இந்தியாவில் பைக்குகளை கூவி, கூவி விற்கும் சீன நிறுவனம்!! ரூ.48,000 வரை விலையை குறைத்து அதிரடி!
ஜோன்டெஸ் (Zontes), சீனாவை சேர்ந்த மோட்டார்சைக்கிள் நிறுவனம். ஆதிஷ்வர் ஆட்டோ ரைட்ஸ் என்ற நிறுவனத்தின் மூலமாக இந்தியாவில் செயல்பட்டுவரும் இந்த நிறுவனம் அதன் மோட்டார்சைக்கிள்களின் விலைகளை அதிரடியாக குறைத்துக் கொண்டுள்ளது. இதன்படி, முன்பை விட எவ்வளவு குறைவான விலையில் ஜோண்டெஸ் பைக்குகளை வாங்கலாம் என்பதை பற்றி இனி பார்க்கலாம்.
சீனாவை சேர்ந்த ஜோண்டெஸ் நிறுவனம் இந்தியாவில் 350ஆர், 350எக்ஸ், 350டி மற்றும் 350டி அட்வென்ச்சர் உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்கிறது. இதில், 350டி மோட்டார்சைக்கிள் அதிகப்பட்ச விலை குறைப்பை பெற்றுள்ளது. 350டி பைக்கின் விலையை ஜோண்டெஸ் நிறுவனம் சுமார் ரூ.48,000 குறைத்துக் கொண்டுள்ளது.

இதன் விளைவாக, ஜோண்டெஸ் 350டி பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.99 லட்சமாக குறைந்துள்ளது. ஜோண்டெஸ் 350ஆர் மற்றும் 350எக்ஸ் பைக்குகளின் விலைகள் அதிரடியாக ரூ.46,000 குறைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த விலை குறைப்பால், 350ஆர் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.79 லட்சமாக குறைந்துள்ளது.
அதேபோல், ஜோண்டெஸ் 350எக்ஸ் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.99 லட்சமாக குறைந்துள்ளது. இவற்றிற்கு அடுத்து, அதிகப்பட்ச விலை குறைப்பை பெற்ற ஜோண்டெஸ் பைக்காக 350டி அட்வென்ச்சர் விளங்குகிறது. இதன் விலை ரூ.42,000 குறைக்கப்பட்டுள்ளது. ஜோண்டெஸ் 350டி பைக்கின் புதிய எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.99 லட்சம் ஆகும்.

விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் ஜோண்டெஸ் பைக்குகளை இந்தியாவில் மோட்டோவால்ட் ஷோரூம்கள் மூலமாக வாங்கலாம். இதே ஷோரூம்களில்தான் க்யூ.ஜே மோட்டார்ஸும் தனது தயாரிப்பு வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இருப்பதிலேயே விலை குறைவான பைக்காக விளங்கும் ஜோண்டெஸ் 350ஆர் ஆனது ஓர் ஸ்ட்ரீட்-நாக்டு ரோட்ஸ்டர் ரக பைக் ஆகும்.
இந்த பைக்கில் 348சிசி, லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்ச்மாக 9,500 ஆர்பிஎம்-இல் 38.8 பிஎச்பி மற்றும் 7,500 ஆர்பிஎம்-இல் 32.8 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பைக்கிற்கு வழங்கக்கூடியதாக உள்ளது. தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், டிஎஃப்டி டிஸ்பிள் மற்றும் டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம் உள்ளிட்டவை ஜோண்டெஸ் 350ஆர் பைக்கில் இடம்பெறுகின்றன.

ஜோண்டெஸ் 350எக்ஸ் பைக்கை பொறுத்தவரையில், இது ஸ்போர்ட்ஸ் டூரிங் பைக் ஆகும். இதன் காரணமாக, 350ஆர் பைக் உடன் ஒப்பிடுகையில் இந்த பைக் முன்பக்கத்தில் கூடுதலாக போல்ட்டான ஃபேயிரிங்கை கொண்டுள்ளது. மற்றப்படி என்ஜினில் 350ஆர் மற்றும் 350எக்ஸ் பைக்குகளுக்கு இடையே எந்த வித்தியாசமும் இல்லை. கேடிஎம் 390 ட்யூக், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்310, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்.ஆர்310 மற்றும் கேடிஎம் ஆர்சி200 உள்ளிட்டவற்றிற்கு ஜோண்டெஸ் 350ஆர் மற்றும் 350எக்ஸ் பைக்குகள் போட்டியாக உள்ளன.
ஜோண்டெஸ் 350டி மற்றும் 350டி அட்வென்ச்சர் பைக்குகள் அவற்றின் பெயருக்கேற்ப கரடு முரடான சாலைகளுக்கும் கொண்டுச் செல்லக்கூடிய அட்வென்ச்சர் பைக்குகளாக விளங்குகின்றன. குறிப்பாக, 350டி அட்வென்ச்சர் ஆனது அட்வென்ச்சர் பயணங்களுக்கு மிகவும் ஏற்ற பைக்காக விளங்குகிறது. இதற்கேற்ப 350டி அட்வென்ச்சர் பைக்கில் ட்யூப்லெஸ் டயர்கள், வயர்-ஸ்போக் அலாய் சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜோண்டெஸ் பைக்குகளை நிறைய பேர் இப்போதுதான் முதல்முறையாக கேள்விப்படுகிறீர்கள் என நினைக்கிறேன். ஏனெனில், இந்த சீன பைக்குகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு 1 வருட காலம் மட்டுமே ஆகிறது. இவ்வாறு மக்கள் பலரால் அறியப்படாத பைக்குகளின் விற்பனையை அதிகரிக்க வேண்டுமெனில், இவ்வாறான விலை குறைப்புகள் அவசியமாகின்றன.


Click it and Unblock the Notifications









