இரண்டில் எதை வாங்குறதுனு குழப்பம் நிச்சயமா இருக்கும்... ராயல் என்பீல்டு பார்த்து பார்த்து உருவாக்கிய பைக்குகள்
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய மேம்படுத்தப்பட்ட ஹண்டர் 350 (Hunter 350) பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹண்டர் பைக்கிற்கு விற்பனையில் போட்டியாக மார்க்கெட்டில் சில பைக்குகள் உள்ளன.
ஆனால், ஹண்டர் 350 பைக்கிற்கு சவாலான போட்டி ஆனது ராயல் என்ஃபீல்டின் மற்றொரு பிரபலமான 350சிசி பைக்கான கிளாசிக் 350 (Classic) பைக்கில் இருந்துதான் வருகிறது. ஹண்டர் 350 மற்றும் கிளாசிக் 350 என இரண்டையும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தான் உருவாக்குகிறது என்றாலும், இரண்டிற்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அவை என்னென்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

விலை: 2025 ஹண்டர் 350 பைக்கை பேஸ், மிட் மற்றும் டாப் என 3 விதமான வேரியண்ட்களில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் முறையே ரூ.1,49,000 மற்றும் ரூ.1,76,750 மற்றும் ரூ.1,81,750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. புதிய ஹண்டர் 350 பைக்கின் 3 வேரியண்ட்களும் ஒவ்வொரு விதமான பெயிண்ட் ஆப்ஷன்களிலும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுப்பக்கம், ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக் ஆனது மொத்தம் 7 விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு விதமான கலர் ஆப்ஷன்களிலும் கிளாசிக் 350 பைக்கின் விலைகள் ஒவ்வொரு விதமாக உள்ளன. கிளாசிக் 350 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1,93,080இல் இருந்து ரூ.2,30,000 வரையில் உள்ளன.

தொழிற்நுட்ப அம்சங்கள்: 2025 ஹண்டர் 350 பைக்கில் பல முக்கியமான வசதிகளை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கொண்டுவந்துள்ளது. அவற்றுள் முக்கியமானது, பைக்கின் பின்பக்க சஸ்பென்ஷன் செட்-அப் (Suspension Set-up) மாற்றப்பட்டு இருப்பது ஆகும். முன்பு விரைப்பான சஸ்பென்ஷன் செட்-அப் வழங்கப்பட்டு வந்த நிலையில், புதிய மாடலில் மென்மையான மற்றும் சவுகரியமான பயணத்தை வழங்கக்கூடிய இரட்டை காயில் சஸ்பென்ஷன் செட்-அப் பின்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், தரையில் இருந்து பைக்கின் அடிப்பகுதியின் உயரமும் முன்பை காட்டிலும் 10மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய ஹண்டர் 350 பைக்கில் ரைடருக்கான இருக்கை அமைப்பு மாற்றப்பட்டு உள்ளதுடன், பின் இருக்கையில் கூடுதல் குஷின் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஹண்டர் 350 பைக்கிலும் வழக்கமான செமி-அனலாக் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் தான் வழங்கப்பட்டுள்ளது என்றாலும், பைக்கின் டாப் வேரியண்ட்களில் பயணத்திற்கான வழிக்காட்டியை பெறலாம்.

ஹண்டர் 350 மற்றும் கிளாசிக் 350 என இரண்டிலும் எல்இடி ஹெட்லைட், 27 வாட்ஸ் டைப்-சி சார்ஜர் மற்றும் ஸ்லிப் & அசிஸ்ட் க்ளட்ச் வசதிகள் வழங்கப்படுகின்றன. கிளாசிக் 350 பைக்கில் மட்டும் எல்இடி பைலட் விளக்குகள் மற்றும் அட்ஜெஸ் செய்யக்கூடிய பிரேக் & க்ளட்ச் உள்ளிட்டவை கூடுதலாக வழங்கப்படுகின்றன.
என்ஜின்: 2025 ஹண்டர் 350 மற்றும் கிளாசிக் 350 பைக்குகள் இரண்டிலும் ஒரே மாதிரியான 349சிசி ஜே-சீரிஸ் ஏர்/ஆயில்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 6100 ஆர்பிஎம்-இல் 20.2 பிஎச்பி மற்றும் 4000 ஆர்பிஎம்-இல் 27 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப் & அசிஸ்ட் க்ளட்ச் இணைக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விலையை பொறுத்தவரையில், ஹண்டர் 350 பைக்கின் அதிகப்பட்ச விலை கூட கிளாசிக் 350 பைக்கின் ஆரம்ப விலையை விட குறைவாக உள்ளது. இதில் இருந்து இந்த இரு பைக்குகளையும் ஒப்பிட்டு பார்ப்பதே முதலில் முரணானது என்றுதான் சொல்ல வேண்டும். புதிய ஹண்டர் 350 பைக்கில் பின்பக்க சஸ்பென்ஷன் செட்-அப் மாற்றப்பட்டு இருப்பது ஓர் அசத்தலான விஷயம் ஆகும்.
ஏனெனில், முந்தைய ஹண்டர் 350 பைக்கில் பள்ளம், மேடான சாலைகளில் குலுக்கலான பயணத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ள நிலையில், புதிய மாடலில் அந்த பிரச்சனை இருக்காது. இதற்கேற்ப, ரைடர் இருக்கையின் டிசைனையும் சற்று மாற்றியுள்ளதால், புதிய ஹண்டர் 350 பைக்கில் புதுமையான பயண அனுபவத்தை பெறலாம். அதேபோல், முன்பக்கத்தில் எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டு இருப்பதும் கவனிக்கத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications









