புதுசா புதுசா எத்தன வண்டி வந்தாலும் இன்னும் நின்னு பேசுது! எக்ஸ்எல்100-ஐ எல்லாரும் வாங்க இதான் உண்மையான காரணமா
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள மொபட்களில் (Mopeds) ஒன்று டிவிஎஸ் எக்ஸ்எல்100 (TVS XL100). அறிமுகமே தேவையில்லை எனும் அளவிற்கு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பரிட்சயமான டூவீலர்களில் ஒன்றாக டிவிஎஸ் எக்ஸ்எல்100 திகழ்ந்து வருகிறது. ஓட்டுவதற்கு மிக எளிமையாக இருப்பதாலும், சரக்குகளை எளிமையாக கொண்டு செல்லலாம் என்பதாலும், பெண்கள், பெரியவர்கள் என பாகுபாடுகள் இன்றி, அனைத்து தரப்பு மக்களாலும், டிவிஎஸ் எக்ஸ்100 மொபட் ஓட்டப்படுகிறது. எனவே இதன் விற்பனை எண்ணிக்கை தொடர்ந்து சிறப்பாக இருந்து வருகிறது.
நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான டிவிஎஸ் எக்ஸ்எல்100 மொபட்டின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) இதை நமக்கு தெளிவாக உணர்த்துகிறது. டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 36,495 எக்ஸ்எல்100 மொபட்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

ஆனால் இந்த எண்ணிக்கை, நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 44,546 ஆக உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், 8,051 எக்ஸ்எல்100 மொபட்களை அதிகமாக விற்பனை செய்துள்ளது. இது 22.06 சதவீத வளர்ச்சி ஆகும்.
டிவிஎஸ் எக்ஸ்எல்100 மொபட் இந்தியாவின் கிராமப்புறங்களில் அதிக விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்கிறது. விவசாயிகள், பால் வியாபாரிகள் போன்றவர்களின் முதன்மையான தேர்வு என டிவிஎஸ் எக்ஸ்எல்100 மொபட்டை குறிப்பிட முடியும். இதற்கு நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்ட 2 காரணங்கள்தான் பின்புலமாக இருக்கின்றன.

அத்துடன் விலை ஒரளவிற்கு குறைவு என்பதும் கூட, இதற்கு ஒரு காரணமாக உள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டிவிஎஸ் எக்ஸ்எல்100 மொபட்டின் ஆரம்ப விலை 44,999 ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 60,905 ரூபாயாக இருக்கிறது.
இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். டிவிஎஸ் எக்ஸ்எல்100 மொபட்டில், 99.7 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 4.4 பிஎஸ் பவரையும், 3,500 ஆர்பிஎம்மில் 6.5 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
டிவிஎஸ் எக்ஸ்எல்100 மொபட்டின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 158 மிமீ ஆகும். அதே நேரத்தில் இதன் எரிபொருள் டேங்க் கொள்ளளவு 4 லிட்டர்களாக உள்ளது. யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் மற்றும் இன்ஜின் கில் ஸ்விட்ச் உள்பட ஏராளமான வசதிகளும் (Features) டிவிஎஸ் எக்ஸ்எல்100 மொபட்டில் வழங்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: குறைவான விலையில் அதிக மைலேஜ் (ஒரு லிட்டருக்கு சுமார் 80 கிலோ மீட்டர்கள்) தரக்கூடிய, அதே நேரத்தில் பராமரிப்பு செலவுகள் மிகவும் குறைவாக இருக்க கூடிய ஒரு டூவீலரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, டிவிஎஸ் எக்ஸ்எல்100 மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும். இது போன்ற காரணங்களுடன், ஓட்டுவதற்கும் எளிமையாக இருப்பதால்தான், டிவிஎஸ் எக்ஸ்எல்100 மொபட்டை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குகின்றனர்.


Click it and Unblock the Notifications








