ரேஸ் பைக் பிரியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அப்பாச்சியை மாற்றிய டிவிஎஸ்.. இவ்ளோ கம்மி விலைக்கா விற்க போறாங்க!
நம்மில் நிறைய பேருக்கு ரேஸ் பைக் என்பது மிகப் பெரிய கனவாக இருக்கின்றது. இந்த கனவில் இருப்பவர்களுக்கு குறைவான விலையில் தீர்வு வழங்கும் விதமாக டிவிஎஸ் (TVS) நிறுவனம் அதன் அப்பாச்சி (Apache) பைக் மாடலை தயார் செய்திருக்கின்றது. டிவிஎஸ் மோட்டார் தற்போது அப்பாச்சி ஆர்டிஆர் 160 2வி (Apache RTR 160 2V) மாடலில் ரேசிங் எடிசன் (Racing Edition) எனும் சிறப்பு பதிப்பையே அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. ரேஸ் பைக் விரும்பிகளைக் கவரும் நோக்கிலேயே இந்த சிறப்பு பதிப்பை டிவிஎஸ் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.
இந்த பதிப்பில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் நிறம் மற்றும் அணிகலன் என அனைத்தும் ரேஸ் பைக்குகளை பிரதிபலிக்கும் வகையிலேயே உள்ளது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 1.28 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. அறிமுகத்தைத் தொடர்ந்து இப்போதே இந்த பைக்கிற்கான முன்பதிவு பணிகள் நாட்டில் தொடங்கிவிட்டன.

நிறுவனத்தின் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட விற்பனையகங்கள் வாயிலாகவும் முன்பதிவுகளை ஏற்கப்பட்டு வருகின்றன. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 2வி ரேசிங் எடிசனுக்கு கவர்ச்சி சேர்க்கும் விதமாக மேட் கருப்பு வண்ணமே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன் கார்பன் ஃபைபர் பேனல்களே இந்த பைக்கை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.
இத்துடன், ரேஸ் பைக்குகளைப் பிரதிபலிக்கக் கூடிய கிராஃபிக்குகள், சின்னங்கள் ஆகியவையும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், பைக் பிரியர்களின் மனதைக் கவரும் நோக்கில் ஆங்காங்கே சிவப்பு நிறமும் கூடுதலாக பயன்பட்டு இருக்கின்றன. இந்த நிறத்தை பைக்கின் வீல், ஃப்யூவல் டேங்க்கின் ஷோல்டர் பாடி, எஞ்சின் குவார்டு உள்ளிட்ட பகுதிகளில் நம்மால் காண முடிகின்றது.

இதேபோல், தொழில்நுட்ப அம்சங்களையும் இந்த பைக்கில் டிவிஎஸ் நிறுவனம் வாரி வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், டிவிஎஸ் ஸ்மார்ட்-எக்ஸோன்னக்ட் இணைப்பு வசதிக் கொண்ட டிஜிட்டல் எல்சிடி கிளஸ்டர், எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லைட் ஆகியவையும் அதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், இந்த மோட்டார்சைக்கிளில் ஜிடிடி (Glide Through Technology) எனப்படும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்த அம்சத்தின் வாயிலாக த்ரோட்டில் செயல்பாடு இல்லாமலேயே, கிளட்ச் லீவரை மெதுவாக ரிலீஸ் செய்வதாலேயே வாகனத்தை முன்னோக்கி நகர்த்த முடியும். இத்தகைய அம்சத்தையே இந்த 160 சிசி பைக்கில் டிவிஎஸ் தற்போது வழங்கி இருக்கின்றது. இத்துடனேயே ஏபிஎஸ், ப்ளூடூத் இணைப்பு, வாய்ஸ் அசிஸ்டன்ஸ், திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவலை வழங்கும் வசதி ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, செல்போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் நோடிஃபிகேஷனை அறியும் வசதியும் பைக்கின் திரையில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சங்கள் அனைத்தும் டிவிஎஸ் ஸ்மார்ட்எக்ஸோன்னக்ட் வாயிலாகவே டிவிஎஸ் நிறுவனம் வழங்கி இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல தகவல்களை வழங்கும் வகையிலேயே அந்த எல்சிடி திரை வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.
எஞ்சினைப் பொருத்த வரை வழக்கமான அதே 160 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, மோட்டாரே அப்பாச்சி ஆர்டிஆர் 160 2வி பைக் மாடலில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 16.04 பிஎஸ் பவரையும், 13.85 என்எம் டார்க் ஆற்றலையும் உருவாக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இத்துடன், மிக சிறந்த ரைடிங் அனுபவத்தை பெறும் நோக்கில் இந்த பைக்கில் ஸ்போர்ட், அர்பன் மற்றும் ரெயின் ஆகிய ரைடிங் மோட்கள் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இது ஒவ்வொன்றும் தனித்துவமான ரைடிங் அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிவிஎஸ் நிறுவனம் அப்பாச்சி ஆர்டிஆர் 160 2வி பைக்கை இந்தியாவில் முதல் முறையாக 2007 ஆம் ஆண்டிலேயே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த பைக் மாடல் தற்போது ஆர்டிஆர் 160 2வி மற்றும் ஆர்டிஆர் 160 4வி ஆகிய தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த நிலையிலேயே புதிதாக தற்போது ரேசிங் எடிசன் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








