பஜாஜ் என்றால் யாரென்று தெரியாமல் வாய் விடும் ஸ்டார்ட்-அப் நிறுவனம் - கடைசியில் என்ன நடக்க போகுதோ!!
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகுவது 2-வீலர்களில் ஆகும். குறிப்பாக, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையே நிறைய பேர் வாங்க விரும்புகின்றனர். ஆனால் மறுப்பக்கம், எலக்ட்ரிக் பைக் மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது. மிகவும் சில இவி நிறுவனங்கள் மட்டுமே எலக்ட்ரிக் பைக்குகள் உற்பத்தியில் ஈடுப்படுகின்றன. அந்த மிகவும் குறைவான இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுள் ஒன்று, அல்ட்ராவொய்லெட் (Ultraviolette) ஆகும். பெங்களூரை சேர்ந்த எலக்ட்ரிக் சூப்பர் பைக் நிறுவனமாக அல்ட்ராவொய்லெட் விளங்குகிறது.
அதாவது, இந்த நிறுவனத்தில் இருந்து உருவாக்கப்படும் எலக்ட்ரிக் பைக்குகள் அதிக விலை கொண்ட சூப்பர் பைக்குகளாக விளங்குகின்றன. இதனாலேயே, அல்ட்ராவொய்லெட் எலக்ட்ரிக் பைக்குகளின் விற்பனை அதிக எண்ணிக்கையில் இல்லை. இந்த நிலையில், இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனங்களுள் ஒன்றான பஜாஜ் ஆட்டோ உடன் பகையை அல்ட்ராவொய்லெட் நிறுவனம் ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் தனது சமீபத்திய பேட்டியில் அல்ட்ராவொய்லெட் பைக்குகளின் விற்பனை குறித்து பேசினார். "அல்ட்ராவொய்லெட்டின் விற்பனையில் எந்த அல்ட்ராவும் இல்லை" என கிண்டல் செய்யும் விதமாக ராஜீவ் பஜாஜ் பேசியிருந்தார். மேலும், நடைமுறைக்கு ஏற்றதாக இல்லையென்பதால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அளவிற்கு எலக்ட்ரிக் பைக்குகள் பிரபலமடையவில்லை எனவும் ராஜீவ் பஜாஜ் கூறினார்.
கடந்த காலங்களில் இருந்து பஜாஜ் இந்த அளவிற்கு வளர்ந்திருப்பதற்கு முக்கிய காரணமே அதன் பல்சர் பைக்குகள் தான் என்பதை நினைவுக்கூர்ந்து, ராஜீவ் பஜாஜின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக பேச துவங்கிய அல்ட்ராவொய்லெட் நிறுவனத்தின் துணை நிறுவனரும், சிஇஓ-வுமான நாராயண் சுப்பிரமணி, "இன்னும் 90 நாட்களில் ஆம்பி பள்ளத்தாக்கில் நடைபெறவுள்ள பந்தய நிகழ்ச்சியில் பஜாஜ் ஆட்டோ உடன் நாங்கள் இருக்க போகிறோம்.

பஜாஜ் ஆட்டோவிடம் உள்ளவற்றில் சிறந்ததைக் கொண்டு வருமாறு நாங்கள் அழைக்கிறோம்" என பஜாஜ் ஆட்டோவை பந்தயத்திற்கு அழைத்துள்ளார். அல்ட்ராவொய்லெட் நிறுவனம் இந்த பந்தயத்தில் அதன் அதி செயல்திறன்மிக்க எஃப்99 பைக்கை களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தாலி நாட்டின் மிலான் நகரில் கடந்த 2023ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட எஃப்99 ஆனது இந்தியாவின் அதிவேகமான எலக்ட்ரிக் 2-வீலராக கருதப்படுகிறது.
0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டிவிடக்கூடியதாக எஃப்99 விளங்குகிறது. மறுப்பக்கம், பஜாஜ் ஆட்டோவிடம் அல்ட்ராவொய்லெட் எஃப்99 அளவிற்கு செயல்திறன்மிக்க எலக்ட்ரிக் பைக் எதுவும் தற்போதைக்கு இல்லை. இன்னும் சொல்லப் போனால், எந்தவொரு எலக்ட்ரிக் பைக்கும் இப்போதைக்கு பஜாஜில் இருந்து விற்பனை செய்யப்படவில்லை. எங்களுக்கு தெரிந்தவரையில், பஜாஜ் ஆட்டோவின் சமீபத்திய அறிமுகமான பல்சர் என்.எஸ்400 இசட் பைக் ஆம்பி பள்ளத்தாக்கு பந்தயத்தில் பயன்படுத்தப்படலாம்.

அல்ட்ராவொய்லெட் எஃப்99 எலக்ட்ரிக் பைக்கில் சுமார் 121 பிஎஸ் வரையிலான இயக்க ஆற்றல் கிடைக்கிறது. ஆனால், பல்சர் என்.எஸ்400 இசட் பைக்கில் 40 பிஎஸ் வரையிலான இயக்க ஆற்றல் மட்டுமே கிடைக்கிறது. பஜாஜில் இருந்து தற்போதைக்கு சேத்தக் என்கிற ஒரேயொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக 16,000 பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஆனால், அல்ட்ராவொய்லெட் நிறுவனம் விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் வாகனத்தின் பெர்ஃபார்மன்ஸில் தான் அதிக கவனம் செலுத்துகிறது. அல்ட்ராவொய்லெட் நிறுவனத்தின் சவாலை பஜாஜ் ஏற்றுக் கொண்டதா என்பது தெரியவில்லை. ஆனால், ஆம்பி பள்ளத்தாக்கு பந்தய நிகழ்ச்சியில் அல்ட்ராவொய்லெட் நிறுவனத்திற்காகவே பஜாஜ் ஆட்டோ புதுமையாக எதையாவது செய்யும் என எதிர்பார்க்கிறோம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அல்ட்ராவொய்லெட் நிறுவனத்தின் சிஇஓ சுப்பிரமணியத்தின் சவால் ஆனது பஜாஜ் ஆட்டோ நிறுவனத்திற்கு மட்டுமல்ல, பெட்ரோல் பைக்குகளை உருவாக்கும் மற்ற நிறுவனங்களுக்கும் சேர்த்துதான். பெரிய நிறுவனங்களுக்கு எதிராக சவால்விடுவது மட்டுமில்லாமல், அதற்கேற்ப அல்ட்ராவொய்லெட் நிறுவனம் தனது முழு திறமையையும் ஆம்பி பள்ளத்தாக்கு பந்தயத்தில் காட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









