ஸ்கூட்டரை திருடினு எங்கு போனாலும் மாட்டிப்பாங்க... மினி மொபைல் போன் உடன் புதிய ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!
க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி (Greaves Electric Mobility) நிறுவனத்தில் இருந்து எலக்ட்ரிக் 2-வீலர்களை (Electric 2-Wheelers) விற்பனை செய்யும் பல பிராண்ட்கள் செயல்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான் ஆம்பியர் (Ampere) ஆகும். இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (Electric Scooters) விற்பனை செய்வதில் பல வருடங்களாக ஈடுப்பட்டுவரும் நிறுவனங்களுள் ஆம்பியரும் ஒன்றாகும்.
இந்த நிலையில், ஆம்பியர் பிராண்டின் பிரபலமான எலக்ட்ரிக் ஸ்கூட்டராக விளங்கும் நெக்ஸஸ் (Nexus) பெரிய அளவில் அப்கிரேட் (Upgrade) செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. உலகம் முழுக்க இன்று (செப்.9) இவி தினம் (World EV Day) கொண்டாடப்பட்ட நிலையில், க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் நிறுவனம் தனது பங்கிற்கு ஆம்பியர் நெக்ஸஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அப்கிரேட் செய்து வெளியீடு செய்துள்ளது.

இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான விருது மட்டுமின்றி, ஐந்து தேசிய சாதனைகளை தன்வசம் வைத்துள்ள ஆம்பியர் நெக்ஸஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட் சூழலுக்கு ஏற்பவும், மாறிவரும் மக்களின் இரசனைக்கு ஏற்பவும் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, ஆம்பியர் நிறுவனம் புதியதாக உருவாக்கிய 'நெக்ஸ்.ஐஓ' (Nex.IO) பிளாட்ஃபாரத்தில் புதிய நெக்ஸஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலமாக, புதிய நெக்ஸஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 'மேப் மிரரரிங்' (Map Mirroring) என்கிற தொழிற்நுட்பத்தை புதியதாக வழங்கி உள்ளனர். இந்த தொழிற்நுட்பத்தின் பெயரை பார்த்தவுடனே கண்டுப்பிடித்து இருப்பீர்கள் இது எதற்கு வழங்கப்பட்டுள்ளது என்று. பயணம் செய்யும் இடத்திற்கான வழிக்காட்டுதலை ஸ்கூட்டரின் ஹேண்டில்பாருக்கு மத்தியில் வழங்கப்பட்டுள்ள திரையின் மூலமாக பெறலாம்.

வழக்கம்போல், புதிய நெக்ஸஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் 7 இன்ச்சில் டிஎஃப்டி டிஸ்பிளே வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், மொபைல் போனை போன்று இந்த 7-இன்ச் திரை முழுமைக்கும் பயணத்திற்கான வரைப்படத்தை பெறலாம். மேப் மிரரரிங் தொழிற்நுட்பத்தின் மூலமாக திரையில் காட்டப்படும் வரைப்படத்தை தேவைக்கேற்ப விரிப்பது மற்றும் சுருக்குவது மட்டுமில்லாமல், செல்ல வேண்டிய இடம் இன்னும் எவ்வளவு தொலைவில் உள்ளது, இன்னும் எத்தனை மீட்டர் தூரம் சென்ற பின் எந்த பக்கம் திரும்ப வேண்டும் உள்ளிட்ட விபரங்களையும் பெறலாம்.
இவற்றுடன், மொபைல் போனுக்கு வரும் அழைப்புகளை ஸ்கூட்டரின் திரையிலேயே கண்ட்ரோல் செய்வது, பாடல்களை மாற்றுவது, சத்தத்தை குறைப்பது/ அதிகப்படுத்துவது போன்ற வழக்கமான சேவைகளையும் புதிய நெக்ஸஸின் 7-இன்ச் திரை வாயிலாக பெறலாம். இதில் சில கண்ட்ரோல்களை திரையை தொட்டுதான் செய்ய முடியும் என்றில்லாமல், ஹேண்டில்பாரில் வழங்கப்பட்டு இருக்கும் பொத்தான்கள் மூலமாகவும் மேற்கொள்ளலாம்.
இவற்றை விட முக்கியமாக, ஸ்கூட்டர் எங்கேனும் விபத்திற்கு உள்ளாகினால் அதனை உரிமையாளர் இருக்கும் இடத்தில் இருந்தே தனது மொபைல் போன் மூலமாக உடனடியாக தெரிந்துக் கொள்ளலாம். மேலும், அடுத்ததாக ஸ்கூட்டரை எப்போது சர்வீஸ் செய்ய வேண்டும் என்கிற எச்சரிக்கைகளும் ஸ்கூட்டரின் திரையின் வாயிலாக தெரிவிக்கப்படும்.
இவற்றிற்காக, மொபைல் போனில் 'ஆம்பியர் கனெக்ட் கம்பானியன்' (Ampere Connect Companion) என்கிற செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலமாக மொபைல் போனை ஸ்கூட்டர் உடன் இணைக்க வேண்டும். இதன் மூலமாக, ஸ்கூட்டரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவது மட்டுமின்றி, புதிய ஆம்பியர் நெக்ஸஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை லாஸ்ட்-மைல் டெலிவிரி (Last-mile Delivery) சேவைகளுக்கும் பயன்படுத்த முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முன்பை விட ஆம்பியர் நெக்ஸஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்நுட்ப ரீதியாக பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பது இதன் மூலம் தெரிய வருகிறது. இத்தகைய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை உலக இவி தினத்தில் அறிமுகம் செய்திருப்பது கூடுதல் சிறப்பாகும். புதிய ஆம்பியர் நெக்ஸஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது இந்தியாவில் உள்ள அனைத்து ஆம்பியர் டீலர்ஷிப் ஷோரூம்களிலும் கிடைக்கும். மற்றப்படி, புதிய நெக்ஸஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலைகள் எதுவும் தற்போதைக்கு அறிவிக்கப்படவில்லை. ஆதலால், இதனை ஸ்கூட்டரின் வெளியீடாகவே கருத முடியும்.


Click it and Unblock the Notifications








