இடி ஹெட்லைட் செட்அப் வழங்கப்பட்டுள்ளது. டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 மற்றும் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர் பைக்குகளில் வழங்கப்படும் அதே இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை புதிய டேடோனா 660 பெற்றுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய ஸ்போர்ட்ஸ் பைக் பிரியர்களுக்கு புதிய டிரையம்ப் டேடோனா 660 பைக் பிடித்தமானதாக இருக்கும். இந்த பைக்கை அன்றாட பயன்பாட்டிற்கும் பயன்படுத்த முடியும். இதன் இந்திய அறிமுக தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், இப்போதே இந்த புதிய டிரையம்ப் பைக்கிற்கு இந்தியாவில் எதிர்பார்ப்பு உருவாக ஆரம்பித்துவிட்டது.


Click it and Unblock the Notifications









