ஹீரோ உடன் சேர்ந்து ஜீரோ செய்ய இருக்கும் மாயாஜாலம்.. இதோட லுக்க பாத்தா கன்ஃபார்மா இந்தியர்கள கவுத்திரும் போலையே
கலிஃபோர்னியாவை மையமாகக் கொண்டு இயங்கும் இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஜீரோ மோட்டார்சைக்கிள்ஸ் (Zero Motorcycles). இந்த நிறுவனத்தின் தயாரிப்பு ஒன்றே இந்திய சாலையில் வலம் வரும் புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கின்றது. இந்திய சாலையில் தரிசனத்தை வழங்கியது ஜீரோ மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் புகழ் பெற்ற தயாரிப்பான எஃப்எக்ஸ்இ (FXE) ஆகும். இது ஓர் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஆகும். கர்நாடகா சாலையிலேயே இந்த டூ-வீலர் வலம் வந்திருக்கின்றது. அப்போது எடுக்கப்பட்ட படங்களே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.
ஜீரோ மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தன்னுடைய ஒரு தயாரிப்பைகூட இதுவரை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வரவில்லை. இந்த மாதிரியான சூழலிலேயே அதன் எஃப்எக்ஸ்இ மாடல் பைக் பெங்களூரு நகர சாலையில் வலம் வரும் படங்கள் வெளியாகி உள்ளன. இதுவே, இந்த வாகனம் காட்சி தருவது முதல் முறையாகும். இதன் வாயிலாக, விரைவிலேயே ஜீரோ மோட்டார்சைக்கிள்ஸ் அதன் தயாரிப்புகளை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வந்துவிடும் என்பது தெரிய வந்துள்ளது.

எஃப்எக்ஸ்இ ஓர் அட்டகாசமான எலெக்ட்ரிக் பைக் ஆகும். இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஓலா (Ola) சமீபத்தில் அறிமுகப்படுத்திய ரோட்ஸ்டர் எக்ஸ் (Roadster X)-க்கு மிகப் பெரிய போட்டியாக அமையும். ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் ஓர் மலிவு விலை எலெக்ட்ரிக் பைக் மாடலாகும்.
ரூ. 74,999 என்கிற ஆரம்ப விலையில் இருந்தே இது விற்பனைக்குக் கிடைக்கிறது. அறிமுகத்தைத் தொடர்ந்து இ-பைக்கிற்கான புக்கிங் பணிகளை ஓலா நாட்டில் தொடங்கி இருக்கின்றது. ஆனால், டெலிவரி பணிகள் 2025 ஆம் நிதியாண்டின் இறுதி காலாண்டிலேயே தொடங்கப்பட உள்ளன. இந்த மாதிரியான சூழலிலேயே ஜீரோ எஃப்எக்ஸ்இ எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் அதன் தரிசனத்தை வழங்கி இருக்கின்றது.

image source: team bhp ஜீரோ மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் ஹீரோ மோட்டோகார்ப் உடனான கூட்டணியின் வாயிலாகவே அதன் தயாரிப்புகளை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்னரே தங்களின் கூட்டணியை இவர்கள் உறுதிப்படுத்தினார்கள் என்பது கவனிக்கத்தகுந்தது. மேலும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஜீரோ மோட்டோர்சைக்கிள்ஸ் நிறுவனத்தில் 60 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது.
இந்த முதலீடானது 2022 ஆம் ஆண்டின் இறுதியிலேயே மேற்கொள்ளப்பட்டு விட்டதாக கூறப்படுகின்றது. இதைத்தொடர்ந்தே இந்த பிராண்டின் தயாரிப்புகளை இந்தியாவில் களமிறக்கும் முயற்சியில் இரு நிறுவனங்களும் களமிறங்கி இருக்கின்றன. முன்னதாக, ஜீரோ நிறுவனத்தின் எஸ்ஆர்/எஸ் எலெக்ட்ரிக் பைக்கே விற்பனைக்குக் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இது ஓர் முழு சார்ஜில் 301 கிமீ ரேஞ்ஜை தரக் கூடிய ஓர் தரமான இ-பைக் ஆகும். மேலும், இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 200 கிமீ ஆகும். ஆனால், இது இப்போது வராது, முதல் மாடலாக எஃப்எக்ஸ்இ மாடலே விற்பனைக்கு வரும் என்பதே தற்போது தெரிய வந்திருக்கின்றது.
மிகவும் தனித்துவமான தோற்றத்தைக் கொண்ட ஓர் எலெக்ட்ரிக் பைக் மாடலே ஜீரோ எஃப்எக்ஸ்இ ஆகும். சூப்பர்மோட்டோ பைக்குகளைப் போன்ற வடிவமைப்பையே அது பெற்றிருக்கின்றது. இந்த லுக்கிற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக வட்டமான எல்இடி ஹெட்லைட், உயரமான கைப்பிடிகள் மற்றும் ஒற்றை-துண்டு அமைப்புடைய இருக்கை ஆகியவற்றை இந்த இ-பைக் கொண்டுள்ளது.
பேட்டரி பேக்கைப் பொருத்தவரை இந்த மின்சார பைக்கில் 7.2 kWh பேட்டரி பேக்கே எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஓர் முழு சார்ஜில் 169 கிமீ வரை ரேஞ்ஜ் தரும். மேலும் இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 137 கிமீட்டராக இருக்கும் என தெரிகின்றது. இந்த சூப்பரான செயல்திறனுக்காக 46.6 பிஎஸ் மற்றும் 105.7 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்க கூடிய எலெக்ட்ரிக் மோட்டாரே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட இருக்கின்றது.
இதே அம்சங்களுடனேயே தற்போது உலக சந்தையில் எஃப்எக்ஸ்இ விற்கப்படுகின்றது. இந்த இ-பைக்கை 650W சார்ஜரைப் பயன்படுத்தி சார்ஜ் செய்யும் போது பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 9.7 மணிநேரம் ஆகுமாம். ஆனால், ஃபாஸ்ட் சார்ஜிங் கருவியில் வைத்து சார்ஜ் செய்யும்போது சில மணி நேரங்களிலேயே அதை முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும்.
இத்துடன், மிக சிறந்த இயக்க அனுபவத்திற்காக இந்த மின்சார பைக்கில் ஷோவா 41 மிமீ இன்வெர்டெட் ஃபோர்க் மற்றும் 40 மிமீ மோனோஷாக் ஆகியவையே வழங்கப்பட இருக்கின்றன. ஆகையால், ரைடு இன்னும் சிறந்ததாக இருக்கும் என தெரிகின்றது. இதுமட்டுமில்லைங்க, சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக இ-பைக்கின் முன் வீலில் 320 மிமீ அளவுள்ள டிஸ்க்கும், பின் வீலில் 240 மிமீ அளவுள்ள டிஸ்க்கும் வழங்கப்பட இருப்பது தெரிய வந்திருக்கின்றது.
இத்துடன், ஏபிஎஸ்-ம் வழங்கப்பட இருக்கின்றது. மேலும், சிறந்த செயல்திறனுக்காக 17 அங்குல அலாய் வீல்களுடன் பைரெல்லி டையப்லோ ரோஸ்ஸோ II வகை டயர்களே வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மின்சார பைக் எப்போது விற்பனைக்கு வரும்? என்ன விலையில் விற்பனைக்கு வரும் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை? விரைவில் இதுபற்றிய அனைத்து முக்கிய விபரங்களும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இந்தியர்களின் கவனத்தை திசை திருப்பும் விதமாக ஜீரோ மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் அதன் எஃப்எக்ஸ்இ மின்சார பைக்கின் சோதனையோட்டத்தை நாட்டில தொடங்கி இருக்கின்றது. இந்த இ-பைக் வரும் பண்டிகைக் காலம் அல்லது இந்த ஆண்டின் இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









