ஷோரூமுக்கு வருபவர்களின் முதல் கண்ணு இந்த பைக் மேலே தான்! அறிமுகமே இன்னும் ஆகல, அதற்குள் வந்தாச்சா!!
ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் தனது 2026 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் (Xtreme 160R) மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு முன்னதாகவே, அது டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு வரத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு டீலர்ஷிப் நிகழ்வில், இந்த எக்ஸ்ட்ரீம் சீரிஸ் பைக்குகளின் மேம்படுத்தப்பட்ட வடிவங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
முன்னதாக, 2026 எக்ஸ்ட்ரீம் 125ஆர் ஷோரூம்களுக்கு வந்தடைந்ததை பார்த்திருந்தோம். தற்போது, அதே வரிசையில் 2026 எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கும் ஷோரூம்களுக்கு வரத் தொடங்கியுள்ளதைக் காண முடிகிறது. இந்த 2026 எக்ஸ்ட்ரீம் 160ஆர் ஒரு ஃபேஸ்லிஃப்ட் மாடலாகத் தோன்றுகிறது.

இதன் வடிவமைப்பு எக்ஸ்ட்ரீம் 250ஆர் பைக்கை ஒத்ததாக, புதிய ஹெட்லைட் அமைப்பைப் கொண்டுள்ளது. இது பைக்கிற்கு மிகவும் கம்பீரமான மற்றும் பிரீமியம் தரத்திலான தோற்றத்தை அளிக்கிறது. டீலர்ஷிப் ஷோரூமில் காட்சித் தந்துள்ள இந்த பைக் தொடர்பான படங்கள் 'மிஸ்டர். ஆட்டோ' (Mr.Auto) என்கிற யூடியூப் சேனல் மூலமாக நமக்கு கிடைத்துள்ளன.
இந்த படங்களில் காட்சியளிக்கும் பைக் ஆனது, புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் 'காம்பாட் எடிஷன்' ஆகும். இது சாம்பல் நிறத்தில் தனித்துவமான கிராபிக்ஸ் உடன் வருகிறது. புதிய ஹெட்லைட் கன்சோல், முந்தைய மாடலை விட அதிக நவீன தோற்றமளிக்கிறது. மற்றப்படி, இந்த பைக்கின் விலை மற்றும் பிற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த பைக்கில் தங்க நிற பூச்சுடன் கூடிய சஸ்பென்ஷன் USD டெலஸ்கோபிக் ஃபோர்க்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இவை பைக்கின் ஒட்டுமொத்த அழகை மேம்படுத்துகின்றன. என்ஜின் கவுல் புதிய கிராபிக்ஸ் உடன் அதே வடிவத்தில் நீடிக்கிறது. மேலும், கூர்மையான பெட்ரோல் டேங்க், பக்கவாட்டு பாடி பேனல்கள், ஒற்றை இருக்கை (இரண்டாக பிரிக்கப்பட்ட இருக்கையும் ஒரு ஆப்ஷனாக வழங்கப்படலாம்), தடிமனான எக்ஸாஸ்ட், எல்இடி டெயில் லைட் மற்றும் எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள் ஆகியவை குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.
2026 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் தனித்துவமான அம்சம், எலக்ட்ரானிக் த்ரோட்டில் (ரைட்-பை-வயர் தொழில்நுட்பம்) அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பது ஆகும். இது க்ரூஸ் கண்ட்ரோல் அம்சத்தை சேர்க்க ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு வழிவகுத்துள்ளது. இந்த அமைப்பு ஏற்கனவே ஹீரோ க்ளாமர் எக்ஸ் மற்றும் எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்குகளில் உள்ளது.

க்ரூஸ் கண்ட்ரோல் ஸ்விட்ச் ஹேண்டில்பாரின் வலதுபுறத்தில் உள்ள ஸ்விட்ச் கியரில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இடதுபுறத்தில் புதிய ஸ்விட்ச் கியர் ஆனது புதிய கலர் எல்சிடி இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் திரையை கட்டுப்படுத்த வழங்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்ட்ரீம் 250ஆர், க்ளாமர் எக்ஸ் மற்றும் 2026 எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்குகளை தொடர்ந்து 2026 எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கிலும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த க்ளஸ்டர் திரை ஆனது ப்ளூடூத் மற்றும் நேவிகேஷன் அம்சங்களை வழங்கக்கூடியதாக உள்ளது. இந்த பைக்கில் ரைடு மோடுகள் மற்றும் டூயல்-சேனல் ஏபிஎஸ் ஆகியவை உள்ளன. டயர் அளவுகள் மற்றும் பெட்ரோல் டேங்க் ஆகியவை முந்தைய பைக்கைப் போலவே இருக்கும் எனத் தெரிகிறது. புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கில் 163.2சிசி சிங்கிள்-சிலிண்டர், ஆயில்-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

அதிகப்பட்சமாக 16.6 பிஎச்பி பீக் பவர் மற்றும் 14.6 என்.எம் பீக் டார்க் திறனை உற்பத்தி செய்யக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஆச்சரியப்படும் விதமாக, USB போர்ட் இன்னும் டைப்-A வகையில்தான் உள்ளது, அதே சமயம் 2026 எக்ஸ்ட்ரீம் 125ஆர் மற்றும் க்ளாமர் எக்ஸ் பைக்குகளில் டைப்-C போர்ட்டுகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் டைப்-சி சார்ஜிங் வசதி இல்லாததை தவிர்த்து, அதன் புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கை மாடர்ன் தொழிற்நுட்ப அம்சங்கள் மிகுந்ததாக கொண்டுவருகிறது. குறிப்பாக, க்ரூஸ் கண்ட்ரோல் அம்சத்தைப் பயன்படுத்தி, போட்டி நிறைந்த 160சிசி பைக்குகள் பிரிவில் தனது சந்தை ஆதிக்கத்தை அதிகரிக்க ஹீரோ முயற்சிக்கிறது. இதனால், புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications









