ஓசூரில் ஃபேக்ட்ரி அமைத்த ராசி... கொண்டாடுவதற்கு கூட பெருசா நேரம் இல்லமா ஃபேக்ட்ரி ரன் ஆகுது!
இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஏத்தர் எனர்ஜி லிமிடெட், தங்கள் ஓசூர் உற்பத்தி ஆலையிலிருந்து 5,00,000 ஆவது வாகனத்தை உற்பத்தி செய்து ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த பிரம்மாண்ட மைல்கல்லை எட்டிய வாகனம், ஏத்தரின் குடும்ப ஸ்கூட்டரான ரிஸ்டா (Rizta) ஆகும். அதாவது, ஏத்தர் தொழிற்சாலையில் இருந்து 5 லட்சமாவது வாகனமாக வெளியேற்றப்பட்டு இருப்பது, ரிஸ்டா ஆகும்.
கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, ரிஸ்டா ஏத்தர் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய உந்துசக்தியாக மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, ஏத்தர் நிறுவனம் செயல்திறன்மிக்க எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (Electric Scooters) உருவாக்கியது மட்டுமின்றி, ரிஸ்டா போன்ற அன்றாட பயன்பாட்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் உருவாக்க துவங்கியுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு வருடத்திற்குள்ளாகவே, ஏத்தர் நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய தூணாக ரிஸ்டா மாறிவிட்டது.

எந்த அளவிற்கு என்றால், ஏத்தர் நிறுவனத்தின் மொத்த உற்பத்தி அளவில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமாக ரிஸ்டா பங்களித்து, நிறுவனத்தின் விரிவாக்கத்தை துரிதப்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக, மெட்ரோ நகரங்களுடன், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களையும் டார்க்கெட் செய்து, இந்தியாவின் மத்திய மற்றும் வட மாநிலங்களில் ஏத்தர் தனது இருப்பை வேகமாக விரிவுப்படுத்தி வருகிறது.
ஏத்தர் தற்போது தமிழ்நாட்டின் ஓசூரில் இரண்டு உற்பத்தி தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. ஒன்று வாகன அசெம்பிளிக்கும், மற்றொன்று பேட்டரி உற்பத்திக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஏத்தரின் ஓசூர் ஆலையின் ஆண்டு உற்பத்தி திறன் 4,20,000 ஸ்கூட்டர்கள் ஆகும். அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய, ஏத்தர் தனது மூன்றாவது உற்பத்தி ஆலையான "ஃபாக்டரி 3.0" ஐ மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் பிட்கின் என்கிற பகுதியில் நிறுவி வருகிறது.

இந்த ஆலை இரண்டு கட்டங்களாக கட்டமைக்கப்பட்டு வருகிறது. மேலும் இது இன்டஸ்ட்ரி 4.0 கொள்கைகளின்படி, மேம்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பங்களை உற்பத்தி செயல்முறை உடன் ஒருங்கிணைக்கக் கூடியதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. "ஃபாக்டரி 3.0", ஏத்தரின் மொத்த உற்பத்தித் திறனை ஆண்டுக்கு 14.2 லட்சம் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏத்தர் எனர்ஜி லிமிடெட் இந்தியாவின் எலக்ட்ரிக் இருசக்கர வாகன (E2W) சந்தையில் ஒரு முக்கிய நிறுவனமாக உருவெடுத்து வருகிறது. இது 2013-ஆம் ஆண்டில் தருண் மேத்தா மற்றும் ஸ்வப்னில் ஜெயின் ஆகியோரால் நிறுவப்பட்டது. முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை 2018-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்திய ஏத்தர் நிறுவனம், ஆரம்பத்தில் உயர் செயல்திறன் கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனை செய்துவந்தது.

ஆனால், ஏத்தரின் தற்போதைய போர்ட்ஃபோலியோவில் செயல்திறன்மிக்க ஏத்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உடன், கடந்த 2024-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற குடும்ப ஸ்கூட்டரான ஏத்தர் ரிஸ்டாவும் உள்ளது. ரிஸ்டாவின் மூலமாகவே உற்பத்தியில் 5 லட்சம் என்கிற இமாமலய மைல்கல்லை ஏத்தர் எனர்ஜி விரைவாக எட்டியுள்ளது என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
மஹாராஷ்டிராவில் அமைக்கப்பட்டுவரும் 3வது தொழிற்சாலை திறக்கப்பட்ட பிறகு, ஏத்தர் உற்பத்தி இன்னும் அதிகரிக்கும் என்றாலும், இந்த வேகத்தை தொடர்ந்து நிலையாக பெற நாடு முழுவதும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை ஏத்தர் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது அவசியமாகும். இந்தியாவில் பிரத்யேக ஃபாஸ்ட்-சார்ஜிங் நெட்வொர்க்கான "ஏத்தர் கிரிட்"டை நிறுவிய முதல் இருசக்கர வாகன OEM நிறுவனம் ஏத்தர் ஆகும்.
இது இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு நாட்டின் பல பகுதிகளில் நிறுவப்பட்டு வருகிறது. இன்று, ஏத்தர் நாட்டிலேயே பரந்த 2W ஃபாஸ்ட்-சார்ஜிங் நெட்வொர்க்கை கொண்டுள்ளது. இந்தியாவில் 3,997 சார்ஜர்கள் உடன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகளுக்கு (R&D) அதிக முக்கியத்துவம் அளிக்கும் ஏத்தர் நிறுவனம் விற்பனையில் 10 லட்சம் என்கிற மைல்கல்லை அடையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.


Click it and Unblock the Notifications









