சுதந்திர தினத்தை டார்க்கெட் செய்த டிவிஎஸ்... தேசிய கொடி உடன் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!!
டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனம் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அதன் ஐக்யூப் (iQube) எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிய லிமிடெட் எடிசனை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் தற்சமயம் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுள் ஒன்றாக ஐக்யூப் விளங்குகிறது. இத்தகைய எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிய லிமிடெட் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், இதன் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. டிவிஎஸ் ஐக்யூப் இ-ஸ்கூட்டரில் புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள இந்த லிமிடெட் எடிசனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
2-வீலர்கள் மற்றும் 3-வீலர்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக டிவிஎஸ் மோட்டார் விளங்குகிறது. தமிழ்நாட்டில் ஓசூரில் தொழிற்சாலையை கொண்டு செயல்படும் டிவிஎஸ் மோட்டாரில் இருந்து முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரான ஐக்யூப் 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக, ஆரம்பத்தில் டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை பெரியதாக இல்லையென்றாலும், சமீப காலமாக இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதற்கேற்ப ஐக்யூப் ஸ்கூட்டர்களையும் நிறைய பேர் வாங்குகின்றனர். இந்த நிலையில், ஐக்யூப் இ-ஸ்கூட்டர்களின் விற்பனையை மேலும் பெருக்கும் விதமாக இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிய ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பொதுவாகவே, ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய சுதந்திர தினத்தின்போது புதிய வாகனங்கள் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக டிவிஎஸ் மோட்டார் அறிமுகம் செய்து இருப்பதே ஐக்யூப் செலிபிரேஷன் எடிசன் (iQube Celebration Edition) ஆகும். ஐக்யூப் ஸ்கூட்டரில் இது ஸ்பெஷல் எடிசன் என கூறுவதை காட்டிலும் லிமிடெட் எடிசன் என்று கூறுவதுதான் சரியாக இருக்கும்.

ஏனெனில், இன்று (ஆகஸ்ட் 15) துவங்கப்படும் டிவிஎஸ் ஐக்யூப் செலிபிரேஷன் எடிசன் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் வருகிற ஆகஸ்ட் 26ஆம் தேதி வரையில் வெறும் 11 நாட்களுக்கு மட்டுமே திறந்திருக்கும். அதாவது, அதுவரையில் மட்டுமே இந்த ஸ்கூட்டருக்கான புக்கிங்குகள் ஏற்றுக் கொள்ளப்படும். அதற்குள் 1,000 ஐக்யூப் செலிபிரேஷன் எடிசன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி விட்டால், அப்போதே புக்கிங்குள் நிறுத்திக் கொள்ளப்படும் என டிவிஎஸ் தெரிவித்துள்ளது.
டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மொத்தம் 5 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. 2.2kWh, ஸ்டாண்டர்ட், எஸ், எஸ்டி மற்றும் எஸ்டி 5.1kWh என்பன அந்த 5 வேரியண்ட்கள் ஆகும். இதில் ஸ்டாண்டர்ட், எஸ் மற்றும் எஸ்டி வேரியண்ட்கள் 3.4kWh பேட்டரி உடன் வழங்கப்படுகின்றன. இதில், 3.4kWh பேட்டரி பொருத்தப்படும் ஸ்டாண்டர்ட் மற்றும் எஸ் வேரியண்ட்களில் மட்டுமே புதிய செலிபிரேஷன் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது, ஐக்யூப் ஸ்டாண்டர்ட் மற்றும் எஸ் வேரியண்ட்களில் கிடைக்கும் வசதிகள் யாவும் புதிய செலிபிரேஷன் எடிசனிலும் கிடைக்கும். புதிய ஐக்யூப் ஸ்டாண்டர்ட் செலிபிரேஷன் எடிசன் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,19,628 ஆகவும், எஸ் செலிபிரேஷன் எடிசனின் விலை ரூ.1,29,420 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தோற்றத்தை பொறுத்தவரையில், புதிய செலிபிரேஷன் எடிசன் ஸ்கூட்டர்கள் இரட்டை நிறங்களில் கிடைக்கும்.
'செலிபிரேஷன் எடிசன்' என்கிற லோகோ ஆங்கிலத்தில் ஸ்கூட்டரை சுற்றிலும் இடம்பெற்றுள்ளது. புதிய ஐக்யூப் செலிபிரேஷன் எடிசனில் பொருத்தப்படும் 3.4 kWh பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 100கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு மணிக்கு 78கிமீ ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய வாகனங்களை அறிமுகம் செய்வதற்கு சுதந்திர தினம் சிறந்த நாளாகும். இதனை புரிந்துக் கொண்டு, மக்கள் அனைவரையும் கவரும் விதமாக புதிய ஐக்யூப் லிமிடெட் எடிசனை டிவிஎஸ் மோட்டார் அறிமுகம் செய்துள்ளது. இது குறுகிய காலத்திற்கு மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ள லிமிடெட் எடிசன் ஸ்கூட்டர் தான் என்றாலும், இதன் அறிமுகத்தினால் டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை சற்று அதிகரிக்கும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications









