ஒரே நாள், ஒரே நேரத்தில் 2 மாடல் பல்சர் பைக் அறிமுகம்.. ஆரம்ப விலையே இவ்ளோதானா! 8-9 ஆயிரம் ரூபா மட்டுமே அதிகம்!
பஜாஜ் (Bajaj) நிறுவனத்தின் புகழ்பெற்ற பைக் மாடல்களாக பல்சர் என்எஸ்160 (Pulsar NS160) மற்றும் பல்சர் என்எஸ் 200 (Pulsar NS200) ஆகியவை இருக்கின்றன. இந்த பைக் மாடல்களின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனையே பஜாஜ் நிறுவனம் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.
அப்டேட் வாயிலாக இந்த பைக்கை லேசாக அந்நிறுவனம் ரெஃப்ரெஷ் செய்திருக்கின்றது. ஆகையால், இதன் வருகை இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, இந்த பைக்கில் ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட புதிய எல்சிடி திரை வழங்கப்பட்டு இருப்பதே இளைஞர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் அமைந்துள்ளது.

புதிதாக அப்டேட் செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கும் பல்சர் என்எஸ் 160 பைக்கிற்கு ரூ. 1.46 லட்சமும், பல்சல் என்எஸ் 200 பைக் மாடலுக்கு 1.55 லட்சம் ரூபாயும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.
மேலும், முந்தைய மாடலைக் காட்டிலும் ரூ. 9 ஆயிரம் ரூ. 8 ஆயிரம் வரை மட்டுமே அதிக விலையில் இது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இந்த விலை உயர்விற்கு புதிய அம்சங்கள் சில சேர்க்கப்பட்டு இருப்பதே முக்கிய காரணமாக இருக்கின்றது.

அந்தவகையில், மிகப் பெரிய மாற்றமாக என்எஸ் 160 மற்றும் என்எஸ் 200 ஆகிய பைக் மாடல்களில் புதிதாக எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டு இருப்பது இருக்கின்றது. இத்துடன், புதிதாக டிஆர்எல்களும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை இரண்டின் பைக்கின் முகப்பு பகுதிக்கு வேற லெவல் அழகிய தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றன.
இத்துடன், பல்சர் என்எஸ்200 மாடலில் அனைத்து பக்கத்திலும் எல்இடி இலுமினேஷன் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், எல்இடி லைட்டுகளும் எல்இடி தரத்திலானதாகக் காட்சியளிக்கின்றன. பல்சர் என்250 மாடலிலும் இதே வகை லைட்டுகளே பயன்படுத்தப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவற்றுடனேயே புதிய ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட திரை வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதனுடன் ஸ்மார்ட் ஃபோன இணைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அவ்வாறு இணைக்கும்பட்சத்தில் செல்போனுக்கு வரும் முக்கிய தகவல்கள் பலவற்றை இந்த திரை வாயிலாகக் கண்டுகொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. மேலும், அறிமுகத்தைத் தொடர்ந்து தற்போது பைக்குகள் ஷோரூம்களுக்கு வர தொடங்கி இருக்கின்றன.
அந்தவகையில், ஷோரூமில் கெத்தாக நின்றுக் கொண்டிருக்கும் பல்சர் என்எஸ் 200 பைக்கின் படம் மற்றும் வீடியோவே தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. ஸ்பிளிட் வகை இருக்கை (Split Seat), புதிய எல்இடி ஹெட்லைட் செட்-அப்பில் இந்த பைக் மிகவும் கெத்தாகக் காட்சியளிக்கின்றது.
இந்த புதிய அப்டேட் வெர்ஷன்களின் வருகையால் இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி (TVS Apache RTR160 4V), ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி (Hero Xtreme 160R 4V) மற்றும் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி (TVS Apache RTR 200 4V) மற்றும் ஹோண்டா ஹார்னெட் 2.0 (Honda Hornet 2.0) ஆகியவற்றிற்கு மிகப் பெரிய போட்டியான சூழல் உருவாகி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பல்சர் பைக் மாடல்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே பஜாஜ் நிறுவனம் அதன் அப்டேட் செய்யப்பட்ட மாடலை தற்போது விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. மிக முக்கியமாக இளைஞர்களின் ஃபேவரிட் வசதியான செல்போன் இணைப்பு வசதியையும் அதில் பஜாஜ் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது. ஆகையால், இந்த பைக்குகளுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









