கார்களையே தூக்கி சாப்பிடும் ஹீரோ பைக்! விலை இவ்ளோதானா! மார்க்கெட்டை தலைகீழா புரட்டி போட போகுது!
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் வசதிகளில் ஒன்று க்ரூஸ் கண்ட்ரோல் (Cruise Control). நீங்கள் ஒரு வேகத்தை 'செட்' செய்து விட்டால், கார் தொடர்ந்து அதே வேகத்தில் பயணம் செய்யும். நீங்கள் ஆக்ஸலரேட்டரை மிதிக்க தேவையே இல்லை. இதுதான் க்ரூஸ் கண்ட்ரோல் வசதி.
உதாரணத்திற்கு தேசிய நெடுஞ்சாலையில் நீங்கள் 70 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். அப்படியானால் 70 கிலோ மீட்டர் வேகத்தை நீங்கள் 'செட்' செய்து கொள்ள வேண்டும். இதன் பின் கார் தொடர்ந்து 70 கிலோ மீட்டர் வேகத்திலேயே பயணம் செய்யும்.

ஆக்ஸலரேட்டர் பெடலை மிதிக்க வேண்டியதில்லை என்பதால், தொலை தூர பயணங்களின்போது, நீங்கள் உங்கள் கால்களுக்கு ஓய்வு கொடுக்கலாம். இது க்ரூஸ் கண்ட்ரோல் வசதியின் மிக முக்கியமான நன்மைகளில் ஒன்றாகும். இதுதவிர க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை பயன்படுத்தும்போது காரின் மைலேஜ் (Mileage) அதிகரிக்கும்.
கார் தொடர்ந்து ஒரே வேகத்தில் பயணம் செய்யும் என்பதால், நல்ல மைலேஜ் கிடைக்கும். இப்படி க்ரூஸ் கண்ட்ரோல் வசதி மூலமாக கிடைக்கும் நன்மைகளை அடுக்கி கொண்டே போக முடியும். ஆனால் தற்போதைய நிலையில் கார்களில்தான் க்ரூஸ் கண்ட்ரோல் வசதி அதிகளவில் வழங்கப்படுகிறது.

பைக்குகளிலும் கூட க்ரூஸ் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுகிறதுதான். ஆனால் பெரும்பாலும் மிகவும் விலை உயர்ந்த பிரீமியம் பைக்குளில் மட்டும்தான் க்ரூஸ் கண்ட்ரோல் வசதி கொடுக்கப்படுகிறது. விலை குறைவான ஆரம்ப நிலை கம்யூட்டர் ரக பைக்குகளில், க்ரூஸ் கண்ட்ரோல் வசதி அவ்வளவாக வழங்கப்படுவதில்லை.
ஆனால் ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் இந்த வரலாற்றை மாற்றி எழுத உள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ஹீரோ க்ளாமர் 125 (Hero Glamour 125). இந்த பைக்கின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
இந்த புதிய தலைமுறை ஹீரோ க்ளாமர் 125 பைக்கில், க்ரூஸ் கண்ட்ரோல் வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக ரஸ்லேன் தளம் தற்போது வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நடக்கும்பட்சத்தில், புதிய தலைமுறை ஹீரோ க்ளாமர் 125 பைக்கிற்கு, இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கலாம்.
க்ரூஸ் கண்ட்ரோல் தவிர, முழு டிஜிட்டல் கலர் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், எல்இடி டர்ன் இன்டிகேட்டர்கள், அப்டேட் செய்யப்பட்ட ஸ்விட்ச் கியர் போன்ற வசதிகளும் புதிய தலைமுறை ஹீரோ க்ளாமர் 125 பைக்கில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இன்ஜின் ஆப்ஷனில் மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என கூறப்படுகிறது.
எனவே தற்போது விற்பனையில் உள்ள மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே 124.7 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின்தான், புதிய தலைமுறை மாடலிலும் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7.75 kW பவர் மற்றும் 10.4 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புதிய தலைமுறை ஹீரோ க்ளாமர் 125 பைக் இந்திய சந்தையில் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் இன்னும் சில மாதங்களில், ஹீரோ க்ளாமர் 125 பைக்கின் புதிய தலைமுறை மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹீரோ க்ளாமர் 125 பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 87,198 ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 91,198 ரூபாயாக இருக்கிறது. இது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
இவ்வளவு விலை குறைவான ஒரு பைக்கில் க்ரூஸ் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டால் நன்றாக இருக்கும். ஆனால் க்ரூஸ் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டால், புதிய தலைமுறை ஹீரோ க்ளாமர் 125 பைக்கின் விலை சற்று அதிகரிக்கலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








