இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகள் முன்பு வரை கிளட்ச் இல்லாத பைக்காக டிவிஎஸ் ஜைவ் பைக்கை அந்நிறுவனம் விற்பனை செய்து வந்தது. மார்க்கெட்டில் உள்ள மற்ற பைக்குகளில் இருந்து வித்தியாசமாக இயங்கும் இந்த பைக் பலரது கவனத்தை ஈர்த்தாலும், இந்த பைக் தற்போது விற்பனையில் இல்லை. இந்த பைக் ஏன் விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்டது? இந்த தொழில்நுட்பத்தை ஏன் மற்ற பைக்குகளில் புகுத்தவில்லை என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் டூவீலர் விற்பனை தான் அதிக எண்ணிக்கையில் இருக்கிறது. டூவீலர் எடுத்துக் கொண்டால் அதில் டிவிஎஸ் நிறுவனத்தை நம்மால் மறக்கவே முடியாது. மக்கள் விரும்பும் ரக டூவீலர்களை எல்லாம் இந்நிறுவனம் தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னர் டூவீலர் செக்மெண்டிலேயே மிகப்பெரிய புரட்சி ஒன்றை செய்தது.

தற்போது டூவீலர் செக்மெண்டில் கிளட்ச் இல்லாத வாகனம் என்றால் பலரும் ஸ்கூட்டரை நினைத்து விடுவார்கள். ஆனால் கியர் உள்ள மற்ற பைக்குகளைப் போல கிளட்ச் இல்லாத கியர் பைக் ஒன்றை டிவிஎஸ் நிறுவனம் ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருந்தது. பலருக்கும் இந்த பைக் குறித்த தகவல் தெரியாமல் இருக்கலாம். தெரிந்தவர்களுக்கு இந்த பைக்கின் பெயர் நிச்சயம் நினைவிருக்கும் டிவிஎஸ் ஜைவ். அதைப்பற்றி தான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.
டிவிஎஸ் நிறுவனம் வெளியிட்ட ஜைவ் என்ற பைக் தான் இந்தியாவிலேயே முதல் கிளட்ச் இல்லாத பைக்காக அறிமுகமானது. இதனால் புதிதாக பைக் ஓட்டும் பலர் கிளச்சை பிடித்து அதை மெதுவாக ரிலீஸ் செய்த ஆக்சிலேட்டரை கொடுத்து கஷ்டப்படத் தேவையில்லை. சுலபமாக கியரை மாற்றி பைக்கை ஓட்டிச் செல்ல முடியும்.
ஸ்மூத்தாக சிட்டிகளில் பயணிக்கும் பலருக்கு இந்த பைக் பயனுள்ளதாக இருந்தது. டிராபிக்கில் நின்று செல்லும் சூழ்நிலையில் பைக்கில் பயணிப்பவர்கள் இந்த பைக்கை விரும்பி வாங்கினார்கள். இந்தியா போன்ற நாடுகளுக்கு இப்படியான பைக் நிச்சயம் தேவைப்படும் என்ற பேச்சு அப்பொழுது எழுந்தது. இதனால் தொடர்ந்து பல்வேறு பைக்குகள் இந்த தொழில்நுட்பத்தில் விற்பனைக்கு வரும் என பேசப்பட்டன.
டிவிஎஸ் நிறுவனம் இந்த ஜைவ் பைக்கில் கிளட்ச் இல்லாத டிமேட்டிக் இன்ஜினை பொருத்தி இருந்தது. இது ஒரு 110சிசி கொண்ட இன்ஜின் ஆகும். இது ரோட்டரி கிளியர் உடன் கூடிய ஆட்டோ கிளட்ச் தொழில்நுட்பத்தில் இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த இன்ஜினின் பவரை பொருத்தவரை 8.4 பிஎச்பி பவரை 7500 ஆர்பிஎம்மிலும், 8.3 என்எம் டார்க் திறனை 5500 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த பைக்கின் மொத்த எடையை 100 கிலோ தான் இருக்கும். இதனால் டிராபிக்குகளில் இந்த பைக்குகளை சுலபமாக எடுத்துச் சொல்ல முடியும். அதே நேரத்தில் மைலேஜும் சுமார் 60 முதல் 65 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரும் வகையில் இந்த பைக் உருவாக்கப்பட்டிருந்தது. கடந்த 2009ம் ஆண்டு தான் டிவிஎஸ் நிறுவனம் முதன் முதலில் இந்த பைக்கை அறிமுகப்படுத்தியது.
இந்த பைக் அறிமுகமாகும் போது கிளட்ச் இல்லாத பைக் என்ற பெயர் மட்டுமில்லாமல் மற்ற சில அம்சங்களும் வித்தியாசமாக இருந்தன. முக்கியமாக இந்த பைக்கில் சீட்டுக்கு அடியில் ஸ்டோரேஜ் வசதி இருந்தது. பொதுவாக பைக்குகளில் இப்படியான வசதிகள் இருக்காது. இதுபோக தண்ணீர் பாட்டிலை வைக்க தனியிடம், குடை வைக்க தனியிடம், இப்படியாக பல்வேறு வசதிகள் இருந்தன.
இப்படியாக பல்வேறு தனித்துவமான அம்சங்களுடன் இந்த பைக் விற்பனைக்கு வரும்போது வெறும் ரூபாய் 41,000 என்ற விலையில் தான் விற்பனைக்கு வந்தது. இதனால் மக்கள் எளிதாக இந்த பைக்கை வாங்க முடியும் சூழ்நிலையும் இருந்தது. ஆனால் இவை எல்லாம் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை. இந்த தொழில்நுட்பத்தை மக்கள் பெரிய அளவில் விரும்பவில்லை. இதன் விற்பனையும் பெரிய அளவில் இல்லை. இதனால் இந்த பைக் தயாரிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
கடந்த 2012-ம் ஆண்டு முதல் டிவிஎஸ் நிறுவனம் இந்த பைக்கின் தயாரிப்பை நிறுத்திவிட்டது. இந்த பைக்கின் விற்பனை எதிர்பார்த்தபடி இல்லை. புதிதாக பைக் வாங்கும் பலர் கிளட்ச் இல்லாத பைக்கை தான் தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்களிடம் இந்த பைக் ஓட்டினால் அவப்பெயர் தான் கிடைக்கும் என்ற மனநிலை இருந்தது.
கிளட்ச் உள்ள பைக் தான் முழுமையான பைக்காகவும், கிளட்ச் இல்லாத பைக் ஓட்ட தெரியாதவர்கள் ஓட்டும் பைக் எனவும் பெயர் வந்தது. இதனால் மக்கள் பலர் இந்த பைக்கை விரும்பி வாங்கவில்லை. பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட இந்த பைக் அந்த அம்சத்திற்காகவே விற்பனையில் சரிவை சந்தித்தது. இது கிளட்ச் இல்லாத பைக் என்று விளம்பரப்படுத்தியவுடன், பலர் இதை ஸ்கூட்டர் போல கியர் இல்லாத பைக் என நினைத்தார்கள்.
ஆனால் இந்த பைக்கில் கியர் ஆப்ஷன் எல்லாம் இருந்தன வழக்கமாக பைக்குகளில் எப்படி இருக்குமோ அப்படியே இருந்தன. அது கிளட்ச் மட்டும் பிடிக்க வேண்டிய தேவை இல்லாமல் தான் இருந்தது. ஆனால் மக்கள் மத்தியில் இது பெரிய அளவில் எடுபடவில்லை விற்பனை மந்தமானதால் டிவிஎஸ் நிறுவனம் இந்த பைக்கின் தயாரிப்பை நிறுத்த வேண்டிய சூழ்நிலைக்கு சென்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதெல்லாம் நடந்து நீண்ட ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இந்த தொழில்நுட்பத்தை இன்றும் வேறு எந்த நிறுவனங்களும் பயன்படுத்தவில்லை. இதை ஒரு ஃபெயிலியர் தொழில்நுட்பமாக கருதுகிறார்கள். ஆனால் மக்கள் மத்தியில் இப்படியான பைக்குகளுக்கான தேவை தற்போது அதிகரித்துள்ளது. இந்த பைக் வந்த காலகட்டம் தான் தவறு என்பதால் இதன் விற்பனை குறைந்து இருக்கலாம், தற்போது இந்த தொழில்நுட்பத்தில் ஒரு பைக் வந்தால் நிச்சயம் மக்கள் மத்தியில் விற்பனை அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications








