யாரையும் எளிதில் கவரும் தோற்றம்... ஓசூரில் உருவாகும் இ-ஸ்கூட்டர்களுள் பெஸ்ட்டை கண்டுப்பிடிக்குறது கஷ்டம்!!
ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் புதிய '450' எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter)-களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. 450எஸ், 450எக்ஸ் மற்றும் 450 அபெக்ஸ் என்பன அவை ஆகும். இதில், 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது மார்க்கெட்டில் பிரபலமான ஓலா எஸ்1 புரோ (Ola S1 Pro) மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் எஸ்டி (TVS iQube ST) எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு விற்பனையில் போட்டியாக உள்ளது. இந்த 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இடையேயான ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் நிறுவனங்களுள் ஏத்தர் எனர்ஜியும் ஒன்று. பெங்களூரு (Bengaluru)-ஐ தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்துக்கு தமிழ்நாட்டில் ஓசூரில் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. ஓலா எனர்ஜி மற்றும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனங்களும் தங்களது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓசூரில் தான் உற்பத்தி செய்கின்றன.

விலை: புதிய மேம்படுத்தப்பட்ட ஏத்தர் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 2.9kWh மற்றும் 3.7kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், 3.7kWh பேட்டரி உடனான ஏத்தர் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தான் மற்ற இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உடன் ஒப்பீடு செய்ய முடியும். ஏனெனில், அவற்றில் பொருத்தப்படும் பேட்டரிகள் அந்த அளவிற்கு திறன் கொண்டவைகளாக விளங்குகின்றன.
3.7kWh பேட்டரி உடன் ஏத்தர் 450 எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.1 லட்சத்து 56 ஆயிரத்து 999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவே 4kWh திறன் கொண்ட பேட்டரியை கொண்ட ஓலா எஸ்1 புரோ ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.44 லட்சமாகவும், 3.4kWh பேட்டரியை கொண்ட டிவிஎஸ் ஐக்யூப் எஸ்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.1.66 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிசைன்: தோற்றத்தை பொறுத்தவரையில், மற்ற இரண்டை காட்டிலும் புதிய ஏத்தர் 450எக்ஸ் ஆனது வித்தியாசமானது ஆகும். இத்தனைக்கும் 2025 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் தோற்றத்தில் பெரியதாக மாற்றம் கொண்டுவரப்படவில்லை. ஷார்ப்பான டிசைனில் எல்இடி டி.ஆர்.எல்-கள் உடன் எல்இடி ஹெட்லைட்களை புதிய 450எக்ஸ் பெற்றுள்ளது. அதுவே, ஓலா எஸ்1 புரோ மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் ஆனது ஸ்கூட்டர்களுக்கே உண்டான வளைவான தோற்றம் கொண்டவை ஆக விளங்குகின்றன.
ரேஞ்ச்: 2025 ஏத்தர் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள 3.7kWh திறன் கொண்ட பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 156கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். அதுவே, ஓலா எஸ்1 புரோவின் 4kWh பேட்டரி ஆனது சிங்கிள்-சார்ஜில் 195கிமீ-க்கு இயங்கக்கூடியதாக உள்ளது. டிவிஎஸ் ஐக்யூப் எஸ்டி-இன் 3.4kWh பேட்டரி 145கிமீ ரேஞ்சை வழங்கக்கூடியதாக உள்ளது.

சார்ஜிங் நேரம்: ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டரின் பேட்டரியை ஏத்தர் ட்யோ சார்ஜர் (Duo Charger)-ஐ கொண்டு 0-இல் இருந்து 80% சார்ஜ் நிரப்ப 3- 3.5 மணிநேரம் தேவைப்படும். ஐக்யூப் எஸ்டி ஸ்கூட்டரிலும் பேட்டரியை 80% சார்ஜ் நிரப்ப ஏறக்குறைய 3 மணிநேரம் தேவைப்படும். ஆனால், ஓலா எஸ்1 புரோவின் 4kWh பேட்டரியை 80% சார்ஜ் நிரப்ப 4.5 மணிநேரத்திற்கும் அதிகமான நேரம் தேவைப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தோற்றத்தை பொறுத்தவரையில், ஏத்தர் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அடித்துக் கொள்ளவே முடியாது. அந்த அளவிற்கு அட்வான்ஸான தோற்றத்தை கொண்ட 450எக்ஸ் ஸ்கூட்டரை ஏத்தர் நிறுவனம் மேலும் மெருக்கேற்றி உள்ளது. விலையிலும், மற்ற இரு ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடுகையில் ஏத்தர் 450எக்ஸ்-இன் விலை ஏற்கக்கூடியதாகவே உள்ளது.


Click it and Unblock the Notifications









