ஒரு காலத்துல ஓஹோன்னு வித்துச்சு! ஆனா போன மாசம் ஒரு பைக் தான் வித்திருக்குது!
இந்திய மார்க்கெட்டில் ஒரு காலத்தில் டிவிஎஸ் நிறுவனத்தின் பைக்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. குறிப்பாக மிடில் கிளாஸ் மக்கள் முதல் முறையாக பைக் வாங்கும் மக்கள் பல டிவிஎஸ் நிறுவனத்தின் பைக்குகளை விரும்பி வாங்கினார்கள். இந்நிறுவனத்தின் பைக்குகள் குறைந்த விலையிலும், அதே நேரம் நீடித்த உழைப்பை தரும் வகையிலும் உருவாக்கப்பட்டு விற்பனையாகி வந்தது.
டிவிஎஸ் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி அந்நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 15 சதவீதம் உள்நாட்டு விற்பனையிலும், ஒட்டுமொத்தமாக 29 சதவீத வளர்ச்சியையும் பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் ஜுபிடர், ரைடர், அப்பாச்சி மற்றும் எக்ஸ் எல் ஆகிய வாகனங்களின் விற்பனை சிறப்பாக இருக்கிறது. மக்கள் பலர் இந்த ரக வாகனங்களை அதிகம் விரும்பி வருகிறார்கள்.

ஆனால் ஒரு காலத்தில் மக்கள் தேடி தேடி வாங்கிய வாகனம் ஒன்று கடந்த ஏப்ரல் மாதம் மிகப்பெரிய விற்பனை சரீவை சந்தித்துள்ளது. மாதம் முழுவதும் வெறும் ஒரு பைக் மட்டுமே விற்பனையாகி உள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்டார்சிட்டி பைக் தான் அது கடந்த மார்ச் மாதம் 12பைக்குகள் விற்பனையான நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் வெறும் ஒரு பைக் மட்டுமே விற்பனையாகியுள்ளது. இந்த விற்பனை 99.98சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
ஒரு காலத்தில் டிவிஎஸ் நிறுவனத்திலேயே சிறப்பாக விற்பனையாகி வந்த பைக்காக இந்த பைக் இருந்தது. கடந்த 2023ம்ஆண்டு ஏப்ரல் மாதம் கூட 4627பைக்குகள் விற்பனையாகி இருந்தன. ஆனால் தற்போது இந்த பைக்கை வாங்க ஆட்களை இல்லை. டிவிஎஸ் நிறுவனம் தற்போது ஸ்டார்சிட்டி ப்ளஸ் என்ற பைக்கை இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது. ஸ்டார்சிட்டி என்ற பைக்கை அப்டேட் செய்துதான் ஸ்டார் சிட்டி ப்ளஸ் என்ற பெயரில் விற்பனை செய்கிறது.
இந்த பைக் இந்தியாவில் மட்டும் விற்பனை செய்யப்படாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகி வருகிறது. இந்த பைக் தான் அந்நிறுவனம் விற்பனை செய்யும் பைக்குகளிலேயே மிகக் குறைவாக விற்பனையாகும் பைக்காக இருக்கிறது. தற்போது டிவிஎஸ் நிறுவனம் இந்த பைக்கை இந்தியாவிற்காக தயாரிப்பதை நிறுத்திவிட்டு, இருக்கும் ஸ்டாக்குகளை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் ஸ்டாக்குகளும் காலியாகிக் கொண்டே வருகின்றன.
இருந்தாலும் தற்போது உள்ள ஸ்டாக்குகள் பெரிய அளவில் விற்பனை இல்லை. ஒரு சில ஸ்டாக்குகள் இன்னும் விற்பனையில் இருந்தாலும் அதை விற்க முடியாமல் டிவிஎஸ் நிறுவனம் திண்டாடி தான் வருகிறது. இந்த பைக்குக்கு ஒரு காலத்தில் நல்ல பெயர் இருந்தாலும், இன்று அதைவிட நல்ல பைக்குகள் வந்து விட்டதால் மக்கள் பலர் இந்த பைக்கை மறந்து வேறு பைக்குக்கு மாறி விட்டார்கள்.
டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பைக்கை பொறுத்தவரை 109.7 சிசி இன்ஜின் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இது 8.19 பிஎஸ் பவரையும் 8.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த இன்ஜின் 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த பைக் அதிகபட்சமாக 90 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்கின் சிறப்பம்சமே இதன் மைலேஜ் தான். ஒரு லிட்டருக்கு 83 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கும் வகையில் இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் பத்து லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் இருக்கிறது. அதனால் பைக்கை ஒரு தடவை முழு டேங்க் பெட்ரோல் நிரப்பினால் 830 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.
இந்த பைக்கில் டிஸ்க் பிரேக் மற்றும் ட்யூப் லெஸ் டயர்கள் உள்ளன. இந்த பைக் மொத்தம் இரண்டு விதமான வேரியன்ட்களில் எட்டு கலர் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வந்து கொண்டிருந்தது. செக்மெண்ட்டிலேயே முதன்முறையாக இந்த பைக்கில் எல்இடி ஹெட்லைட் பொருத்தப்பட்ட பைக்காக இந்த பைக் விற்பனைக்கு வந்தது. இந்த பைக்கின் எடை மொத்தமே 116 கிலோ தான் இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முதல் தலைமுறைகள் பைக் வாங்கும் வாடிக்கையாளர்கள் பலர் இப்படியான பைக்குகளை விரும்பினார்கள். குறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் அதே நேரம் ஓட்டுவதற்கு சுலபமாக இருக்கும் பைக்காக இந்த பைக் இருந்ததால் பலர் இதை விரும்பி வாங்கினார்கள். ஆனால் இன்று மக்களின் தேவை அதிகமாகி விட்டதால் இந்த பைக்கின் விற்பனை என்பது சரிந்து விட்டது. விரைவில் இந்த பைக் முற்றிலுமாக விற்பனையிலிருந்து நிறுத்தப்படும்.


Click it and Unblock the Notifications








