நம்ம தமிழ்நாட்டு தயாரிப்புக்கு உலகளவில் அதிகரிக்கும் வரவேற்பு! டிவிஎஸ் வாகனங்களை வாங்க ஷோரூம்களில் செம கூட்டம்
டிவிஎஸ் மோட்டார் (TVS Motor), இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனம். நம் தமிழ்நாட்டை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் எத்தனை 2-வீலர்களை இந்தியாவிலும், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளிலும் விற்பனை செய்துள்ளது என்பது குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. அவற்றை பற்றி இனி பார்க்கலாம்.
டிவிஎஸ் மோட்டார், இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் இரு சக்கர வாகனங்களையும், மூன்று-சக்கர வாகனங்களையும் விற்பனை செய்யும் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்குகிறது. தமிழ்நாட்டில் ஓசூரில் தொழிற்சாலையை கொண்டுள்ள டிவிஎஸ் ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக 3 இலட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்கிறது.

ஆனால், கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் ஒருபடி மேலே போய், சுமார் 3 லட்சத்து 68 ஆயிரத்து 424 வாகனங்களை டிவிஎஸ் மோட்டார் உலகளவில் விற்பனை செய்துள்ளது. இந்த 3,68,424 வாகனங்களில் 2-சக்கர வாகனங்கள் மட்டுமின்றி மூன்று-சக்கர வாகனங்களும் அடங்குகின்றன. அதுமட்டுமின்றி, இந்த விற்பனை எண்ணிக்கையில் உள்நாட்டு விற்பனை மட்டுமில்லாமல், வெளிநாட்டு ஏற்றுமதிகளும் அடங்குகின்றன.
கடந்த பிப்ரவரி மாதத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் விற்பனை செய்த 2-வீலர்கள் மட்டும் என்று எடுத்து பார்த்தால், கடந்த மாதத்தில் மொத்தம் 3 லட்சத்து 57 ஆயிரத்து 810 இருசக்கர வாகனங்களை டிவிஎஸ் விற்பனை செய்துள்ளது. அதுவே, 2023 பிப்ரவரி மாதத்தில் வெறும் 2 லட்சத்து 67 ஆயிரத்து 26 இருசக்கர வாகனங்களை மட்டுமே டிவிஎஸ் விற்பனை செய்து இருந்தது. இந்த வகையில், டிவிஎஸ் 2-வீலர்ஸ் விற்பனை ஆனது 34% அதிகரித்துள்ளது.

3,57,810 2-வீலர்களில், இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்தவை 2 லட்சத்து 67 ஆயிரத்து 502 ஆகும். ஆனால், 2023 ஜனவரியில் 2,21,402 டிவிஎஸ் 2-வீலர்கள் மட்டுமே உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கடந்த பிப்ரவரியில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஒட்டு மொத்தமாக விற்பனை செய்துள்ள 3,57,810 இரு சக்கர வாகனங்களில் 1 லட்சத்து 84 ஆயிரத்து 23 பைக்குகள் அடங்குகின்றன.
ஆனால், 2023 பிப்ரவரியில் 1,26,243 பைக்குகளை மட்டுமே உள்நாட்டிலும், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளிலும் டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில், டிவிஎஸ் பைக்குகள் விற்பனை 46% அதிகரித்துள்ளது. ஸ்கூட்டர்களை பொறுத்தவரையில், கடந்த மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 152 டிவிஎஸ் ஸ்கூட்டர்கள் உலகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால், 2023 பிப்ரவரி மாதத்தில் வெறும் 1 லட்சத்து 4,825 டிவிஎஸ் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தன. டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் இருந்து தற்போதைக்கு எலக்ட்ரிக் வாகனமாக ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் விற்கப்பட்ட டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை 10,614 ஆகும்.
ஆனால், 2023 பிப்ரவரி மாதத்தில் 9,124 ஐக்யூப் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தன. இதன்படி பார்க்கும்போது, ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை ஆனது 16% அதிகரித்துள்ளது. டிவிஎஸ் மோட்டாரின் வாகனங்கள் இந்தியா உள்பட மொத்தம் 80 நாடுகளில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் மட்டுமில்லை, நிறைய ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனை சமீப மாதங்களாக வெகுவாக அதிகரித்து வருகிறது. இந்தியா, உலகின் மிக பெரிய ஆட்டோமொபைல் வாகன சந்தையாக மாறிவருவதை இது வெளிக்காட்டுவதாக அமைகிறது. இருப்பினும், ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் டிவிஎஸ் மெதுவாகவே முன்னேற்றம் கண்டு வருகிறது.


Click it and Unblock the Notifications









