இந்திய ஹீரோ பைக்கை பார்த்து ஆடிப்போன இத்தாலியர்கள்! 2025 முடியுறதுக்குள்ள விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்!
EICMA 2025 நிகழ்வில், உலகம் முழுவதிலும் இருந்து பல இருசக்கர வாகன நிறுவனங்களின் புதிய தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இத்தாலி நாட்டில் மிலன் என்கிற பகுதியில் நவம்பர் 9 வரையில் நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில் பல இந்திய நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன. அந்த வகையில், ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தில் இருந்து காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ள புதிய எக்ஸ்பல்ஸ் 210 டக்கார் எடிஷன் (XPulse 210 Dakar Edition) பைக் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மேலும், ஹீரோ நிறுவனம் தனது புதிய ஹீரோ ஹங்க் 440எஸ்.எக்ஸ் (Hunk 440 SX) பைக்கையும் காட்சிக்கு நிறுத்தி ஆச்சரியப்படுத்தி உள்ளது. ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 டக்கார் எடிஷன், வழக்கமான எக்ஸ்பல்ஸ் 210 பைக்கின் வடிவமைப்பைப் போலவே இருந்தாலும், புதிய டக்கார் எடிஷனுக்காக வண்ண அலங்காரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதைவிட முக்கியமாக, நீளமான, முழுமையாக சரிசெய்யக்கூடிய சஸ்பென்ஷன் உடன் இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நீளமான சஸ்பென்ஷன் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு மிகவும் ஏற்றது. மேலும், இதற்கேற்ப பைக்கின் இரு முனைகளிலும் 280மிமீ-இல் சஸ்பென்ஷன் டிராவல் வழங்கப்பட்டு இருக்க, தரையில் இருந்து பைக்கின் அடிப்பகுதி (கிரவுண்ட் கிளியரன்ஸ்) 270மிமீ உயரத்தில் உள்ளது. உயரமான தோற்றத்தின் காரணமாக, தரையில் இருந்து இருக்கையின் உயரம் வழக்கமான எக்ஸ்பல்ஸை விட 830மிமீ ஆக அதிகரித்துள்ளது.

பைக்கில் 4.2 இன்ச் TFT டிஸ்பிளே, LED புரொஜெக்டர் ஹெட்லைட் மற்றும் டெயில்லைட்கள், புளூடூத் இணைப்பு வசதி மற்றும் நேவிகேஷன் அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த புதிய எக்ஸ்பல்ஸ் டக்கார் எடிஷனிலும் அதே 210சிசி சிங்கிள்-சிலிண்டர் DOHC லிக்யுடு-கூல்டு என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 24.6 ஹெச்பி மற்றும் 20.7 Nm டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக உள்ளது.
இந்த பைக் இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 பைக்கின் தற்போதைய எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.71 லட்சம் ஆகும். புதிய டக்கார் எடிஷன் நிச்சயமாக இதனை விட கூடுதல் பிரீமியம் விலையில் தான் விற்பனை செய்யப்படும். ஹீரோ ஏற்கனவே எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் டக்கார் எடிஷனை ரூ.1.54 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்து வருகிறது.

ஹீரோ ஹங்க் 440 SX அறிமுகம் ஒரு பெரிய ஆச்சரியமாக இருந்தது. இந்த பைக், 440X மாடலை ஒத்திருந்தாலும், உயரமான விண்ட்ஸ்கிரீன், இரண்டாக பிரிக்கப்பட்ட புதிய இருக்கை அமைப்பு, பிரஷ் செய்யப்பட்ட ஹேண்டில்பார் மற்றும் இரட்டை செங்குத்து எக்ஸாஸ்ட் சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஹங்க் 440 எக்ஸ் பைக்கின் அதே 440சிசி சிங்கிள்-சிலிண்டர் ஆயில்-கூல்டு என்ஜினை தான் இதுவும் பயன்படுத்துகிறது.

இதில் ரைடு-பை-வயர் த்ராட்டில், பல ரைடிங் மோடுகள், ஸ்விட்ச் செய்யக்கூடிய ஏபிஎஸ் மற்றும் வழக்கமான ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்கில் உள்ள அதே TFT கண்ட்ரோல் சிஸ்டம் போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த பைக் இந்திய சந்தைக்கு வருவது குறித்து ஹீரோ எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும், ராயல் என்பீல்டின் 350சிசி பைக்குகளுக்கு போட்டியாக அடுத்த ஆண்டு இந்த பைக் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த சில மாதங்களாகவே ஐரோப்பிய நாடுகளில் வணிகத்தை துவங்க ஹீரோ மோட்டோகார்ப் ஆர்வம் காட்டி வருவதை பார்க்க முடிகிறது. இதனாலேயே, இத்தாலியில் நடைபெறும் EICMA 2025 கண்காட்சியை ஹீரோ நிறுவனம் நன்றாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்து, ஐரோப்பிய மார்க்கெட்டிற்கு ஏற்ற இரு விலையுயர்ந்த பைக்குகளை காட்சிப்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications









