ஐரோப்பாவுக்கே இனி நம்ம மேட்-இன்-இந்தியா பைக்குகள் தான் - கொடியசைத்து துவங்கி வைத்திருப்பவர் யாரென்று தெரிகிறதா
அல்ட்ராவொய்லெட் (Ultraviolette), இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் சூப்பர் பைக் உற்பத்தி நிறுவனம். இந்தியாவில் கடந்த சில வருடங்களாக எலக்ட்ரிக் பைக்குகள் விற்பனையில் ஈடுப்பட்டுவரும் அல்ட்ராவொய்லெட் நிறுவனம், வெளிநாடுகளுக்கும் தனது பைக்குகளை அனுப்பி வைக்க உள்ளதை ஏற்கனவே நமது செய்தித்தளத்தில் பலமுறை கூறியுள்ளோம். இந்த நிலையில் அதன் ஒருபகுதியாக, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அல்ட்ராவொய்லெட் எலக்ட்ரிக் பைக்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளன. மத்திய கனரக தொழில்துறை அமைச்சரும், கர்நாடக முன்னாள் முதலமைச்சருமா்ன எச்.டி குமாரசுவாமி அவர்கள் இந்த நிகழ்வை கொடியசைத்து துவங்கி வைத்துள்ளார்.
பெங்களூரை தலைமையகமாக கொண்டு செயல்படும் அல்ட்ராவொய்லெட் நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலை பெங்களூரின் எலக்ட்ரானிக் சிட்டிக்கு அருகே 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் உள்ளது. இவ்வாறு, ஒரு முழு கன்னட இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமாக செயல்பட்டாலும், அல்ட்ராவொய்லெட்டில் தமிழ்நாட்டின் டிவிஎஸ் மோட்டார் உள்பட பல்வேறு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

பெங்களூரில் இருந்து பல்வேறு இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் அல்ட்ராவொய்லெட் நிறுவனமும் ஒன்றாகும். இருப்பினும், மற்ற எலக்ட்ரிக் பைக் நிறுவனங்கள் உடன் ஒப்பிடுகையில் அல்ட்ராவொய்லெட் ஆனது கொஞ்சம் ஸ்பெஷல் ஆனது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், அல்ட்ராவொய்லெட் நிறுவனம் உற்பத்தி செய்வது செயல்திறன்மிக்க, பவர்ஃபுல்லான எலக்ட்ரிக் சூப்பர் பைக்குகளை ஆகும்.
இதற்கேற்ப அல்ட்ராவொய்லெட் எலக்ட்ரிக் பைக்குகளின் விலைகள் சற்று அதிகமாக உள்ளன. இதன் காரணமாகவே, அல்ட்ராவொய்லெட் எலக்ட்ரிக் பைக்குகளின் விற்பனை பெரிய அளவில் இல்லை. இதனால், ஐரோப்பிய, அமெரிக்க போன்ற வெளிநாட்டு சந்தைகளை அல்ட்ராவொய்லெட் நிறுவனம் டார்க்கெட் செய்யும் என எதிர்பார்த்தோம். அதன்படி, வெளிநாட்டு வணிகங்களில் அல்ட்ராவொய்லெட் தீவிரமாக ஈடுப்பட ஆரம்பித்தது.

அதன் விளைவாக, வெளிநாடுகளில் இருந்து இந்த நிறுவனத்திற்கு சில ஆர்டர்கள் கிடைக்க ஆரம்பித்தன. குறிப்பாக, ஐரோப்பாவில் வலுவாக காலூன்ற அல்ட்ராவொய்லெட் தயாராகி வருகிறது. இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல உள்ள அல்ட்ராவொய்லெட் எலக்ட்ரிக் பைக்குகளை மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் எச்.டி குமாரசுவாமி கொடியசைத்து துவங்கி வைத்தார்.
பாஜக கட்சியை சேர்ந்த எச்.டி குமாரசுவாமி கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராகவும் இருமுறை பதவி வகித்துள்ளார். முதல் பேட்ஜ் அல்ட்ராவொய்லெட் எலக்ட்ரிக் பைக்குகளை கொடியசைத்து துவங்கி வைத்த பின் பேசிய மத்திய அமைச்சர் எச்.டி குமாரசுவாமி, "ஐரோப்பிய சந்தையில் அல்ட்ராவொய்லெட்டின் விரிவாக்கம் இந்தியாவின் வாகன தொழிலுக்கு ஒரு வரையறுக்கப்பட்ட தருணத்தை பிரதிபலிக்கிறது. இது உலக அரங்கில் போட்டியிடும் நமது நாட்டின் திறனை நிரூப்பிக்கிறது" என்றார்.

அல்ட்ராவொய்லெட் நிறுவனத்தின் தொழிற்சாலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கர்நாடக மாநிலத்தின் பெரிய மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான கேபினட் அமைச்சரான எம்.பி பாட்டீலும் கலந்துக் கொண்டார். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2016ஆம் ஆண்டில் அல்ட்ராவொய்லெட் நிறுவனத்தை நாராயண் சுப்பிரமணியம் மற்றும் நீராஜ் ராஜ்மோகன் என்பவர்கள் துவங்கினர்.
அல்ட்ராவொய்லெட் நிறுவனத்தில் இருந்து தற்சமயம் எஃப்77, எஃப்99 மற்றும் எஃப்77 மேக் 2 என 3 விதமான எலக்ட்ரிக் பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இந்த எலக்ட்ரிக் பைக்குகள் இனி ஐரோப்பாவிற்கும் செல்லவுள்ளதன் மூலம், உலக சந்தைக்கான மேட்-இன்-இந்தியா அல்ட்ராவொய்லெட் பைக்குகளை உருவாக்குவதற்கான எங்களது ஈடுப்பாட்டை அறியலாம் என அல்ட்ராவொய்லெட் நிறுவனத்தின் சிடிஓ நீராஜ் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஐரோப்பிய நாடுகளுக்கு அல்ட்ராவொய்லெட் எலக்ட்ரிக் பைக்குகள் அனுப்பி வைக்கும் பணிகள் ஜூன் மாதத்திற்கு முன்பாகவே துவங்கப்பட்டுவிடும் என எதிர்பார்த்தோம். ஆனால், சற்று தாமதமாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஐரோப்பா என குறிப்பிடாமல், மொத்த உலகிற்காக என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, வரும் காலங்களில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படவுள்ள அல்ட்ராவொய்லெட் எலக்ட்ரிக் பைக்குகள் பல வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications









