இப்படி ஒரு பைக்கிற்கா டிவிஎஸ் பேடண்ட் பதிவு செஞ்சிருக்கு! லிஃப்ட் கேட்டே எல்லாரும் தொள்ள பண்ண போறாங்க!!
டிவிஎஸ் (TVS) நிறுவனத்தின் புகழ்பெற்ற பைக் மாடல்களில் ரோனின் (Ronin)-ம் ஒன்றாகும். இந்த பைக் மாடலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆஃப்-ரோடர் (Off-Road) வகை பைக் மாடலுக்கே டிவிஎஸ் நிறுவனம் தற்போது பேடண்ட் பதிவைச் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரோனின் எஸ்சிஆர் (Ronin SCR)-க்கே அது பேடண்ட் பதிவை செய்திருக்கின்றது.
இந்த பைக்கை ரோனினை தழுவி உருவாக்கப்பட்ட மாடல் என்பதற்கு பதிலாக அதன் ஆஃப்-ரோடு வெர்ஷன் என்று கூறலாம். இதுவே அதற்கு பொருத்தமாக இருக்கும். டிவிஎஸ் நிறுவனம் இந்த வெர்ஷனை ஏற்கனவே இந்தியாவில் காட்சிப்படுத்திவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. முதன் முதலில் டிவிஎஸ் மோட்டோ 2023 நிகழ்ச்சியிலேயே காட்சிப்படுத்தப்பட்டது.

அப்போதே பலரின் கவனத்தை ஈர்க்கக் கூடிய ஓர் பைக்காக அது மாறியது. இந்த நிலையிலேயே ரோனின் எஸ்சிஆர் பைக்கை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரும் பொருட்டு அதற்கு பேடண்ட் பதிவை டிவிஎஸ் தற்போது செய்திருக்கின்றது. இப்போது விற்பனையில் இருக்கும் ரோனின் பைக்கைக் காட்டிலும் மிக கவர்ச்சியான மற்றும் முரட்டுத் தனமான தோற்றத்தைக் கொண்டதாக ரோனின் எஸ்சிஆர் காட்சியளிக்கின்றது.
குறிப்பாக, இருக்கை, டயர், முகப்பு பகுதி உள்ளிட்டவை மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டிருக்கின்றது. இதேபோல், ஆஃப்-ரோடை சமாளிக்கும் விதமாக இதன் உயரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றது. ஆகையால், டிவிஎஸ்-இன் இந்த பைக் ஆஃப்-ரோடு பயன்பாட்டிற்கு மிக உகந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கேற்பவே சைலென்சரும் மேல் நோக்கி பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. இந்தியாவில் அட்வென்சர் மற்றும் ஸ்கிராம்ப்ளர் வகை பைக் மாடல்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. எனவேதான் இந்த பிரிவை மையப்படுத்தி தன்னுடைய தயாரிப்புகளைக் களமிறக்கத் தொடங்கி இருக்கின்றது டிவிஎஸ்.
உருவத்தில் மட்டுமே வழக்கமான ரோனினிடம் இருந்து ரோனின் எஸ்சிஆர் மாறுபட்டுக் காட்சியளிக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. முரட்டுத் தனமான பாடி பேனல், லக்கேஜை ஏற்றிச் செல்வதற்கான உலோக ரேக், லெதர் போர்த்தப்பட்ட ஒற்றைத் துண்டு குறுகலான இருக்கை அமைப்பு ஆகியவையே வழக்கமான ரோனினிடம் இருந்து ரோனின் எஸ்சிஆர் மாடலை மாறுபட்டு காட்சியளிக்கச் செய்கின்றது.
ஆமாங்க, எஞ்சின், சஸ்பென்ஷன் செட்-அப் மற்றும் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட மெக்கானிக்கல் அம்சங்களில் ரோனின் மற்றும் ரோனின் எஸ்சிஆர் இரண்டும் ஒரே மாதிரியானதாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 225 சிசி, 4 வால்வு மோட்டாரே டிவிஎஸ் ரோனின் பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த மோட்டார் அதிகபட்சமாக 20.4 பிஎச்பி பவரையும், 20 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இந்த மோட்டாருடன் வழங்கப்பட்டு இருக்கும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகம் ஆகும்.
புதிய டிவிஎஸ் ரோனின் ரூ. 1.49 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் அதிகபட்ச விலை ரூ. 1.72 லட்சம் ஆகும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இந்த பைக் ரோனின் எஸ்எஸ், ரோனின் டிஎஸ், ரோனின் டிடி மற்றும் ரோனின் டிடி ஸ்பெஷல் எடிசன் நான்கு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தினசரி பயன்பாட்டிற்கு உகந்த பைக்கை தயாரிப்பதில் பெயர்போன நிறுவனமாக விளங்கிக் கொண்டிருக்கும் டிவிஎஸ் தற்போது ஸ்போர்ட்ஸ் மற்றும் அட்வென்சர் உள்ளிட்ட பிரிவுகளிலும் அதிகம் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கின்றது. இதன் வெளிப்பாடாகவே ரோனின் அறிமுகம் மற்றும் இப்போது ரோனின் அட்வென்சர் பைக்கிற்கான பேடண்ட் பதிவு ஆகியவை அமைந்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications








