கம்மியான விலையில், யமஹாவில் 2-வீலர் வாங்குவதற்கு சரியான நேரம் வந்தாச்சு!! ரூ.2,999இல் மாதத்தவணை...
தீபாவளி, தசரா உள்ளிட்ட பண்டிகை நாட்கள் வந்துவிட்டாலே இந்தியா களைக்கட்ட துவங்கிவிடும். பண்டிகை கொண்டாட்டத்துடன் கொண்டாட்டமாக மக்கள் புதிய பொருட்களை வாங்க விரும்புவர் என்பதால், இந்த சீசனில் சலுகை & தள்ளுபடிகள் குறித்த அறிவிப்புகளையும் அதிகமாக பார்க்க முடியும். அந்த வரிசையில், இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனங்களுள் ஒன்றான யமஹா (Yamaha) அதன் குறிப்பிட்ட சில 2-வீலர்களுக்கு பண்டிகை கால சலுகைகளை அறிவித்துள்ளது. இதன்படி, சலுகைகளை பெற்றிருக்கும் யமஹா 2-வீலர்கள் என்ன என்பதையும், அவற்றிற்கான சலுகைகள் குறித்த விபரங்களையும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் வருட இறுதி பண்டிகை காலத்தின்போது தவறாமல் சலுகைகளை அறிவிக்கும் பைக் நிறுவனங்களுள் ஒன்று யமஹா ஆகும். இந்த வகையில், இந்த ஆண்டிற்கும் பண்டிகை கால சலுகைகளை யமஹா இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் பல்வேறு விதமான 2-வீலர்களை யமஹா விற்பனை செய்கிறது.

ஆனால், அவற்றுள் குறிப்பிட்ட சில 2-வீலர்களுக்கு மட்டுமே சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன்படி, இந்தியாவில் யமஹாவின் பிரபலமான 150சிசி பைக்குகளான எஃப்.இசட் பைக்குகளுக்கு ரூ.7,000 வரையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. யமஹா எஃப்.இசட்-எஸ் எஃப்.ஐ வெர்சன்-3 & 4 பைக்குகள் மற்றும் எஃப்.இசட் எஃப்.ஐ பைக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.7,000 வரையிலான பணம் தள்ளுபடியையும், ரூ.7,999-இல் இருந்து குறைந்த மாதத்தவணை திட்டத்தையும் பெறலாம்.
அதேபோல், தனது ஹைப்ரீட் ஸ்கூட்டர்களுக்கும் யமஹா சலுகைகளை அறிவித்துள்ளது. இதன்படி, யமஹா ஃபேஸினோ 125 எஃப்.ஐ ஹைப்ரீட் மற்றும் ரே இசட்.ஆர் 125 எஃப்.ஐ ஹைப்ரீட் ஸ்கூட்டர்களை ரூ.4,000 பணம் தள்ளுபடி உடன் வாங்கலாம். மேலும், இந்த யமஹா ஹைப்ரீட் ஸ்கூட்டர்கள் ரூ.2,999 என்கிற குறைந்த மாதத்தவணை திட்டத்தில் இருந்து விற்பனைக்கு கிடைக்கும்.

ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவில் பல்வேறு விதமான பைக்குகளையும், ஸ்கூட்டர்களையும் யமஹா விற்பனை செய்கிறது. பைக்குகள் என்று பார்த்தால், யமஹா ஒய்.இசட்.எஃப்-ஆர்3, எம்டி-03, ஒய்.இசட்.எஃப்-ஆர்15எம், ஒய்.இசட்.எஃப்-ஆர்15 வி4, ஒய்.இசட்.எஃப்-ஆர்15எஸ் வி3, எம்டி-15 வி2 மற்றும் மேற்கூறப்பட்ட எஃப்.இசட் பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. மேற்கூறப்பட்ட எஃப்.இசட் பைக்குகள் மட்டுமில்லாமல், எஃப்.இசட்-எக்ஸ் என்கிற எஃப்.இசட் பைக்கையும் யமஹா இந்தியாவில் விற்பனை செய்கிறது.
ஆனால், யமஹா எஃப்.இசட்-எக்ஸ் பைக்கிற்கு சலுகைகள் எதுவும் தற்போது அறிவிக்கப்படவில்லை. யமஹா ஸ்கூட்டர்கள் என்று பார்த்தால், ஏரோக்ஸ் 155 வெர்சன் எஸ், ஏரோக்ஸ் 155, ஃபேஸினோ எஸ் 125 எஃப்.ஐ ஹைப்ரீட், ஃபேஸினோ 125 எஃப்.ஐ ஹைப்ரீட், ரே இசட்.ஆர் 125 எஃப்.ஐ ஹைப்ரீட் மற்றும் ரே இசட்.ஆர் ஸ்ட்ரீட் ராலி 125 எஃப்.ஐ ஹைப்ரீட் உள்ளிட்டவை இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.

எஃப்.இசட்-எஸ் எஃப்.ஐ பைக்கில் 149சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 7,250 ஆர்பிஎம்-இல் 12.3 பிஎச்பி மற்றும் 5,500 ஆர்பிஎம்-இல் 13.3 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி உடன் எல்சிடி கன்சோல் மற்றும் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக யமஹா எஃப்.இசட்-எஸ் பைக்கில் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: யமஹாவில் இருந்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் 2-வீலர்களாக எஃப்.இசட், ஃபேஸினோ மற்றும் ரே இசட்.ஆர் விளங்குகின்றன. தற்போது அவற்றின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியாக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சலுகைகள் மேற்கூறப்பட்ட யமஹா 2-வீலர்களின் விற்பனையை அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









