ஜூலை 15க்கு முன்னாடி புக் பண்ணவங்களுக்கு 10,000ரூபா லாயல்டி தராங்க.. ஓலாவுக்கு ஆப்பு வைக்க இது ஒன்னே போதும்!
டிவிஎஸ் (TVS) நிறுவனம் அதன் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (iQube Electric Scooter) மாடலின் டெலிவரி பணிகளை நாட்டில் தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல்கட்டமாக மஹாராஷ்டிரா மாநிலத்திலே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் தொடங்கி இருக்கின்றது. இதைத்தொடர்ந்து, அடுத்தடுத்த நகரங்களிலும் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் தொடங்க இருக்கின்றன.
ஐக்யூப் எஸ்டி தேர்வின் டெலிவரி பணிகளே தற்போது தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 2022 ஜூலை 15 ஆம் தேதிக்கு முன்னர் புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு போனஸாக லாயல்டி வழங்க இருப்பதாக டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

ரூ. 10 ஆயிரம் லாயல்டி போனஸ்ஸே அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. மிகக் கடுமையான போட்டி நிலவிக் கொண்டிருக்கும் இந்திய மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவைச் சமாளிக்கும் பொருட்டு டிவிஎஸ் நிறுவனம் ஐக்யூப் எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனைச் செய்யும் ஒரே எலெக்ட்ரிக் டூ-வீலர் மாடல் இது மட்டுமே ஆகும். இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாகவும் இது காட்சியளிக்கின்றது. நாட்டின் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் இரண்டு சக்கர வாகனங்களின் பட்டியலில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தயாரிப்புகள் முதல் இடத்திலும், இரண்டாவது இடத்திலும் டிவிஎஸ் ஐக்யூப்-ம் இருக்கின்றது.
இந்த அளவிற்கு சிறப்பான விற்பனை வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலையே சமீபத்தில் அப்டேட் செய்து விற்பனைக்குக் கொண்டு வந்தது டிவிஎஸ் நிறுவனம். அப்டேட்டின்கீழ், முன்னதாக இரண்டு விதமான தேர்வுகளில் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருந்த டிவிஎஸ் ஐ-க்யூப், தற்போது, ஐந்து விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்க ஆரம்பித்து இருக்கின்றது.
அதாவது, டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஐக்யூப் (iQube ST), ஐக்யூப் எஸ் (iQube S) மற்றும் ஐக்யூப் எஸ்டி (iQube ST) ஆகிய வேரியண்டுகளில் வாங்கிக் கொள்ள முடியும். இதில் ஆரம்ப நிலை வேரியண்டான ஐக்யூப்-இல் இரண்டு விதமான பேட்டரி பேக் ஆப்ஷன்களும், ஐக்யூப் எஸ் வேரியண்டில் ஒற்றை பேட்டரி பேக் தேர்வும், உயர் நிலை வேரியண்டான ஐக்யூப் எஸ்டி-யில் இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகளும் வழங்கப்படுகின்றது.
ஐக்யூப்-இல் 2.2 kWh மற்றும் 3.4 kWh ஆகிய பேட்டரி ஆப்ஷன்களே வழங்கப்படுகின்றது. ஐக்யூப் எஸ் வேரியண்டில் 3.4 kWh பேட்டரி பேக் மட்டுமே வழங்கப்படுகின்றது. அதேவேளையில் ஐக்யூப் எஸ்டி-இல் 3.4 kWh மற்றும் 5.1 kWh பேட்டரி பேக் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவின் மிகப் பெரிய பேட்டரி பேக் தேர்வு இதுவாகும்.
ஐக்யூப் 2.2 kWh தேர்வை ரூ. 1.08 லட்சத்திற்கும், ஐக்யூப் 3.4 kWh தேர்வை ரூ. 1.37 லட்சத்திற்கும் மற்றும் ஐக்யூப் எஸ் 3.4 kWh தேர்வை ரூ. 1.47 லட்சத்திற்கும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது, டிவிஎஸ். உயர் நிலை தேர்வான ஐக்யூப் எஸ்டி 3.4 kWh தேர்விற்கு ரூ. 1.56 லட்சமும், ஐக்யூப் எஸ்டி 5.1 kWh தேர்விற்கு ரூ. 1.86 லட்சமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.
அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஒரு முழு சார்ஜில் 75 கிமீ முதல் 150 கிமீ வரை ரேஞ்ஜை பெற்றுக் கொள்ள முடியும். மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 75 கிமீ முதல் 82 கிமீட்டர் வரை என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. சிறப்பு வசதியாக ரிவர்ஸ் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது.
ப்ளூடூத் இணைப்பு, ஓடிஏ வசதி, திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவலை வழங்கும் திரை, ஸ்கூட்டரின் திரையில் செல்போனுக்கு வரும் தகவல்களை அறியும் வசதி, சைடு ஸ்டாண்டு இன்டிகேஷன், பார்க் அசிஸ்ட், மியூசிக் கன்ட்ரோல், இன்காக்னிட்டோ மோட், ஜியோ ஃபென்சிங், திருட்டை தவிர்க்கும் தொழில்நுட்பம் மற்றும் செல்போனை சார்ஜ் செய்ய உதவும் யுஎஸ்பி சார்ஜர் பாயிண்ட் என ஏகப்பட்ட அம்சங்கள் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு மிகப் பெரிய அளவில் சவாலை வழங்கிக் கொண்டிருக்கின்றது, டிவிஎஸ் ஐக்யூப். இந்த நிலையிலேயே நாட்டின் பெரிய பேட்டரி ஆப்ஷனுடன் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு வழங்க தொடங்கி இருக்கின்றது. இதன் டெலிவரி பணிகள் தொடங்கி இருப்பது இந்தியர்களை குஷியில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








