1972 புல்லட் பைக்கை இப்போது வைத்திருப்பதே பெரிய விஷயம்! ஓடுறது மொத்தமும் டீசல் தான்...
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield), பழமையான பைக் நிறுவனம் என்பது மட்டுமின்றி, கடந்த காலங்களில் இருந்து பல புதுமையான முயற்சிகளை கடந்து வந்துள்ள பைக் நிறுவனம் ஆகும். அந்த முயற்சிகளுள் முக்கியமானது, பைக்குகள் என்றாலே பெட்ரோலில் இயங்கக்கூடியவை என்கிற நிலைமை மாறி, டீசலில் இயங்கக்கூடிய பைக்கையும் ராயல் என்ஃபீல்டு களமிறக்கியது ஆகும். அதுதான், ராயல் என்ஃபீல்டு தாரஸ் (Taurus) பைக் ஆகும். ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தை போன்று, உலகளவில் சில பைக் நிறுவனங்களும் டீசல் பைக்குகளை உற்பத்தி செய்யும் முயற்சியில் இறங்கின.
இந்தியாவிலும் சூராஜ் (Sooraj) டீசல் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், ராயல் என்ஃபீல்டு தாரஸ் மட்டுமே அதிக எண்ணிக்கையில் பரவலாக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், நாங்கள் இங்கு கூறுவது எல்லாம் பல வருடங்களுக்கு முன்னர் நடந்த கதை ஆகும். தற்போது டீசல் பைக் எதுவும் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவது இல்லை.

ஆனால், கேரளாவில் வயதான ஒருவர் டீசல் பைக்கை இப்போதும் பயன்படுத்தி வருகிறார். இதில், ஆச்சிரியமான விஷயம் என்னவென்றால், இது ராயல் என்ஃபீல்டு தாரஸ் பைக்கோ அல்லது சூராஜ் டீசல் பைக்கோ கிடையாது. இது இவராகவே உருவாக்கிய டீசல் பைக் ஆகும். பைக்கை மொத்தமாக இவரே உருவாக்கவில்லை, ராயல் என்ஃபீல்டு பெட்ரோல் பைக்கை டீசல் பைக்காக மாற்றியுள்ளார்.
பெட்ரோல் பைக்கை டீசல் பைக்காக மாற்றுவது அவ்வளவு எளிதான காரியம் ஒன்றும் கிடையாது. அதிலிலும், வயதான காலத்தில் இவர் மாற்றியிருப்பது 1972ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பெட்ரோல் ராயல் என்ஃபீல்டு பைக் ஆகும். இந்த பைக்கிற்கான பார்ட்ஸ் இப்போது மார்க்கெட்டில் கிடைக்கிறதா என்பதே பெரிய சந்தேகம். அதிலிலும், 1972ஆம் ஆண்டு பைக்கை டீசல் பைக்காக மாற்றுவதற்கு தேவையான பாகங்களை இப்போது பெறுவது என்பது மிகவும் சிரமமான காரியம் ஆகும்.

ஆனால், கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பே பெட்ரோல் பைக்கை டீசல் பைக்காக மாற்றி இப்போதும் தொடர்ந்து பயன்படுத்திவரும் இந்த முதியவர், கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கருநாகப்பள்ளி என்கிற நகரத்தில் வசித்து வருகிறார். 1972ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக்கை இவர் புதியதாக ஒன்றும் வாங்கவில்லை. அதாவது, இந்த பைக்கின் முதல் கஸ்டமர் இவர் கிடையாது.
சுமார் 53 வருட பழமையான இந்த புல்லட் பைக்கை 34 வருடங்களுக்கு முன்னர் இந்த முதியவர் அதன் முந்தைய உரிமையாளரிடம் இருந்து வாங்கியுள்ளார். பைக்கின் முந்தைய உரிமையாளரை பற்றிய விபரங்கள் கிடைக்க பெறவில்லை. இந்த முதியவர் இந்த புல்லட் பைக்கை ஆரம்ப காலக்கட்டத்தில் பயன்படுத்தியது மற்றும் டீசல் பைக்காக மாற்றியது எல்லாம் சென்னையில் ஆகும். ஆதலால், இந்த பைக்கின் முந்தைய உரிமையாளர் சென்னையை சேர்ந்தவராக இருக்கலாம்.
சென்னையில்தான் இந்த பழைய புல்லட் பைக்கை பெட்ரோல் பைக்காக இருந்து டீசல் பைக்காக மாற்றியுள்ளார் என்பதால், தற்போது படங்களில் பார்க்கும் இந்த டீசல் பைக்கில் நம்ம சென்னை மெக்கானிக்குகளின் கை வண்ணம் தான் ஒளிர்கிறது. முன்பு பெட்ரோல் என்ஜினை கொண்டிருந்த இந்த புல்லட் பைக்கில் கிராம்ப்டன் க்ரீவீஸ் (Crompton Greaves) நிறுவனத்தின் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த டீசல் என்ஜின் முன்பு பைக்கிலோ அல்லது காரிலோ பொருத்தப்பட்டது கிடையாது. நீர் குழாய்க்காக (Water Pump) பயன்படுத்தப்பட்டது ஆகும். அதேநேரம், இந்த புல்லட் பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ள ஸ்டார்டர் (Starter) ஆனது முன்னதாக மாருதி (Maruti) காரில் பயன்படுத்தப்பட்டது ஆகும். அதேபோல், இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள கிரான்க் (Crank) ஆனது பழைய ஃபியட் (Fiat) காரில் பயன்படுத்தப்பட்டது ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டீசல் வாகனங்களின் முக்கியமான சிறப்பம்சமே அவற்றின் அதிகப்படியான மைலேஜ் ஆகும். இதனாலேயே இந்த முதியவர் பல வருடங்களுக்கு முன்பே இந்த புல்லட் பைக்கை டீசல் பைக்காக மாற்றியுள்ளார். அதிகப்பட்சமாக லிட்டருக்கு சுமார் 80கிமீ-இல் இருந்து 100கிமீ வரையிலான மைலேஜை வழங்கக்கூடியதாக இந்த டீசல் புல்லட் பைக் இருப்பதாக இவர் தெரிவிக்கிறார்.


Click it and Unblock the Notifications










