ஸ்கூட்டர் விக்குற விலையில ரூ.80 ஆயிரத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என்றால் யார்தான் வாங்காமல் இருப்பார்கள்!!
க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி லிமிடெட் (Greaves Electric Mobility Limited) எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) விற்பனையில் ஈடுப்பட்டு வரும் நிறுவனம். பருத்தி உற்பத்தி & விற்பனையில் நீண்ட வருடங்களாக ஈடுப்பட்டுவரும் க்ரீவ்ஸ் காட்டன் நிறுவனத்தின் இ-மொபைலிட்டி பிரிவு தான், க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி லிமிடெட் ஆகும். இந்த க்ரீவ்ஸ் மொபைலிட்டி நிறுவனத்தின் கீழ் பல்வேறு பிராண்ட்கள் செயல்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான், ஆம்பியர் (Ampere) ஆகும். ஆம்பியர் நிறுவனத்தில் இருந்து புதியதாக ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதனை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
ஆம்பியர் நிறுவனத்தில் இருந்து மேக்னஸ் (Magnus) என்கிற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆம்பியர் மேக்னஸில் புதிய வேரியண்ட் 'மேக்னஸ் நியோ' (Magnus Neo) என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. "தி பவர் ஆஃப் மோர்" என்கிற அடைமொழி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எவரொருவராலும் எளிதாக ஓட்டக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், ரூ.79 ஆயிரத்து 999 என்கிற குறைவான விலையில் மேக்னஸ் நியோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேக்னஸ் நியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஜனவரி 17ஆம் தேதி துவங்கவுள்ள 2025 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு நிறுத்த உள்ளதாக ஆம்பியர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால், டெல்லியில் நடைபெறவிருக்கும் ஆட்டோ எக்ஸ்போவிலும் இந்த இ-ஸ்கூட்டரை காணலாம்.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பயன்படுத்துவதில் ஒரேயொரு பிரச்சனை என்னவென்றால், அவற்றை அதிக தொலைவு பயணங்களுக்கு கொண்டு செல்வது முடியாத காரியமாக உள்ளது. ஆனால், மேக்னஸ் நியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பெங்களூரில் இருந்து டெல்லி வரையில் சுமார் 2 ஆயிரம் கிமீ-க்கும் அதிகமான தொலைவிற்கு ஓட்டி அதன் நீடித்து உழைக்கும் தன்மையை ஆம்பியர் நிரூபித்துக் காட்டியுள்ளது.
மெட்டாலிக் சிவப்பு, கிளாசியல் வெள்ளை, காலாக்டிக் கிரே மற்றும் பளபளப்பான கருப்பு என 5 விதமான கலர் ஆப்ஷன்களில் புதிய மேக்னஸ் நியோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பான ஆக்ஸலரேஷனுக்கு மேம்படுத்தப்பட்ட டார்க் திறனை வழங்கக்கூடிய இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிகப்பட்சமாக மணிக்கு 65கிமீ வேகத்தில் இயங்கலாம்.
12 இன்ச்சில் அலாய் சக்கரங்களை கொண்ட இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சிறந்த ஸ்டெபிளிட்டியை பெறலாம் என கூறும் ஆம்பியர் நிறுவனம், இந்த ஸ்கூட்டரின் பேட்டரிக்கு 5 வருட/ 75 ஆயிரம் கிமீ உத்தரவாதத்தை வழங்கியுள்ளது. அதாவது, 75 ஆயிரம் கிமீ தொலைவிற்கு எந்தவொரு பயமும் இல்லாமல் பேட்டரியை பயன்படுத்தலாம் என ஆம்பியர் உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால், 75 ஆயிரம் கிமீ-க்கு ஸ்கூட்டரை 5 வருடங்களுக்குள் ஓட்டவில்லை என்றால், 5 வருடம் வரையில்தான் உத்தரவாதம் ஆகும்.
லித்தியம் இரும்பு பாஸ்பேட் பேட்டரியை கொண்டிருக்கும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 100கிமீ-க்கும் அதிகமான ரேஞ்சை பெறலாம் என ஆம்பியர் தெரிவித்துள்ளது. 3 விதமான ரைடிங் மோட்களை கொண்ட இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பேட்டரியை தனியாக கையில் எடுத்துச் சென்று சார்ஜ் செய்யலாம். பேட்டரி முழுவதுமாக சார்ஜ் நிரம்ப 5- 6 மணிநேரம் தேவைப்படும். யுஎஸ்பி சார்ஜிங் வசதி மற்றும் ஸ்மார்ட் கனெக்ட்டிவிட்டி உள்ளிட்டவை மேக்னஸ் நியோவின் மற்ற சிறப்பம்சங்கள் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.79,999இல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என்றால், விலை குறைவு தான். ஏனெனில், இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ரூ.1 லட்சம் என்கிற அளவிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த பொங்கல் காலத்தில், புதியதாக ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க நினைப்பவர்களுக்கு ஆம்பியர் மேக்னஸ் நியோ ஆனது சரியான தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








