பைக்கை விற்க இதை விட்டால் வேற வழி தெரியல! சீன பைக் கம்பெனியை ஒருத்தரும் கண்டுக்குறது இல்ல!!
கீவே (Keeway), எங்கேயோ தோன்றி எங்கேயோ வளர்ந்து இப்போது இந்தியாவில் பைக்குகளை விற்பனை செய்துவரும் பைக் நிறுவனம். இந்திய மார்க்கெட்டில் சில வருடங்களுக்கு முன்பே நுழைந்துவிட்டாலும் இப்போதுவரையில் பெரியதாக பலருக்கு தெரியாத இந்த பைக் நிறுவனம் ஐரோப்பாவில் உள்ள ஹங்கேரியில் தோன்றியது. ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் வணிகத்தில் சரிவை சந்தித்துவந்த கீவே நிறுவனத்தை கியாஜியாங் (Qianjiang) என்கிற சீன ஆட்டோமொபைல் குழுமம் ஒன்று வாங்கியது. அதன் பிறகே உலகின் பல நாடுகளுக்கு கீவே பைக்குகள் விற்பனைக்கு சென்றன. அந்த வகையில், இந்தியாவிற்கு கீவே பைக்குகள் சில வருடங்களுக்கு முன் விற்பனைக்கு வந்தன.
அதிஷ்வர் ஆட்டோ ரைடு இந்தியா (Adishwar Auto Ride India) என்கிற இந்திய நிறுவனத்தின் உதவியுடன் கீவே பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. சில வருடங்களுக்கு முன்பே மார்க்கெட்டிற்கு வந்துவிட்டாலும், பெரியதாக எவரது கவனத்தையும் கீவே பெறாததற்கு காரணம், இந்த நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் பைக்குகளின் அதிகப்படியான விலை ஆகும்.

250சிசி பைக்குகளை எல்லாம் பஜாஜ் (Bajaj) நிறுவனம் 1.5 லட்ச ரூபாயில் விற்பனை செய்யும் நிலையில், கீவே நிறுவனம் ரூ.3 லட்சத்தில் விற்பனை செய்தால் யார் வாங்குவார்கள்? இதனை கருத்தில் கொண்டு இந்தியாவில் விற்பனை செய்யும் இரு கீவே பைக்குகளின் விலைகளை அதிஷ்வர் ஆட்டோ ரைடு இந்தியா நிறுவனம் அதிரடியாக பெரிய அளவில் குறைத்துள்ளது.
தற்போது விலை குறைக்கப்பட்டுள்ள அந்த இரு கீவே பைக்குகளாவன, கே-லைட் 250வி (K-Light 250V) மற்றும் ஜோண்டெஸ் 350எக்ஸ் (Zontes 350X) என்பன அவை ஆகும். இதில், தாழ்வான உடலமைப்பை கொண்ட 250சிசி பைக்கான கே-லைட் 250வி பைக்கின் விலை சுமார் ரூ.71 ஆயிரம் குறைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலமாக கே-லைட் 250வி பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.2.49 லட்சமாக குறைந்துள்ளது. கீவே நிறுவனத்தின் பேனல்கள் அதிகம் நிறைந்த ஸ்போர்ட்ஸ் ரக பைக்கான ஜோண்டெஸ் 350எக்ஸ் பைக்கின் விலை ரூ.59,000 குறைத்துக் கொள்ளப்பட்டு உள்ளது. இதனால் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.40 லட்சமாக குறைந்துள்ளது.
கே-லைட் 250வி பைக்கில் 249சிசி வி-ட்வின் என்ஜின் பொருத்தப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் ஆற்றலில் பெல்ட் டிரைவ் (Belt Drive) தொழிற்நுட்பத்தில் சக்கரங்கள் இயங்குவதால் மென்மையான மற்றும் இரைச்சலற்ற பயணத்தை எதிர்பார்க்கலாம். இந்த பைக்கில் பொருத்தப்பட்டு உள்ளவை அனைத்தும் எல்இடி விளக்குகள் ஆகும்.
ஹேண்டில்பாருக்கு மத்தியில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் இரட்டை எக்ஸாஸ்ட் குழாய்கள் உள்ளிட்டவையும் கே-லைட் 250வி பைக்கில் வழங்கப்படுகின்றன. ஜோண்டெஸ் 350எக்ஸ் பைக்கில் 348சிசி லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 39.5 பிஎஸ் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
ரைடருக்கு சவுகரியமான அதிநவீன கீலெஸ் கண்ட்ரோல் சிஸ்டத்தை கொண்ட ஜோண்டெஸ் 350எக்ஸ் பைக்கில் ஹேண்டில்பாருக்கு மத்தியில் ஃபுல் டிஎஃப்டி கலர் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் ப்ளூடூத், நேவிகேஷன் மற்றும் பயணம் குறித்த தகவல்கள் உள்ளிட்டவற்றை பெறலாம். எடை குறைவான அலாய் சக்கரங்கள் உடன் உருவாக்கப்படும் இந்த பைக்கில் 17 லிட்டர்கள் கொள்ளளவில் பெட்ரோல் டேங்க் வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிரபலமான பெனெல்லி (Benelli) நிறுவனத்தின் கீழ் விற்பனை செய்யப்படும் போதிலும் கீவே பைக்குகள் பெரியதாக இந்தியர்களை கவரவில்லை. தற்போது விலைகள் குறைக்கப்பட்டு உள்ளதால், கீவே பைக்குகளை இனியாவது நிறைய பேர் வாங்குவார்களா என்பதை இனி பொறுந்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








