எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.1 லட்சத்திற்குள் என்றால் யார் தான் வாங்காமல் இருப்பார்கள்... புக்கிங் துவங்கியாச்சு!!
ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo 2025), ஒட்டுமொத்த இந்தியாவும் உற்று கவனித்துக் கொண்டிருக்கும் மோட்டார் கண்காட்சி. டெல்லியில் துவார்கா பகுதியில் நடைபெற்றுவரும் இந்த கண்காட்சியில் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் இருந்து இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வரையில் பல்வேறு நிறுவனங்கள் கலந்துக் கொண்டுள்ளன. அவ்வாறு ஆட்டோ எக்ஸ்போவில் கலந்துக் கொண்ட இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்துள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு கடந்த சில வருடங்களாக சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கு காரணமான இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுள் ஒன்று ஒகாயா இவி (Okaya EV) ஆகும். இந்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் நீண்ட வருடங்களாக செயல்பட்டுவரும் இந்த நிறுவனம் தனது பெயரை சமீபத்தில்தான் 'ஒபிஜி மொபிலிட்டி' (OPG Mobility) என மாற்றிக் கொண்டது.

இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்றுவரும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025-இல் கலந்துக் கொண்டுள்ள ஒபிஜி மொபிலிட்டி நிறுவனம் அதன் புதிய 'டெஃபி 22' (DEFY 22) என்கிற பெயரிலான அதன் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான ப்ரீ-புக்கிங்குகளும் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளன.
புதிய ஒபிஜி மொபிலிட்டி டெஃபி 22 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.99,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாம்பைன் க்ரீம், பிளாக் ஃபையர், காஸ்டல் ஐவரி, யூனிட்டி வெள்ளை, ரெசிலியன்ஸ் பிளாக், டவ் க்ரே மற்றும் மேட் க்ரீன் என 7 விதமான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருடன் சில ஆக்ஸஸரீகளையும் வாங்கலாம்.
ஃபெர்ராடோ பிராண்டின் ஹெல்மெட்கள், ஹெல்மெட் லாக்குகள், மொபைல் ஸ்டாண்ட்கள், கையுறைகள், ஜாக்கெட்கள், சீட் கவர்கள் உள்ளிட்டவை அந்த ஆக்ஸஸரீகள் ஆகும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருடன் ஐபி67 சான்று பெற்ற லித்தியம் இரும்பு பாஸ்பேட் பேட்டரி மற்றும் நீர்புகா தன்மை கொண்ட ஐபி65 சான்று பெற்ற சார்ஜர் உள்ளிட்டவை கிடைக்கும்.

மேலும், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் மியுசிக் வசதி உடன் 7-இன்ச் டச் டிஸ்பிளே ஸ்பீடோமீட்டர் மற்றும் 12-இன்ச் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 72 வோல்ட் 30 ஆம்பியர் (2.2kWh) லித்தியம் இரும்பு பாஸ்பேட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி ஆனது இயக்க ஆற்றலை 1200 வாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த எலக்ட்ரிக் மோட்டாரில் இருந்து அதிகப்பட்சமாக 2500 வாட்ஸ் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிக் கொண்டு அதிகப்பட்சமாக 80கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். அதிகப்பட்சமாக மணிக்கு 70கிமீ வேகத்தில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் செல்லலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், ஒபிஜி மொபிலிட்டி நிறுவனத்தின் புதிய டெஃபி 22 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை சிறப்பாக இருக்கும் என்றே எதிர்பார்க்கிறோம். ஆட்டோ எக்ஸ்போவை முன்னிட்டு இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான ப்ரீ-புக்கிங்களும் துவங்கப்பட்டுள்ளதால், நிறைய பேர் புக் செய்வார்கள் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications








