பிரபல பைக் மாடலின் விலையை ரூ.48,000 வரை குறைத்த டிரையம்ப்! இது உண்மை தானா?
உலக புகழ்பெற்ற பைக் உற்பத்தி நிறுவனமான டிரையம்ப் அதன் முன்னணி பைக் மாடல் ஒன்றின் விலையை நம்ப முடியாத அளவிற்குக் குறைத்திருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. நிறுவனம் அதன் நடுத்தர எடைக் கொண்ட நேக்கட் ஸ்ட்ரீட் வகை பைக் மாடலான ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்-இன் விலையையே குறைத்திருப்பதாக அந்த தகவல்கள் தெரிவித்தன. ரூ. 48 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. மேலும், இந்த விலை குறைப்பால் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்-இன் விலை ரூ. 9.95 லட்சமாக குறைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள், டிரையம்ப் பைக் உற்பத்தி நிறுவனம் எந்த இரண்டு சக்கர வாகனத்தின் விலையையும் குறைக்கவில்லை என தெரிவித்திருக்கின்றது. இது மிகப் பெரிய அதிர்ச்சியளிக்கக் கூடிய சம்பவமாக அமைந்திருக்கின்றது. இதுகுறித்து டிரையம்ப் நிறுவனம் ஓர் அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளது.

அந்த அறிவிப்பில், "டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர் மற்றும் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் மாடல்களின் விலை குறைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இந்த மாடல்களின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. டிரையம்ப் மோட்டார்சைக்கிள்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஏற்பட்ட ஒரு தொழில்நுட்ப கோளாறு காரணமாக விலையில் பிழை ஏற்பட்டது.
தற்போது இந்த தொழில்நுட்ப பிரச்சனை சரிசெய்யப்பட்டுள்ளது. இந்த கோளாறு காரணமாக ஏற்பட்ட குழப்பத்திற்கு டிரையம்ப் மோட்டார்சைக்கிள்கள் மன்னிப்பு கோருகின்றன. கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்படதில் இருந்தே, டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர் மற்றும் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் இந்த இரண்டிற்கும் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

ஒப்பற்ற செயல்திறன் மற்றும் சிறந்த சவாரி தரத்தால் இந்த மோட்டார்சைக்கிள்கள் இந்திய வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றது. அவற்றின் முன்னணி பொறியியல் மற்றும் நேர்த்தியான வடிவமைப்பு ஆகியவற்றால் நாடு முழுவதிலும் உள்ள மோட்டார்சைக்கிள் ஆர்வலர்களின் முதல் தேர்வாகவும் மாறி இருக்கின்றது. டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் 765 ஆர் தற்போது விலை ரூ. 10,17,000-க்கும், டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் 765 ஆர்எஸ் விலை ரூ. 11,81,000-க்கும் விற்கப்படுகின்றது" என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் வாயிலாக டிரையம்ப் நிறுவனம் அதன் பைக்கின் விலையை குறைக்கவில்லை என்பது தெளிவாக தெரிய வந்திருக்கின்றது. ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர், ப்யூர் ஒயிட் (Pure White) மற்றும் சில்வர் ஐஸ் (Silver Ice), மேட் பஜா ஆராஞ்சு (Matt Baja Orange) மற்றும் கிரிஸ்டல் ஒயிட் (Crystal White) உள்ளிட்ட நிற தேர்வுகளிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இதேபோல், ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் (Street Triple RS), பேந்தம் பிளாக் (Phantom Black), கார்னிவல் ரெட் (Carnival Red) மற்றும் காஸ்மிக் யெல்லோ (Cosmic Yellow) மற்றும் சில்வர் ஐஸ் (Silver Ice) உள்ளிட்ட நிற தேர்வுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவற்றின் விலையையே நிற தேர்விற்கு குறைத்திருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.
ஆனால், அது தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட்ட தவறு என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர் மற்றும் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் இந்த இரண்டிற்கும் இடையே எஞ்சின் திறன் வெளிப்பாடு மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றில் கணிசமான அளவு வேறுபாடுகள் உள்ளன.
அதேவேளையில், இரண்டு பைக்குகளும் ஒரே தளத்தைப் பயன்படுத்தியே உருவாக்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இதில் உயர்-ரக தேர்வாக ஆர்எஸ் உள்ளது. இதனாலேயே என்னோமோ இதில் வழங்கப்பட்டு இருக்கும் எஞ்சினை அதிக திறனை வெளியேற்றக் கூடியதாக டிரையம்ப் ட்யூன்-அப் செய்திருக்கின்றது. 765 சிசி இன்லைன் ட்ரிபிள், லிக்விட் கூல்டு எஞ்சினையே இந்த பைக் கொண்டிருக்கின்றது.
இது அதிகபட்சமாக 128.2 பிஎச்பி மற்றும் 80 என்எம் டார்க்கை உருவாக்கும். அதேநேரத்தில், இதே எஞ்சினே ஆர் தேர்வில் 118.4 பிஎச்பி ஆற்றலை உற்பத்தி செய்கிறது. இரண்டு தேர்வுகளிலும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸே ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றது. இதேபோல், இன்னும் சில சிறப்பம்சங்கள் விஷயத்திலும் இந்த இரண்டிற்கும் இடையே வித்தியாசம் தென்படுகின்றது.
அந்தவகையில், ஆர்எஸ் தேர்வில் ஷோவா பிக் பிஸ்டன் யுஎஸ்டி ஃபோர்க் மற்றும் ஓஹ்லின்ஸ் மோனோஷாக் சஸ்பென்ஷனும் வழங்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், ஆர் தேர்வில் ஷோவா ஃபோர்க் மற்றும் ஷோவா மோனோஷாக் சஸ்பென்ஷன் ஆகியவை வழங்கப்பட்டு உள்ளன. இவை இரண்டும் இந்தியாவின் கரடு முரடான சாலைக்கு ஏற்றவை ஆகும்.
இதுதவிர, ஆர்எஸ் தேர்வில் மிக சிறந்த பிரேக்கிங்கிற்காக பிரேம்போ ஸ்டைல்மா காலிபர்கள் வழங்கப்பட்டு உள்ளன. அதேசமயம் ஆர் தேர்வில் பிரெம்போ எம்4.32 காலிப்பர்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. இரண்டும் கை தேர்ந்த பிரேக்கிங் அனுபவத்தை வழங்கக் கூடியவை ஆகும். தொடர்ந்து, ஆர்எஸ் தேர்வில் டிஎஃப்டி திரையும், ஆர் தேர்வில் எல்சிடி மற்றும் சிறிய டிஎஃப்டி திரையும் வழங்கப்பட்டு இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிரையம்ப் நிறுவனம் ரூ. 48 ஆயிரத்தை குறைத்திருப்பதாக வெளியாகிய தகவல் ஒட்டுமொத்த வாகன உலகிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்தது. அதேவேளையில், டிரையம்ப் பைக் பிரியர்களுக்கு இது பெரிய மகிழ்ச்சியளிக்கக் கூடிய தகவலாக அமைந்தது. ஆனால், இந்த மகிழ்ச்சியையே தற்போது டிரையம்ப் அதன் அறிவிப்பின் வாயிலாக பறித்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








