இலங்கைக்கும் நம்ம தமிழ்நாட்டு வண்டி தான்... ஓசூரில் ரெடியான உடனே பார்சல் போட்டுறாங்க!
ஏத்தர் எனர்ஜி (Ather Energy), இந்தியாவில் எலக்ட்ரிக் 2-வீலர்களை விற்பனை செய்து மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கும் நிறுவனம். பெங்களூருவில் தலைமையகத்தை கொண்டிருப்பினும் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் தொழிற்சாலை நமது தமிழ்நாட்டில் ஓசூரில் தான் செயல்படுகிறது. இங்கிருந்துதான் ஏத்தர் எலக்ட்ரிக் 2-வீலர்கள் (Electric 2-Wheelers) இந்தியா முழுவதும் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்தியாவில் மட்டுமின்றி, ஓசூரில் உற்பத்தி செய்யப்படும் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) வெளிநாடுகளுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதால், குறிப்பாக இலங்கையில் தனது நெட்வொர்க்கை விரிவுப்படுத்துவதில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தீவிரமாக உள்ளது. அந்த வகையில், தற்போது இலங்கையில் மேலும் ஒரு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஏத்தர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவை தாண்டி முதல் வெளிநாடாக நேபாளத்தில் தனது மார்க்கெட்டை விரிவுப்படுத்திய ஏத்தர் எனர்ஜி நிறுவனம், அதற்கடுத்து 2வது வெளிநாட்டு சந்தையாக இலங்கையில் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்தது. கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இலங்கை (Sri Lanka) 2-வீலர் மார்க்கெட்டில் நுழைந்த ஏத்தர் எனர்ஜி நிறுவனம் முதலாவதாக அதன் '450எக்ஸ்' எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.
அந்த 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் தற்போது 2025ஆம் ஆண்டிற்கான அப்டேட்கள் உடன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது, இலங்கையில் ஏத்தர் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு கிடைத்துவரும் வரவேற்பை காட்டுகிறது. மேலும் இதனாலேயே இலங்கையில் தனது ஷோரூம் (Showroom) நெட்வொர்க்கை விரிவுப்படுத்துவதில் தீவிரமாக இருக்கும் ஏத்தர் நிறுவனம் இலங்கையில் இதுவரையில் 19 எக்ஸ்பிரீயன்ஸ் செண்டர்களை திறந்துள்ளது.

இந்த எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்கள் தான் ஏத்தர் வாகனங்கள் விற்பனை செய்யப்படும் ஷோரூம்களாக செயல்படுகின்றன. இலங்கையில் 'எவால்யூஷன் ஆட்டோ பிரைவேட் லிமிடெட்' (Evolution Auto Pvt. Ltd) என்கிற நிறுவனத்துடன் இணைந்து ஏத்தர் எனர்ஜி செயல்பட்டு வருகிறது. இந்த ஸ்ரீலங்கன் நிறுவனத்துடன் இணைந்து ஷோரூம்களை திறப்பது மட்டுமின்றி, இலங்கையில் இவி சார்ஜிங் நெட்வொர்க்கையும் ஏத்தர் ஏற்படுத்தி வருகிறது.
2025 ஏத்தர் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றி பார்த்தோமேயானால், 2025ஆம் ஆண்டிற்கான அப்டேட்டாக இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் மழை, சாலை மற்றும் ராலி உள்ளிட்ட ரைடு மோட்களை வழங்கக்கூடிய மல்டி-மோட் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் (Traction Control System) வழங்கப்பட்டு உள்ளது.
இந்த ரைடு மோட்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான சூழலில் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இயக்க உதவும். இதுமட்டுமின்றி, செயல்படுதிறன் மிக்க எம்.ஆர்.எஃப் (MRF) டயர்கள் பொருத்தப்பட்டுள்ளதால், ஸ்கூட்டரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அது ஸ்கூட்டரை இயக்கி செல்லும் தூரமும் அதிகரித்து உள்ளது.
இவ்வாறு இலங்கையில் தனது மார்க்கெட்டை விரிவுப்படுத்தினாலும், ஏத்தர் நிறுவனம் தனது ரிஸ்டா (Rizta) என்கிற விலை குறைவான எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்யவில்லை. ஏத்தர் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சமீபத்தில்தான் நேபாளத்தில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதால், இலங்கையில் விரைவில் அறிமுகம் செய்யப்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏத்தர் நிறுவனம் இந்தியாவை தாண்டி முதல் வெளிநாடாக நேபாளத்தில் மார்க்கெட்டை விரிவுப்படுத்தினாலும் இலங்கையில் தான் ஏத்தரின் மார்க்கெட் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. இதற்கு சாட்சியாகவே, ஒரே வருடத்தில் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இலங்கையில் அப்கிரேட் செய்யப்பட்டு உள்ளது. இலங்கையில் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டால் ஏத்தரின் விற்பனை இலங்கையில் இன்னும் உச்சத்திற்கு சென்றுவிடும்.


Click it and Unblock the Notifications








