லிட்டருக்கு 67கிமீ மைலேஜ் தந்தா யாருதான் வாங்காம இருப்பா! விற்பனையில் பரோட்டாவையே மிஞ்சிரும்போல டிவிஎஸ் பைக்!
போட்டி மிகுந்த 125 சிசி பைக் பிரிவில் டிவிஎஸ் ரைடர் பைக் விற்பனையில் சாதனைப் படைத்திருக்கின்றது. விற்பனைக்கு வந்த வெகுவிரைவிலேயே அது 7 லட்சத்திற்கு அதிகமாக விற்று இமாலய சாதனையையேப் படைத்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
டிவிஎஸ் (TVS) நிறுவனத்தின் புகழ்பெற்ற இரண்டு சக்கர வாகன மாடல்களில் ரைடர் (Raider)-ம் ஒன்று. இந்த பைக்கை டிவிஎஸ் நிறுவனம் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி அன்றே இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது ஓர் ஸ்போர்ட்டி லுக் கொண்ட 125 சிசி மோட்டார்சைக்கிள் (125CC Bike) ஆகும்.

இந்தியர்கள் மத்தியில் 125சிசி பைக் மீதான மோகம் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதை முன்னிட்டே இந்த பைக்கை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கியது, டிவிஎஸ். இந்த நிலையிலேயே டிவிஎஸ் ரைடர் குறித்த ஆச்சரியமான தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது. எதை முன்னிட்டு இந்த பைக் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டதோ அதை ரைடர் மிகவும் அசால்டாக செய்திருக்கின்றது.
ஆமாங்க, இந்த பைக்கிற்கு இந்தியாவில் மிகவும் அமோகமான விற்பனை வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதுகுறித்த தகவலே தற்போது வெளியாகி உள்ளன. டிவிஎஸ் ரைடர் 125 இந்தியாவில் விற்பனைக்கு வந்து 29 மாதங்களே ஆகின்றன. இந்த நிலையில், ஜனவரி 2024 இறுதி நாள் நிலவரப்படி அந்த பைக் ஒட்டுமொத்தமாக 714,484 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றன.

இது மிகப் பெரிய விற்பனை வளர்ச்சி ஆகும். ஆகையால், ஒட்டுமொத்த வாகன உலகமும் பெருத்த ஆச்சரியத்தில் மூழ்கி இருக்கின்றது. வெறும் 29 மாதங்களில் இப்படி ஒரு வளர்ச்சியான என போட்டி நிறுவனங்கள் வாயை பிளந்திருக்கின்றன. குறிப்பாக, இந்த பைக் விற்பனைக்கு வந்த 2022 ஆம் நிதியாண்டிலேயே சுமார் 79,742 யூனிட்டுகள் விற்பனையாகி சாதனைப் படைத்தது.
இதைத்தொடர்ந்து அடுத்து வந்த நிதியாண்டு 2023இல் 2,39,388 யூனிட்டுகளும், நிதியாண்டு 2024 இல் 3,98,354 யூனிட்டுகளும் விற்பனையாகின. இது எல்லாம் ஏதோ வாய்க்கு வந்த புள்ளி விபரங்கள் அல்ல. சியாம் அளித்த அதிகாரப்பூர்வ புள்ளி விபரங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டதே இந்த தகவல்கள் ஆகும்.
மேலும், இந்த தகவல்களின் வாயிலாக டிவிஎஸ் ரைடர் பைக்கிற்கு இந்தியாவில் தொடர்ந்து வரவேற்பு அதிகரித்திருப்பதை நம்மால் உணர முடிகின்றது. முன்னதாக கூறியதைப் போலவே இந்தியாவில் 125 சிசி இரண்டு சக்கர வாகன பிரிவில் போட்டி மிகவும் அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக, இந்த பைக்கிற்கு போட்டியாக ஹீரோவின் கிளாமர் மற்றும் சூப்பர் ஸ்பிளெண்டர் பைக் மாடல்களும், பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் மற்றும் ஹோண்டாவின் ஷைன் ஆகிய பைக் மாடல்களும் களத்தில் இருக்கின்றன.
இருப்பினும் இவர்கள் அனைவரையும் சமாளித்து மிகப் பெரிய (இமாலய) சாதனையை டிவிஎஸ் ரைடர் 125 இந்தியாவில் படைத்திருக்கின்றது. டிவிஎஸ் ரைடர் ஏழைகளுக்கான ஸ்போர்ட்ஸ் பைக்காக காட்சியளிக்கின்றது. இதன் விளைவாகவே அந்த பைக்கால் இவ்வளவு விரைவில் 7 லட்சத்திற்கும் அதிகமான யூனிட் விற்பனையை எட்ட முடிந்திருக்கின்றது.
இந்த பைக் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் தற்போது விற்பனக்குக் கிடைக்கின்றது. சிங்கிள் சீட், ஸ்பிளிட் சீட் மற்றும் இசட்எக்ஸ் ஆகியவையே அவை ஆகும். இதன் ஆரம்பி விலை ரூ. 93 ஆயிரம் ஆகும். மேலும், இதன் அதிகபட்ச விலையே ரூ. 1 லட்சம் மட்டும்தான் இத்தகைய குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைப்பதும் இந்த பைக்கிற்கு இந்தியர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துக் காணப்படுவதற்கு ஓர் முக்கிய காரணியாக இருக்கின்றது.
எஞ்சினைப் பொருத்த வரை இந்த பைக்கில் 124.8 சிசி திறன் கொண்ட மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 11.4 எச்பி பவரையம், 11.2 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனே இந்த பைக்கில் வழங்கப்பட்டு உள்ளது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 99 கிமீ ஆகும்.
மேலும், இதனால் வெறும் 5.9 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ வேகத்தை எட்ட முடியும். வேகத்தை எட்டுவதில் மட்டுமல்ல மைலேஜை வழங்குவதிலும் இந்த பைக் பெஸ்ட்டாகவே இருக்கின்றது. ஒரு லிட்டருக்கே இந்த பைக் 67 கிமீ மைலேஜை வழங்கும் என நிறுவனத்தால் கூறப்படுகின்றது. இதுபோன்று ஏகப்பட்ட சிறப்புகளை டிவிஎஸ் ரைடர் தாங்கி இருக்கின்றது.
ஆகையால், விற்பனையிலும் இந்த பைக் தற்போது சிறந்து விளங்குகின்றது. தொழில்நுட்ப வசதிகளாக டிவிஎஸ் ரைடர் 125 பைக்கில் 5 அங்குல டிஎஃப்டி திரை, ப்ளூடூத் இணைப்பு வசதியுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதனை செல்போனுடன் இணைப்பதனால், செல்போனுக்கு வரும் அழைப்பு, குறுஞ்செய்திகள் உள்ளிட்டவற்றை பெற்றுக் கொள்ள முடியும்.
இதுதவிர, வாய்ஸ் மற்றும் நேவிகேஷன் அசிஸ்ட் வசதியையும் இந்த திரை ரைடருக்கு வழங்குகின்றது. இதுதவிர, பாதுகாப்பு அம்சமாக சைடு-ஸ்டாண்டு கட்-ஆஃப் வசதி வழங்கப்பட்டிருக்கின்றது. அதாவது, ஞாபக மறதியாக சைடு ஸ்டாண்டை போட்டபடி இருசக்கர வாகனத்தை இயக்கினால் தானாகவே எஞ்சினை ஆஃப் செய்யும் வசதியையே இந்த பைக்கில் டிவிஎஸ் வழங்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே உள்ள விபரங்களே இந்த பைக் ஏன் இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு விற்பனை எண்ணிக்கையை எட்டியதற்கு சான்றாக இருக்கின்றன. வரும் நாட்களிலும் இந்த பைக் இதுபோன்று இன்னும் பல சாதனைகளைப் படைக்கும் என்று நம்பப்படுகின்றது. தமிழக நிறுவனத்தின் தயாரிப்பிற்கு கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெருமிதம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








