திருநெல்வேலி வேற லெவலுக்கு மாற போகுது!! ரோடு முழுக்க இனி இப்படிப்பட்ட எலக்ட்ரிக் வாகனங்கள் தான்!
யுலு (Yulu), இந்தியாவின் முன்னணி லாஸ்ட்-மைல் டெலிவிரி சேவை நிறுவனங்களுள் ஒன்று. குறிப்பாக, எலக்ட்ரிக் வாகனங்கள் மூலமாக சேவையை வழங்குவதில் நிபுணத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பெங்களூர், மும்பை, டெல்லி உள்ளிட்ட மாநகரங்களில் ஆதிக்கம் செலுத்திவரும் யுலு, தற்போது நம் தமிழ்நாட்டில் தென் மாவட்ட நகரம் ஒன்றில் தனது சேவையை துவங்கியுள்ளது. இத்தனைக்கும் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் யுலு சேவை இல்லை. அப்படியிருக்கும் போதிலும், சென்னைக்கு பதிலாக தென் தமிழ்நாட்டு நகரத்தை யுலு தேர்வு செய்துள்ளது. அப்படி எந்த தமிழ்நாட்டு நகரத்தில் யுலு தனது சேவையை துவங்கியுள்ளது? என்பதை பற்றி இனி பார்க்கலாம்.
பொது வாகன சேவையை பயன்படுத்தினாலே போக்குவரத்து நெரிசல் இருக்காது என்பது பலரது கருத்தாக உள்ளது. அதாவது, பேருந்து, ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட கமர்ஷியல் போக்குவரத்து முறைகளை பயன்படுத்தினால் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை குறையும். சமீப காலமாக, பைக் டாக்ஸி சேவையும் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் அதிகரித்து வருகிறது.

பைக் டாக்ஸி ஆனது ஏழை, எளிய மக்களுக்கு இன்னும் ஏற்றதாக குறைவான கட்டணங்களில் வழங்கப்படுகிறது. அவ்வாறு, பைக் டாக்ஸி சேவையை வழங்கிவரும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்று, யுலு ஆகும். வட இந்தியாவில் பலருக்கு பரீட்சையமான சேவை நிறுவனமாக விளங்கினாலும், தென்னிந்தியாவில் பெங்களூரை தவிர்த்து யுலு சேவை பரவலாக இல்லை என்பதே உண்மை. இந்த நிலையில்தான், நம் தமிழ்நாட்டில் ஓர் தென் மாவட்ட நகரத்தில் யுலு தனது சேவையை வழங்கியுள்ளது.
அந்த தென் மாவட்ட நகரம் வேறு எதுவும் இல்லை, திருநெல்வேலி ஆகும். இதற்காக, திருநெல்வேலி மாநகரில் செயல்பட்டுவரும் ருனா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் யுலு கூட்டணி ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இந்த சேவை அறிமுக நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாநகரின் உதவி போக்குவரத்து போலீஸ் கமிஷ்னர் திரு. கே பி காமேஷ்வரன் முன்னிலை வகித்தார். மேலும், தமிழ்நாட்டில் யுலு நிறுவனத்தை முன்னின்று வழிநடத்தும் திரு. என் ராகுல், திரு. சி ஜிஜின் துரை உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

யுலு நிறுவனத்தின் உதவியுடன், டெக்ஸ் ஜி.ஆர் எலக்ட்ரிக் 2-வீலர் வாகனங்கள் மூலமாக ருனா மோட்டார்ஸ் சார்பில் திரு. வி. நாகராஜன் என்பவர் திருநெல்வேலி மாநகரில் இந்த சேவையை வழங்கவுள்ளார். இவர் தான் ருனா மோட்டார்ஸை நிறுவியவர் ஆவார். திருநெல்வேலி மாநகரத்தை மாடர்ன் ஆனதாகவும், ஸ்மார்ட் ஆனதாகவும் மாற்றுவது நாகராஜனின் விருப்பமாக உள்ளது.
இவ்வாறு வேறு நிறுவனத்துடன் இணைந்து யுலு தனது சேவையை வழங்கவுள்ள 3வது நகரம் திருநெல்வேலி ஆகும். இதேபோன்று இதற்கு முன்னர், மத்திய பிரதேசத்தின் இந்தூர் மற்றும் கேரளாவின் கொச்சி நகரங்களில் தனது சேவையை துவங்கி இருந்தது. திருநெல்வேலி ஆனது சிமெண்ட், பருத்தி, சர்க்கரை உள்ளிட்டவற்றின் உற்பத்தி இடமாக சிறந்து விளங்குகிறது.
திருநெல்வேலி மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து மாணவர்கள், வேலை தேடுபவர்கள் திருநெல்வேலி நகரத்திற்கு வருகின்றனர். குறிப்பாக, மருத்துவ உதவிகளை நாடி கேரளாவில் இருந்து கூட நிறைய பேர் திருநெல்வேலிக்கு வருகின்றனர். பைக் டாக்ஸி ஆனது யுலு நிறுவனத்தின் வணிகத்தின் மிகவும் சிறிய பகுதிதான். இன்னும் சொல்லப்போனால், பைக் டாக்ஸி சேவையை இந்தியாவில் மிகவும் சில பகுதிகளில் மட்டுமே இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.
யுலுவின் பிரதான வணிகம் என்னவென்றால், ஆன்லைன் உணவு டெலிவிரி நிறுவனங்களுக்கு டெலிவிரிக்கான வாகனங்களை வழங்குவது ஆகும். இதற்காக ஸ்விகி, சொமாட்டோ போன்ற நிறுவனங்களுடன் நாடு தழுவிய அளவில் யுலு கூட்டணியில் உள்ளது. இவ்வாறான வணிகத்தை இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. என்றாலும், யுலுவின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த பணிகளுக்கு எலக்ட்ரிக் வாகனங்களை உட்படுத்துவது ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: யுலு நிறுவனத்தின் டார்க்கெட் சமீப காலமாக மெட்ரோ அல்லாத நகரங்கள் மீது உள்ளது. இது, அந்த நகரங்களில் யுலு வணிகத்தை மெதுவாக வளர்ச்சி அடைய செய்யும் என்றாலும், திருநெல்வேலி போன்ற மெட்ரோ அல்லாத நகரங்களின் வளர்ச்சிக்கு இவ்வாறு தேசிய அளவிலான நிறுவனங்களின் வருகை பொருளாதார ரீதியாக உந்துதலாக இருக்கும். திருநெல்வேலியை தொடர்ந்து தமிழ்நாட்டில் மேலும் சில நகரங்களில் யுலு தனது வணிகத்தை துவங்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








