யமஹா பைக்கின் எஞ்சினுடன் வலம் வரும் விஜய் ஸ்கூட்டர்.. மணிக்கு 130 கிமீ வேகத்தில் பறக்குமாம்!
இந்தியாவில் ஸ்கூட்டர் ஒன்று யமஹா பைக்கின் எஞ்சின் உடன் சுற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த ஸ்கூட்டர் பற்றிய வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, இந்த ஸ்கூட்டரில் எப்படி யமஹா பைக்கின் எஞ்சின் பொருத்தப்பட்டது என்பதே பலரின் கேள்வியாக மாறியிருக்கின்றது. மேலும், யமஹாவின் எந்த மாடல் பைக்கின் எஞ்சின் இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டு இருக்கின்றது? பைக்கின் எஞ்சினைக் கொண்டிருக்கும் அந்த ஸ்கூட்டர் மாடல் என்ன? என்பது போன்ற சந்தேகங்களும் இரண்டு சக்கர வாகன காதலர்களிடையே எழும்பியிருக்கின்றது. இதுபற்றிய விரிவான தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
இந்தியாவில் 1980-களில் அதிக ஃபேன்களைக் கொண்டிருந்த பைக் மாடல்களில் யமஹா ஆர்டி 350-ம் ஒன்றாகும். இப்போது இந்த பைக்கிற்கு இந்திய சந்தையில், குறிப்பாக, இரண்டு சக்கர காதலர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இத்தகைய புகழ்பெற்ற பைக் மாடலின் எஞ்சினே ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டு இருக்கின்றது.

விஜய் சூப்பர் ஸ்கூட்டரிலேயே அதன் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கின்றது. இந்தியாவின் இரண்டு சக்கர வாகன சந்தையில் விற்பனைக்குக் கிடைத்த மற்றுமொரு சிறந்த டூ-வீலர் மாடலே விஜய் சூப்பர் ஸ்கூட்டர் ஆகும். இதையே மிகவும் ஆக்ரோஷமானதாக இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்கள் மாற்றி இருக்கின்றனர்.
இதன் வீடியோவே இணையத்தில் தற்போது வைரலாகிக் கொண்டிருக்கின்றது. யமஹா ஆர்டி350 பைக்கின் எஞ்சினை ஸ்கூட்டரில் பொருத்தியது மட்டுமில்லாமல் அதில் இரண்டு சைலென்சர்களும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, அதன் பின்னால் லக்கேஜ் பாக்ஸ், விண்ட் ஸ்கிரீன் ஆகியவையும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. மேலும், விஜய் சூப்பர் ஸ்கூட்டரை புதிதுபோல் காண்பிப்பதற்காக அதன் நிறத்தையும் அவர்கள் மாற்றி இருக்கின்றனர்.
கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தாலேயே ஸ்கூட்டர் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கின்றது. இத்தகைய மாற்றங்களுடன் சேர்த்து ஸ்கூட்டரின் பெயரையும் அவர்கள் மாற்றி இருக்கின்றனர். யம் பிரெட்டோ என்கிற பெயரையே அவர்கள் ஸ்கூட்டருக்கு சூட்டி இருக்கின்றனர். இந்த பெயரை ஸ்கூட்டரின் குறிப்பிட்ட இடங்களில் அவர்கள் ஒட்டியும் இருக்கின்றனர்.
எஞ்சினை மாற்றியிருப்பதனால் ஸ்கூட்டருக்கு அதீத திறனை வெளிப்படுத்தும் சக்தி கிடைத்து இருக்கின்றது. இது ஓர் 347 சிசி ஏர் கூல்டு, ட்வின் சிலிண்டர், 2 ஸ்ட்ரோக் எஞ்சின் ஆகும். 27 பிஎச்பி-க்கும் அதிகமான ஆற்றலை இந்த மோட்டார் வெளிப்படுத்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
யமஹா ஆர்டி 350 விற்பனையில் இருந்த போது இரண்டு விதமான வேரியண்டுகளில் விற்பனைச் செய்யப்பட்டது. ஓர் தேர்வு அதிகபட்சமாக 30.5 பிஎச்பி பவரையும் மற்றொன்று 27 பிஎச்பி பவரையும் வெளியேற்றக் கூடிய என்பது கவனிக்கத்தகுந்தது. மேலும், இவற்றின் டாப் ஸ்பீடு மணிக்கு 130 கிமீ முதல் 140 கிமீ ஆகும்.
இத்தகைய அதிக வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாகவே யம் பிரெட்டோவாக மாறியிருக்கும் விஜய் சூப்பர் ஸ்கூட்டர் மாறியிருக்கின்றது. 1970களில் விற்பனையில் இருந்ததே விஜய் சூப்பர் ஸ்கூட்டர் ஆகும். இந்த ஸ்கூட்டரின் உற்பத்தி பணிகள் இந்தியாவில் லக்னோவிலேயே மேற்கொள்ளப்பட்டது. இது ஓர் இந்திய தயாரிப்பு ஆகும்.
ஸ்கூட்டர் இந்தியா லிமிடெட் வாயிலாகவே இது உற்பத்தி செய்யப்பட்டது. லேம்ப்ரெட்டாவை தழுவி உருவாக்கப்பட்ட ஸ்கூட்டர் மாடலே இது ஆகும். விஜய் சூப்பரில் 150 சிசி, சிங்கிள் சிலிண்டர், 2 ஸ்ட்ரோக் எஞ்சினே வழங்கப்பட்டது. இது அதிகபட்சமாக 7.5 பிஎச்பி பவரை வெளியேற்றும். இத்தகைய சூப்பரான மோட்டாரையே அகற்றி அதைவிட அதிக பவரை வெளியேற்றும் ஆர்டி 350-இன் எஞ்சினை பயன்படுத்தி இருக்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இதுபோன்று வாகனங்களைக் கலப்பினம் செய்வது தண்டனைக்குறிய செயல் ஆகும். வாகனம் பறிமுதல் செய்யப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. இத்துடன் அதிகபட்ச அபராதமும் அதன் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும். வாகனங்களில் செய்யப்படும் மாடிஃபிகேஷனுக்கு உரிய அனுமதியை ஆர்டிஓ-விடம் இருந்து பெற்றால் மட்டுமே இதுமாதிரியான நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க முடியும்.


Click it and Unblock the Notifications








