ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை திரும்ப அழைத்த டிவிஎஸ்! காரணம் என்ன தெரியுமா?
டிவிஎஸ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கிய உரிமையாளர்களை அழைத்து திரும்ப ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு சர்வீஸ் சென்டருக்கு வரும்படி அழைத்துள்ளது. சில ஸ்கூட்டர்களில் மட்டும் பிரச்சனை இருப்பதால் அதை சோதனை செய்வதற்காக இந்த அழைப்பை மேற்கொண்டுள்ளது. இப்படியாக எந்த காலத்தில் தயாரிக்கப்பட்ட ஸ்கூட்டர்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன? அதில் என்ன பிரச்சனை இருக்கிறது என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டிவிஎஸ் நிறுவனம் ஐ-க்யூப் என்ற ஒரே ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தான் தற்போது மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது. இந்த ஸ்கூட்டரும் மார்க்கெட்டில் நல்ல மதிப்பை பெற்று சிறப்பான விற்பனையை பெற்று வருகிறது. பல்வேறு செக்மெண்டில் உள்ள மக்களை திருப்தி படுத்துவதற்காக பல்வேறு விதமான வேரியன்ட்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் டிவிஎஸ் நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி முதல் 2023ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி வரை தயாரித்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் குறிப்பிட்ட சில ஸ்கூட்டர்களில் மட்டும் பிரிட்ஜ் டியூப் எனப்படும் கருவியில் சில பிரச்சனைகள் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த காலங்களில் தயாரிக்கப்பட்ட ஸ்கூட்டர்கள் எந்தெந்த உரிமையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டதோ அந்த உரிமையாளர்களுக்கு நிறுவனம் போன் செய்கிறது.
அந்த உரிமையாளர்களை தங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள சர்வீஸ் சென்டருக்கு வரும்படி அழைக்கிறது. திரும்ப அழைக்கப்பட்ட இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சர்வீஸ் சென்டரில் உள்ள ஊழியர்கள் சோதனை செய்து. இதிலுள்ள பிரிட்ஜ் டியூப் கருவி சரியாக இருக்கிறதா என செக் செய்கிறார்கள்.

இந்த கருவி சரியாக இருந்தால் வாகனத்தை அப்படியே உரிமையாளர்களிடம் ஒப்படைத்து விடுகிறார்கள். கருவியில் ஏதாவது பிரச்சனை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அதை இலவசமாகவே மாற்றி தர டிவிஎஸ் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ளது. சமூக வலைதளங்களில் இந்த கருவியில் பிரச்சனை இருப்பதாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியான நிலையில் இந்த நடவடிக்கையை டிவிஎஸ் நிறுவனம் எடுத்துள்ளது.
சமூக வலைதளங்களில் பதிவான பதிவுகளின் படி சில வாடிக்கையாளர்கள் வாகனத்தை ஓட்டி செல்லும் போது வாகன ஓட்டி கால் வைத்திருக்கும் பூட் போர்டு பகுதியின் அடிப்பகுதி திடீரென உடைந்துள்ளது. இதையடுத்து அவர்கள் அருகில் உள்ள சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்று அது குறித்து ஆய்வு செய்துள்ளார்கள். அப்பொழுதுதான் இது பிரிட்ஜ் டியூப் எனப்படும் கருவிகள் இருக்கும் பிரச்சினை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பிரச்சனை ஓரிரு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாமல் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டதால் அந்த வாடிக்கையாளர்கள் வாங்கிய வாகனம் தயாரிக்கப்பட்ட காலத்தை பார்க்கும்போது மேலே குறிப்பிட்ட காலத்தில் தான் இவர்கள் வாகனம் வாங்கி உள்ளது தெரிய வருகிறது. இதையடுத்து இந்த காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளது.
டிவிஎஸ் நிறுவனம் தனது ஐ க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சமீபத்தில் தான் இரண்டு புதிய வேரியன்ட்களை அறிமுகப்படுத்தியது. அதன்படி புதிதாக 2.2 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகமாகியுள்ளது. இது ரூபாய் 94,999 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
மற்ற இரண்டு பேட்டரி ஆப்ஷன்களாக 3.4 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் ஆப்ஷன் மற்றும் 5.1 கிலோ வாட் ஹவர் பேட்டரி என இரண்டு ஆப்ஷன்கள் உள்ளது. இது முறையே ரூ1.55 லட்சம் மற்றும் ரூ1.83 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
டிவிஎஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொறுத்தவரை இந்தியாவில் விற்பனையாகும் சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றாக இருக்கிறது. தற்போது டிவிஎஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. சமீபத்தில் தான் 3 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தாண்டி வாகனங்களை விற்பனை உற்பத்தி செய்து புதிய மைல் கல்லை அந்நிறுவனம் எட்டிப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிவிஎஸ் நிறுவனத்தின் ஐ-க்யூப் ஸ்கூட்டரில் மேலே குறிப்பிட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட ஒரு சில ஸ்கூட்டர்களில் மட்டுமே இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதை கண்காணித்து இலவசமாக சரி செய்து வர டிவிஎஸ் நிறுவனம் முன் வந்துள்ளது. நீங்கள் டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கி இருந்தால் உங்கள் வாகனம் குறிப்பிட்ட காலத்தில் தயாரிக்கப்பட்டிருந்தால் உடனடியாக அருகில் உள்ள சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்வது நல்லது.


Click it and Unblock the Notifications









