சிஎன்ஜி சிலிண்டரை கஞ்ச தனமா கொடுத்ததுக்கு பின்னால் இவ்ளோ பெரிய காரணமா! நம்ம நல்லதுக்குதான் இப்படி பண்ணாங்களா!
பஜாஜ் நிறுவனம் சமீபத்தில் ஃப்ரீடம் 125 எனும் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது ஓர் சிஎன்ஜி பைக் மாடல் ஆகும். சிஎன்ஜியில் மட்டுமல்ல பெட்ரோலிலும் இந்த பைக் இயங்கும். இதுவே உலகின் முதல் சிஎன்ஜி மற்றும் பெட்ரோலில் இயங்கும் பைக் மாடலாகும். இந்த பைக்கை மிக மிக குறைவான விலையிலேயே பஜாஜ் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. அறிமுக விலையாக இதற்கு ரூ. 95 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
ஒட்டுமொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் இந்த பைக் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், பஜாஜ் நிறுவனம் இந்த பைக்கில் வெறும் 2 கிலோ சிஎன்ஜியை மட்டுமே நிரப்பிக் கொள்ளும் வகையில் சிலிண்டரை வழங்கி இருக்கின்றது. இதேபோல், பெட்ரோலையும் இரண்டு லிட்டரை மட்டுமே நிரப்பிக் கொள்ளும் வகையில் ஃப்யூவல் டேங்க்கையும் வழங்கி இருக்கின்றது.

இந்த அளவிற்கு ஏன் கஞ்சம் என்பதே பலரின் கேள்வியாக இருக்கின்றது. குறிப்பாக, குறைந்தபட்சம் 4 முதல் 5 கிலோ வரையாவது சிஎன்ஜியை நிரப்பிக் கொள்ளும் வகையில் சிலிண்டரை பஜாஜ் கொடுத்திருக்கலாமே என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இந்த நிலையிலேயே பஜாஜ் நிறுவனம் இரண்டு கிலோ சிஎன்ஜி சிலிண்டரை வழங்கியதற்கான காரணத்தை தெரிவித்து இருக்கின்றது.
ஒருவேளை நாம் எதிர்பார்த்தபடி 4-5 கிலோ வரையிலான சிஎன்ஜியை நிரப்பிக் கொள்ளும் வகையில் சிலிண்டர் பைக்கில் கொடுக்கப்பட்டு இருக்கும் எனில் அதன் உருவம் மிகப் பெரியதாக இருக்கும். இதனால் இருக்கையின் அமைப்பில் மிகப் பெரிய சிக்கல் ஏற்பட்டு இருக்கும். மேலும், இதன் பாதுகாப்பு தரத்திலும் பிரச்னை ஏற்பட நேரிடும்.
இந்த இரண்டு முக்கிய காரணங்களுக்காக சிறிய வகை சிலிண்டரை தன்னுடைய பைக்கில் பஜாஜ் பயன்படுத்தி இருப்பதாக தெரிவித்து இருக்கின்றது. தற்போது பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருப்பது ஃபெஸோ சான்று பெற்ற சிலிண்டர் ஆகும். அதிக அடர்த்தியான மெட்டல் தகடுகளைக் கொண்டே இந்த சிலிண்டரை அது வடிவமைத்து இருக்கின்றது.
எனவே இந்த சிலிண்டர் அவ்வளவு எளிதில் எந்த பாதிப்பையும் சந்திக்காது என தெரிகின்றது. மேலும், பாதுகாப்பு கருதி அதிக அடர்த்தியாக இந்த சிலிண்டர் உருவாக்கப்பட்டு இருப்பதனால் எடையும் சற்றே அதிகமாக உள்ளது. இந்த சிலிண்டரின் எடை மட்டுமே 16 கிலோ என கூறப்படுகின்றது.
ஆகையால், எஞ்சினுக்கு அடுத்தபடியாக மிகவும் அதிக எடைக் கொண்டதாக சிஎன்ஜி சிலிண்டர் இருக்கின்றது. எனவே, இதை இன்னும் பெரியதாக பஜாஜ் உருவாக்கி இருக்கும் எனில் அதன் எடை இன்னும் பலமடங்கு அதிகரித்திருக்கும். இதன் விளைவாக சிஎன்ஜியை வேண்டுமானால் கூடுதலாக நிரப்பிக் கொள்ள முடியும்.
ஆனால், இப்போதைய அதிக மைலேஜ் திறனில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படக் கூடும். குறிப்பாக, அதிக எடைக் காரணமாக பைக்கைக் கன்ட்ரோல் செய்வதிலும் சிக்கல் ஏற்பட நேரிடலாம். இப்போதே, பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக்கின் எடை 149 கிலோ என கூறப்படுகின்றது.
ஆகையால், இந்தியாவின் மிக அதிக எடைக் கொண்ட 125 சிசி பைக்காக இது காட்சியளிக்கின்றது. உதாரணமாக ஹோண்டா ஷைன் 125 கிலோ எடைக் கொண்டதாகவும், ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் 123 கிலோ எடைக் கொண்டதாகவும் காட்சியளிக்கின்றது. அதேநேரத்தில் இந்த பைக்கின் எடை கூடுவது மட்டுமல்ல, பைக்கின் உற்பத்தி செலவையும் இது அதிகரிக்கச் செய்யும்.
இதன் விளைவாக அந்த பைக்கின் விலை ரூ. 1 லட்சத்தைகூட தாண்ட நேரிடலாம். இதுமாதிரியான பல சிக்கல்களைத் தவிர்க்கும் பொருட்டே பஜாஜ் நிறுவனம் சிறிய சிலிண்டர் இந்த பைக்கில் வழங்கி இருக்கின்றது. பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக்கில் ஒரு கிலோ சிஎன்ஜி-யை நிரப்பினால் 102 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.
அதேவேளையில், 2 கிலோ சிஎன்ஜிக்கு 200 கிமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணிக்க முடியும். அதேவேளையில், இதில் இரண்டு லிட்டர் பெட்ரோலுக்கே 130 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இத்தகைய அதிக மைலேஜ் தரும் பைக்காகவே ஃப்ரீடம் 125 தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிஎன்ஜியில் இயங்கும் கார் மற்றும் ஆட்டோக்களுக்கு மிக சிறப்பான விற்பனை வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதேமாதிரியான வரவேற்பே இந்த பைக்கிற்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். குறிப்பாக, இந்த பைக்கிற்கு வர்த்தக ரீதியாக இரண்டு சக்கர வாகனத்தை பயன்படுத்துவோர் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








