ரூ.15,000 விலை குறைப்பு எல்லாம் பெரிய விஷயம்!! பவர்ஃபுல்லான டிவிஎஸ் பைக்கை வாங்க நேரம் வந்தாச்சு!
டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு அதன் பைக்குகளின் விலைகளை குறைத்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் கூட ரைடர் 125 பைக்கின் விலை குறைக்கப்பட்டதை பற்றி பார்த்திருந்தோம். அந்த வரிசையில், டிவிஎஸ் ரோனின் 225 (Ronin 225) பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் கணிசமாக குறைக்கப்பட்டு உள்ளன. இதன்படி, இந்த டிவிஎஸ் பைக்கை எவ்வளவு குறைந்த விலையில் வாங்கலாம் என்பதையும், இந்த டிவிஎஸ் பைக்கை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.
இந்தியாவின் முன்னணி 2-வீலர் மற்றும் 3-வீலர் நிறுவனமாக டிவிஎஸ் மோட்டார் விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை சிறப்பாக இருப்பினும், மற்ற நிறுவனங்களை போன்று தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தில் விற்பனையை பெருக்கும் விதமாக சலுகைகளை டிவிஎஸ் மோட்டார் அறிவித்து வருகிறது.

இந்த வகையில் சமீபத்தில் டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் விலைகள் ரூ.13,000 வரையில் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது ரோனின் 125 பைக்கின் விலைகளை குறைத்து டிவிஎஸ் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எஸ்.எஸ், டி.எஸ், டிடி, டிடி ஸ்பெஷல் எடிசன் என மொத்தம் 4 விதமான வேரியண்ட்களில் டிவிஎஸ் ரோனின் பைக் விற்பனை செய்யப்படுகிறது.
இதில், எண்ட்ரீ-லெவல் எஸ்.எஸ் வேரியண்ட்டின் விலை மட்டுமே ரூ.15,000 குறைக்கப்பட்டுள்ளது. முன்பு, ரோனின் எஸ்.எஸ் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.50 லட்சமாக இருந்த நிலையில், தற்போது அது ரூ.1.35 லட்சமாக குறைந்துள்ளது. டிவிஎஸ் ரோனின் பைக்கின் மற்ற வேரியண்ட்களின் விலைகளில் எந்த குறைப்பும் இல்லை. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1,56,700-இல் இருந்து ரூ.1,72,700 வரையில் உள்ளன.

ரோனின் எஸ்.எஸ் வேரியண்ட்டிற்கும் டிஎஸ் வேரியண்ட்டிற்கும் இடையே முன்பு ரூ.6,700 மட்டுமே வித்தியாசம் இருந்தது. ஆனால், தற்போது அது ரூ.21,700ஆக அதிகரித்துள்ளது. ரூ.21,700 கூடுதலாக செலவு செய்து வாங்கும் டிஎஸ் வேரியண்ட்டில் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் கிடைக்குமா? என்றால், கிடைக்காது என்பதுதான் பதில். ரோனின் பைக்கில் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ்-ஐ பெற வேண்டுமென்றால், அதற்கு நீங்கள் டிடி வேரியண்ட்டை வாங்க வேண்டும்.
ரோனின் எஸ்.எஸ் வேரியண்ட்டை காட்டிலும் டிடி வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ஏறக்குறைய ரூ.34 ஆயிரம் அதிகமாக உள்ளது. எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டின் விலை குறைக்கப்பட்டு இருப்பதை தவிர்த்து, ரோனின் பைக்கில் எந்த அப்டேட்களும் இல்லை. இந்த டிவிஎஸ் பைக்கில் 225.9சிசி SOHC 4-வால்வு ஆயில்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது.

அதிகப்பட்சமாக 20.4 பிஎஸ் மற்றும் 19.93 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. சஸ்பென்ஷனுக்கு இந்த பைக்கில் முன்பக்கத்தில் யுஎஸ்டி டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் 7-ஸ்டெப் ப்ரீலோடு அட்ஜெஸ்டபிள் மோனோ-ஷாக்கும் வழங்கப்படுகிறது. இந்த பைக்கின் 17-இன்ச் அலாய் சக்கரங்களில் ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்படுகின்றன.
இந்த பைக்கில் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 2,040மிமீ ஆகும். T-வடிவ எல்இடி டிஆர்எல் உடன் எல்இடி ஹெட்லைட் மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி வசதி உடன் ஃபுல்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை இந்த பைக்கின் முக்கியமான சிறப்பம்சங்கள் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.15 ஆயிரம் விலை குறைப்பானது டிவிஎஸ் ரோனின் பைக்கின் விற்பனையை வெகுவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். ஏனெனில், இந்த விலை குறைப்பு மூலமாக ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கை காட்டிலும் விலை குறைவானதாக ரோனின் 225 பைக் மாறியுள்ளது. ட்யூயல்-சேனல் ஏபிஎஸ்-ஐ தவிர்த்து மற்ற ஸ்டாண்டர்ட் அம்சங்கள் யாவும் ரோனின் எஸ்.எஸ் பைக்கில் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications









